Published:Updated:

`கோலியின் நோட்புக் செலிபிரேஷன்; பவுண்டரியை ஈடுகட்டிய எக்ஸ்ட்ராஸ்!' - #INDvWI சுவாரஸ்யங்கள்

கோலியின் நோட் புக் செலிபிரேஷன்
கோலியின் நோட் புக் செலிபிரேஷன் ( ICC )

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச முடிவுசெய்தார். இதையடுத்துக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த இலக்கை 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. கேப்டன் கோலி, 94 ரன்களும் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 62 ரன்களும் எடுத்தனர். 94 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர்
விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர்
BCCI

இந்திய அணி சேஸ் செய்தபோது, ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை விரைவாகவே இழந்தது. அதன்பின்னர் களமிறங்கிய கோலி, தொடக்கத்தில் நிறையவே தடுமாறினார். அவரது வழக்கமான ஸ்டைலும் மிஸ்ஸானதாகத் தோன்றியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட கோலி, ஆட்டத்தின் போக்கை தனது வழக்கமான பாணிக்கு மாற்றினார். அதன்பின்னர், இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது. குறிப்பாக, 16-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு விளாசிய கோலி, வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். `நோட் புக் செலிபிரேஷன்' என்றழைக்கப்படும் அந்தக் கொண்டாட்டம், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸின் கெஸ்ரிக் வில்லியம்ஸின் பேவரைட் கொண்டாட்டமாகும்.

தனது பந்துவீச்சில் பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும்போது, நோட் புக்கை எடுத்து அவரது பெயரை அழித்துவிடுவது போன்ற கொண்டாட்டத்தில் வில்லியம்ஸ் ஈடுபடுவதுண்டு. நேற்றைய போட்டியில், அவரது பாணியிலேயே பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி, `நோட்புக் செலிபிரேஷன்' செய்துகாட்டினார். இதைப் பார்த்த வில்லியம்ஸ் மெலிதாகப் புன்னகைத்தார். போட்டி முடிந்தபின்னர், இதுகுறித்து விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கோலியின் நோட் புக் செலிபிரேஷன்
கோலியின் நோட் புக் செலிபிரேஷன்
ICC

அப்போது பேசிய கோலி, ``ஜமைக்காவில் என்னை ஆட்டமிழக்கச் செய்தபோது, வில்லியம்ஸ் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். எனவே, நான் அதை நினைவில் வைத்துக் கொண்டேன். பின்னர், நானும் அவரும் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டோம். முடிந்தவரை கடினமாக முயற்சிசெய்து விளையாடுங்கள். ஆனால், எதிரணிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

போட்டிகுறித்து மேலும் பேசிய அவர், ``எனது ஆட்டத்தைப் பார்க்கும் இளம் பேட்ஸ்மேன்களுக்கு நான் சொல்வது, எனது முதல் பாதி ஆட்டத்தைப் பார்க்காதீர்கள். அந்த நேரத்தில் மிகவும் மோசமாக பேட் செய்துகொண்டிருந்தேன். கே.எல்.ராகுலுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன்.

ஆனால், நான் நினைத்தபடி அப்போது அமையவில்லை. அதிர்ஷ்டவசமாக, ஹோல்டர் வீசிய ஒரு ஓவரில் சுதாரித்துக் கொண்டேன். அதன்பின்னரே, எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதை அலசத் தொடங்கினேன். அதன்பின்னர், எனது பேட்டிங் ஸ்டைலை நான் மாற்றினேன்'' என்றார்.

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பவுண்டரிகள் மூலம் குறைவான ரன்களைக் குவித்த அணி வெற்றிபெறுவது எப்போதாவது அரிதாக நிகழும். அந்த அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுண்டரிகள் மூலம் 134 ரன்கள் குவித்தது. இந்திய அணியோ, அதன்மூலம் 120 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதேநேரம், எக்ஸ்ட்ராஸ் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்களை வாரி வழங்கியது. அதேபோல், நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதுவென்ற விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மேன் ஆஃப் தி மேட்ச் வென்ற ஆப்கானிஸ்தானின் முகமது நபி சாதனையை சமன்செய்தார். 75 போட்டிகளில் 12 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார். அதேநேரம், இந்தச் சாதனையை விராட் கோலி, 73 போட்டிகளில் படைத்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு