Published:Updated:

`வெளியிலிருந்து அறிவுரை சொல்வதா?!..' - சென்னையில் கொதித்த கோலி #INDvWI

மைதானத்துக்கு வெளியே டிவி பார்த்துக்கொண்டிருப்பவர்கள் முடிவெடுக்கக் கூடாது என ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி நிர்ணயித்த இலக்கை, 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், ஹெட்மெயர் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவிருக்கிறது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா
விராட் கோலி, ரோஹித் ஷர்மா

இந்திய அணி பேட் செய்துகொண்டிருந்தபோது 48வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட் செய்யப்பட்டார். ஒரு ரன் எடுக்க அவர் ஓடியபோது, எல்லையிலிருந்து கீமோ பால் செய்த த்ரோ ஸ்டம்பைப் பதம் பார்த்தது. முதலில் கள நடுவர் ஷான் ஜார்ஜ், இதை அவுட் இல்லை என்று கூறி அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துவிட்டார். சிறிதுநேரத்தில், டிவி ரீப்ளையில், ஜடேஜா ரன் அவுட் ஆனது தெரியவந்தது. இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், கள நடுவர் ஷான் ஜார்ஜிடம் முறையிடவே, அவர் மூன்றாவது நடுவர் முடிவுக்கு விட்டார். அதன்பின்னர், ஜடேஜா அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டு வெளியேறினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

`விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்ற பந்து?!' - சேப்பாக்கத்தில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

போட்டிக்குப் பின் பேசிய விராட் கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த கோலி, ``அந்த ரன் அவுட்டின் போது ஃபீல்டர் அவுட் கேட்டார். ஆனால், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அத்தோடு அந்த அவுட் விவகாரம் முடிந்தது. வெளியே டிவி முன் அமர்ந்துகொண்டு, (போட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்) என்ன செய்ய வேண்டும் என ஃபீல்டர்களுக்கு அந்த அவுட்டை ரிவ்யூ செய்யும்படி அறிவுரை சொல்ல முடியாது.

விராட் கோலி, தீபக் சஹார்
விராட் கோலி, தீபக் சஹார்

மேலும், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதை நான் பார்த்ததில்லை. விதிகள் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து போட்டி ரெஃப்ரியும் நடுவர்களும் மீண்டும் ஆய்வு செய்து, கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். களத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை வெளியே அமர்ந்திருப்பவர்கள் சொல்லக் கூடாது. ஆனால், அதுதான் நடந்தது'' என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கைப் பாராட்டிய கோலி, ``இன்றைய போட்டியில் நானும் ரோஹித்தும் சரியாக விளையாடாதது, இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்லோ பிட்சில் அவர்கள் திறமையாக விளையாடினர். 6 பௌலர்கள் போதுமானது என்று நாங்கள் நினைத்தோம். குறிப்பாக இதுபோன்ற மெதுவான ஆடுகளத்தில் கேதர் ஜாதவையும் ஒரு பௌலராகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால், நடந்ததோ வேறு. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். ஹெட்மெயர் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் பேட்டிங் சிறப்பானதாக இருந்தது'' என்றார்.

ஹெட்மெயர் - ஷாய் ஹோப்
ஹெட்மெயர் - ஷாய் ஹோப்

அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டிடமும் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், ``என்னைப் பொறுத்தவரை இறுதியில் சரியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் முக்கியம். நாங்கள் முதலில் அப்பீல் செய்தபோது நடுவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இறுதியில் சரியான முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.