பொது அறிவு
Published:Updated:

தைவானில் வென்ற தங்கத் தாரகை!

ஜெர்லின் அனிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெர்லின் அனிகா

பேட்மின்டன் பயிற்சிக்கு வரத்தொடங்கியது முதல் ஒருநாள்கூட விடுமுறை எடுத்ததில்லை

‘படி படி’ என்று விரட்டும் பெற்றோர்களுக்கு நடுவே, ராக்கெட்டை கையில் கொடுத்து, ‘அடி அடி’ என்று உத்வேகப்படுத்த, சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் சாதித்துவருகிறார் ஜெர்லின் அனிகா. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜெர்லின், பிறவியிலேயே பேச்சு மற்றும் செவித்திறன் இழந்தவர்.

தந்தை ஜெயரட்சகன், ‘‘என் நண்பர்கள் சிலர் பேட்மின்டன் விளையாடுவார்கள். ஒருமுறை அவர்களைப் பார்க்கச் சென்றபோது, ஜெர்லினையும் அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது அவளுக்கு எட்டு வயது. அவர்கள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்த்தவளிடம், ‘நீயும் விளையாடுறியா?’ என்றதுமே கண்களில் மின்னலுடன் தலையாட்டினாள். பயிற்சியாளர் சரவணனிடம் சேர்த்துவிட்டேன். நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் ஜெர்லினை உலக அளவில் சாதிக்கவைத்தது’’ என்று மகளின் தலையைக் கோதிவிடுகிறார்.

சமீபத்தில், தைவான் நாட்டில் நடந்த ‘சர்வதேச காதுகேளாதோர் யூத் பேட்மின்டன்’ போட்டியின் சாம்பியன் ஜெர்லின்.

‘‘பேட்மின்டன் பயிற்சிக்கு வரத்தொடங்கியது முதல் ஒருநாள்கூட விடுமுறை எடுத்ததில்லை. உடல்நிலை சரியில்லை என்றாலும், சரியான நேரத்துக்கு வந்து உட்கார்ந்துவிடுவார். அந்த அளவுக்கு பேட்மின்ட்டனை நேசித்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார். 2017ஆம் ஆண்டு, துருக்கியில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின் பேட்மின்டன் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்றார். சென்ற வருடம், ஆசிய பசிபிக் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றார். இப்போது, தைவான் நாட்டில் நடந்த ‘சர்வதேச காதுகேளாதோர் யூத் பேட்மின்டன்’ போட்டியின் நாயகி’’ என்கிறார், ஜெர்லினின் இணைப் பயிற்சியாளர் நவீன்.

தைவானில் வென்ற தங்கத் தாரகை!

‘‘அந்தச் சர்வதேசப் போட்டியில் பதற்றமாக இருந்தாலும், ஜெர்லினின் தன்னம்பிக்கை குறையவில்லை. சாம்பியன் பட்டத்துடன் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் முதல் இடத்தில் வென்றவர்களின் நாட்டு தேசியகீதத்தை இசைத்து, தேசியக்கொடி ஏற்றப்படும். ஜெர்லின் பெற்ற வெற்றியின் காரணமாக , நம் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது நாங்கள் அனுபவித்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை’’ என்று நெகிழ்கிறார் ஜெர்லினின் தந்தை.

‘‘இந்த வெற்றிக்கு ஜெர்லின் படிக்கும் அரசுப் பள்ளிக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். மதுரை, அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கிறார். பள்ளியின் ஆசிரியர்கள், சக நண்பர்கள் கொடுத்த ஊக்கம்தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. ஜெர்லின் விளையாடும் சர்வதேசப் போட்டிகளுக்கான பயணச் செலவுகளை அரசு விளையாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டது. மற்ற செலவுகளுக்குக் கடன் வாங்கி, நண்பர்களிடம் உதவிபெற்றே சமாளிக்கிறோம். ஜெர்லினுக்கு இதுவரை அரசு பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லை. அதை அறிவித்து அளித்தால் மேலும் உதவியாக இருக்கும்’’ என்கிறார் இணைப் பயிற்சியாளர் நவீன்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ஜெர்லின், விடைபெறும்போது புன்னகையுடன் கை கொடுத்தார். அந்தக் கைகுலுக்கலில் வெற்றியின் மீதான உறுதி தெரிந்தது.