Published:Updated:

"ஒரே நாளில் 16 உலக சாதனைகள்'' - திருநெல்வேலி சிறுமி சாதனை!

நீச்சலில்14 உலக சாதனைகள், யோகாவில் 2 உலக சாதனைகள் என ஒரே நாளில் 16 உலக சாதனைகளைத் தன்வசப்படுத்தியிருக்கிறார்.

பிரிஷா
பிரிஷா

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். தங்கள் பிள்ளையின் சின்னச்சின்ன வெற்றியைக்கூட கொண்டாட, எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில், பிரிஷாவின் பெற்றோருக்கு இது கொண்டாட்டத் தருணம். ஆம்... அவர்களின் மகள், நீச்சலில்14 உலக சாதனைகள், யோகாவில் 2 உலக சாதனைகள் என ஒரே நாளில் 16 உலக சாதனைகளைத் தன்வசப்படுத்தியிருக்கிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த சாதனைச் சிறுமி பிரிஷாவிடம் பேசினோம்.

"எனக்கு இப்போ பத்து வயசாகுது. யோகா, நீச்சல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒன்றரை வயசிலேயே நான் யோகா கத்துக்க ஆரம்பிச்சிட்டேனாம். அஞ்சு வயசில் நீச்சல் கத்துக்க ஆரம்பிச்சேன். எங்கம்மாதான் என்னோட குரு. தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சியும், பள்ளி விடுமுறை தினங்களில் நீச்சல் பயிற்சியும் செய்வேன். ஏற்கெனவே, யோகாவிலும் நீச்சலிலும் 15 உலக சாதனைகள் செய்திருக்கேன்" என்ற பிரிஷா, ஜூன் 30-ம் தேதி திருநெல்வேலியில் உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் புதிதாக நிகழ்த்திய 16 உலக சாதனைகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

''முதலில் 10 உலக சாதனைகள் செய்யத்தான் ப்ளான் செய்து பயிற்சி எடுத்திருந்தேன். ஆனா, உலக சாதனை செய்தப்போ கூடுதல் ஆர்வம் வந்து புதிதாக 6 சாதனைகளையும் சேர்த்து செஞ்சுட்டேன். எனக்கு மத்தவங்களோட சாதனைகளை முறியடிப்பதில் விருப்பம் இல்லை. அதனால, நான் இப்போது நிகழ்த்திய சாதனைகள் எல்லாமே என்னோட புது முயற்சிகள்தான்.

பிரிஷா
பிரிஷா

ரெண்டு கால்களையும் மடக்கி நீச்சல் அடிப்பது, தாமரை போன்ற வடிவத்தில் நின்று நீந்துவது, ஒரு காலை மடக்கி பின்புறமாக நீச்சல் அடிப்பது, தண்ணீருக்குள் அமர்ந்து 24 யோகாசனங்கள் செய்வதுனு 14 சாதனைகளை ஒரு மணிநேரத்தில் செஞ்சு முடிச்சேன். தண்ணீருக்கு வெளியே பரிவிருத்த திரிகோணாசனம் மற்றும் ஏக பாத சிரசாசனத்தில் 2 நிமிடங்கள் 9 விநாடிகள் நின்று அடுத்த ரெண்டு சாதனைகளைப் படைச்சேன். என்னோட இந்த சாதனைகள் அனைத்தும் 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பெற்றுள்ளன.

16 உலக சாதனைகளை முடிச்ச பிறகும்கூட என்னோட எனர்ஜி அளவு குறையல. இன்னும் சில சாதனைகள் செய்ய உடலும் மனசும் தயாராதான் இருந்துச்சு. அம்மாதான் போதும்னு சொல்லிட்டாங்க. இப்போ அடுத்தபடியா நான், அம்மா, பாட்டி மூணு பேரும் சேர்ந்து உலக சாதனை செய்ய தயாராகிட்டிருக்கோம்

யோகா
யோகா

இன்னும் அதிக முயற்சிகளுடன் சாதனைகள் தொடரும். படிப்பிலும் நான் கவனமாதான் இருப்பேன்!'' என்கிறார் பிரிஷா.