Published:Updated:

சின்னச் சின்னத் தகடுகள் வகை வகையான உருவங்கள் !

சந்தோஷ் குமார் படங்கள் : பா.கார்த்திக்

பிரீமியம் ஸ்டோரி

மாடல்: சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சுட்டிகள்

வணக்கம் நண்பர்களே...

##~##

சென்ற இதழில் வெளியான 'அப்வேர்ட்ஸ்’ விளையாட்டை நண்பர்களுடன் விளையாடினீர்களா? இந்த முறை நாம் பார்க்கப்போகும் விளையாட்டின் பெயர், 'பென்டோமினோஸ்’ (Pentominoes).

இது ஒரு பழமையான கணிதப் புதிர் விளையாட்டு. பென்டோமினோஸில் 12 விளையாட்டுத் தகடுகள் இருக்கும். இவை, ஆங்கில எழுத்துகளான F, I, L, P, N, T, U, V, W, X, Y, Z, ஆகியவற்றின் வடிவங்களில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தகடும் ஐந்து சதுரங்களாக உருவாக்கப்பட்டிருக்கும்.

கடந்த இதழில் வெளியான 'அப்வேர்ட்ஸ்’ விளையாட்டின் மூலம் நிறைய ஆங்கிலச் சொற்களை உருவாக்கி இருப்பீர்கள். இந்த 'பென்டோமினோஸ்’ விளையாட்டின் நோக்கம் மிக எளியது, நமது கற்பனைக்கு அற்புதமாகத் தீனி போடுவது. இதில், கொடுக்கப்பட்டுள்ள 12 தகடுகளை அடிப்படையாக வைத்து, உங்களுக்குப் பிடித்த விதவிதமான உருவங்கள் மற்றும் வடிவங்களை உருவாக்கி மகிழலாம்.

சாதாரண ஒரு காகிதம் கிடைத்தாலே, அதை மடித்து கப்பல், கிளி, விசிறி, பாம்பு என விதவிதமாக உருவாக்குவதில் நீங்கள் எல்லாம் வல்லவர்கள். எனவே, இந்த விளையாட்டில் நீங்கள் உருவாக்க  நினைக்கும் வடிவங்களுக்குப் பஞ்சமே இருக்காது.

நாய், ஆடு, புலி, நரி, ஓநாய், மான், பன்றி, ஆமை, யானை, ஒட்டகச்சிவிங்கி, ஒட்டகம், குதிரை, கங்காரு எனப் பலவகை விலங்குகளை உருவாக்கலாம். வாத்து, கொக்கு, கிளி, புறா, ஆந்தை, சேவல், கோழி, பெங்குவின் போன்ற பறவைகளையும் உருவாக்கலாம்.

சின்னச் சின்னத் தகடுகள் வகை வகையான உருவங்கள் !

மேலும், வீடுகள், சதுரங்க விளையாட்டுக் காய்கள் (ராஜா, ராணி, சிப்பாய்கள்), முகங்கள் (பிள்ளையார், ஆண், பெண்), வாகனங்கள் (ரயில், பஸ்), மரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், கோயில்கள், பள்ளிக்கூடங்கள்... என எண்ணில் அடங்காத வடிவங்களை உருவாக்கலாம்.

இந்த விளையாட்டைத் தனியாகவும் விளையாடி, உங்கள் திறமையைச் சோதித்துப் பார்க்கலாம். இரண்டு பேர் சேர்ந்து விளையாடுவது என்றால், யார் வேகமாக உருவங்களை உருவாக்குவது என்று போட்டி வைத்துக்கொண்டு ஆடலாம். குழுவாகப் பிரிந்தும் 'குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பவர், வெற்றியாளர்’ என்று நிர்ணயித்துக்கொண்டு விளையாடலாம்.  

இந்த விளையாட்டில் 300-க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் அந்தப் புதிரின் விடைகள் (எவ்வாறு செய்வது) என்ற குறிப்புடன் ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நீங்கள் எளிதாக இந்த விளையாட்டைக் கற்றுக்கொள்ளலாம்.

சின்னச் சின்னத் தகடுகள் வகை வகையான உருவங்கள் !

இந்த விளையாட்டின் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ளலாம்? புதிர் விடுத்தல், இடம் சார்ந்த அறிவு, வடிவியல் என்று பலவற்றை இந்த விளையாட்டில் கற்றுக்கொள்ளலாம். இந்தத் தகடுகள் பழக்கமான எழுத்துகள்போல இருப்பதால், சுலபமாக விளையாட முடியும்.

கடந்த சில மாதங்களாக பல சுவாரஸ்யமான விளையாட்டுகளை இந்தத் தொடரின் மூலம் கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் நிறைய விளையாட்டுகள் நீங்கள் விளையாடக் காத்துக்கொண்டிருக்கின்றன நண்பர்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு