கட்டுரைகள்
Published:Updated:

ஸ்போர்ட்ஸ் ஸ்பாட் - கபடி

கபடி
பிரீமியம் ஸ்டோரி
News
கபடி

ஒரு கபடி போட்டி 40 நிமிடங்களில் முடிந்துவிடும். முதல் பாதி 20 நிமிடங்கள்.

‘சடுகுடு’ எனப்படும் கபடி விளையாட்டின் உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி, நமது இந்திய அணி. கிராமத்து இளைஞர்களின் விளையாட்டாக ஆரம்பித்தது. இன்று பெண்களும் அதிகம் விளையாடும் இந்த வீர விளையாட்டு பற்றித் தெரிந்துகொள்வோம்!

வயது மற்றும் எடைப் பிரிவுகளின் அடிப்படையில் கபடி போட்டிகள் வகைப்படுத்தப்படுகின்றன. சர்ஜீவினி, அமர், ஹூட்டுட்டு என்று இந்தியாவில் மூன்று வகையான கபடி விளையாட்டுகள் உள்ளன.

ஸ்போர்ட்ஸ் ஸ்பாட் - கபடி
 • ஒரு கபடி போட்டி 40 நிமிடங்களில் முடிந்துவிடும். முதல் பாதி 20 நிமிடங்கள். பிறகு 5 நிமிட இடைவெளி. இரண்டாம் பாதி 20 நிமிடங்கள் நடைபெறும்.

 • கபடி போட்டியை 6 நடுவர்கள் மேற்பார்வையிடுவார்கள். புள்ளிகளைக் கணக்கிட 3 நடுவர்களும், களத்தில் இரண்டு நடுவர்களும் இருப்பார்கள். கள நடுவர்களை மற்றொரு நடுவர் கண்காணிப்பார்.

 • ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் எதிரணியைவிட அதிகப் புள்ளிகள் பெறவேண்டும். இதற்காக, ஒவ்வோர் அணியும் ரெய்டு (Raid) மற்றும் டிஃபெண்டு (Defend) செய்யவேண்டும்.

ஆடுகளத்தின் அமைப்பு

 • மேடு பள்ளம் இல்லாத சமதரையாக ஆடுகளம் இருக்க வேண்டும். வீரர்கள் கீழே விழுவதும் இழுக்கப்படுவதும் விளையாட்டின் முக்கிய நிகழ்வு. மரத்தூள், மணல், பஞ்சுமெத்தை என்று தரையில் பரப்புவார்கள்.

 • ஆண்களின் கபடி ஆடுகளம் 12.5 மீ x10மீ பரப்புளவு இருக்கும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ பரப்பளவு இருக்கும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும் கோடுகள் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகள் 2 அங்குலம் (5 செ.மீ) இருக்கும்.

ஸ்போர்ட்ஸ் ஸ்பாட் - கபடி

அணி விவரம்

ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால், களத்தில் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே. மீதி ஐவரும் மாற்றுவீரர்கள்.

 • போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் ரெய்டு செய்யும். போட்டியின் இரண்டாம் பாதியில், ரெய்டு செய்யாத மற்றோர் அணிக்கு முதலில் வாய்ப்பு அளிக்கப்படும்.

விளையாட்டு முறை

ரெய்டு செய்ய எதிரணியின் இடத்துக்குச் சென்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களைத் தொட்டுவிட்டு பாதுகாப்புடன் சொந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும். ரெய்டு முடித்துத் திரும்பும் வரை ‘கபடி... கபடி...' என உச்சரித்துக்கொண்டே விளையாட வேண்டும். ரெய்டு செய்யும்போது, எதிரணி டிஃபெண்டு செய்யும். ரெய்டரைச் சொந்த மண்ணுக்குத் திருப்பி அனுப்பாமல் மடக்கிப்பிடித்துவிட்டால், டிஃபெண்டு செய்யும் அணிக்குப் புள்ளிகள் தரப்படும்.

இப்படியாக இரண்டு அணிகளும் மாறி மாறி ரெய்டு செய்யும். குறிப்பிட்ட நேரத்தில், அதிகப் புள்ளிகளைப் பெறும் அணி வெற்றிபெறும்.

ஸ்போர்ட்ஸ் ஸ்பாட் - கபடி

இந்தியாவில் கபடி

 • கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல், கால்பந்துக்கு ஐ.எஸ்.எல் போன்று கபடிக்கு பி.கே.எல் தொடர் நடைபெறுகிறது. ‘ப்ரோ கபடி லீக்' என்றழைக்கப்படும் இந்த லீக் தொடர் மிகவும் பிரபலமானது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 12 அணிகள் இதில் பங்கேற்று விளையாடும்.

 • பாகிஸ்தான், வங்கதேசம், இரான் போன்ற நாடுகளிலும் கபடி பிரபலம். வங்கதேசத்தின் தேசிய விளையாட்டு கபடி.

 • உலக அளவிலான கபடி போட்டிகளை வழிநடத்த சர்வதேச கபடி கூட்டமைப்பு உள்ளது. நம் நாட்டில் இந்தியக் கபடி கூட்டமைப்பு செயல்படுகிறது.

 • ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை என ஆண்கள், பெண்களுக்கான இரு பிரிவுகளில் கபடி போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால், இன்னும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டு அங்கீகரிக்கப்படவில்லை.

 • சர்வதேச கபடி அரங்கில், இந்திய அணியின் ஆதிக்கம்தான். தொடர்ந்து மூன்று முறை உலக சாம்பியன் பட்டம், 7 முறை ஆசியக் கோப்பை சாம்பியன் என அசத்திவருகிறது.

 • பழைமையான விளையாட்டுகளில் ஒன்றான கபடி, கடந்த 50 வருடங்களில் சில மாற்றங்கள் அடைந்துள்ளன. சர்வதேச விளையாட்டு அரங்கிலும் கபடி முக்கிய இடத்தை எட்டியுள்ளது.

கபடி விளையாட நீங்க ரெடியா?