ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

நம்பிகை நட்சத்திரம் !

சுப.தமிழினியன்

உலக அளவிலான ஜூனியர் பேட்மின்ட்டன் போட்டிகளின் தர வரிசைகளில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார், ஆதித்யா ஜோஷி.

ஐந்து வயதில் கையில் பேட்மின்ட்டன் மட்டையைத் தூக்கிய ஆதித்யா, அந்த வயதிலேயே அவரைவிட அதிக வயதுச் சிறுவர்களுடன் போட்டி போட்டுத் திணறடிப்பார். மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் பிறந்த ஆதித்யா, மற்ற சுட்டிகளையும் போல சிறு வயதில் கார்டூன்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்ததில்லை. பேட்மின்ட்டன்... பேட்மின்ட்டன்... தவிர வேறு எதிலும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆதித்யாவின் தந்தை அதுல் ஜோஷி பேட்மின்ட்டன் பயிற்சியாளர் என்பது அவருக்குக் கூடுதலான வசதியாகப் போய்விட்டது.

தந்தை அளித்த தீவிரப் பயிற்சியில் 2011-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த பேட்மின்ட்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

நம்பிகை நட்சத்திரம் !

2013 நவம்பர் மாதம் தர வரிசைப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த ஆதித்யா, அடுத்த இரண்டே மாதங்களில் புலிப் பாய்ச்சலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆண்களுக்கான ஜூனியர் தர வரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்திய பேட்மின்ட்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்த், ''ஆதித்யாவின் விளையாடும் முறையும் சாதனைகளும் அற்புதமாக இருக்கின்றன. தன்னம்பிக்கையே,  அவரை உலக அளவில் சாதனை புரியச் செய்தது'' என்கிறார்.

ஜூனியர் தர வரிசைப் பட்டியலை அடுத்து, உலக பேட்மின்ட்டன் தர வரிசைப் பட்டியலில் ஆதித்யா முதல் இடம் பிடிப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஆதித்யா நிச்சயம் நிறைவேற்றுவார்.