Published:Updated:

கிருஷ்ணகிரி மழலையின் ஒலிம்பிக் கனவு - தமிழகத்தில் ஒரு `தங்கல்' மகள்!

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

பாலிவுட்டில் அமீர்கான் நடித்த 'தங்கல்' படம்போல ஸ்வேதாவுக்கு ஆசான் அவரின் தந்தை பவித்ராமன்தான்.

'கைவீசம்மா கைவீசு' என மழலைமொழியில் ரைம்ஸ் சொல்லும் வயதில் சிலம்பம் வீசிப் பல பதக்கங்களையும் பாராட்டுகளையும் சேர்த்திருக்கிறார் 5 வயதான மழலை ஸ்வேதா. பாலிவுட்டில் அமீர்கான் நடித்த 'தங்கல்' படம்போல ஸ்வேதாவுக்கு ஆசான் அவரின் தந்தை பவித்ராமன்தான்.

பதக்கத்துடன் ஸ்வேதா
பதக்கத்துடன் ஸ்வேதா

அவரைச் சந்தித்து பேசினோம். "கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரியில் 'இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி' எனும் பெயரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் குங்ஃபூ, சிலம்பம், வில்வித்தை முதலிய தற்காப்பு கலைகளைப் பயிற்றுவிக்கிறேன். ஆனால், ஸ்வேதாவுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்து, அவள் இத்தனை தூரம் வளர்ச்சி பெற்றது என்பது திட்டமிட்டு நடந்ததல்ல, எதிர்பாராமல் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 4 வயதுக் குழந்தைக்கு என்ன பயிற்சி கொடுப்பது என்றும், அப்பாவே ஆசானாக இருந்து அவளுக்கு இதுபோன்ற சிலம்பப் பயிற்சிகளைக் கற்றுத்தருவது சிரமமாக இருக்கும் என்றும் எண்ணிக்கொண்டு அவளுக்கு நான் பயிற்சிகள் எதுவும் தரவில்லை.

மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க அழைத்துச் செல்லும்போது சில நேரங்களில் ஸ்வேதாவையும் மேகாவையும் (ஸ்வேதாவின் தங்கை) அழைத்துச் செல்வதுண்டு. அப்படி ஒருநாள் அழைத்துச் சென்றபோது ஸ்வேதா அவளாகவே சிலம்பத்தைக் கையில் எடுத்து சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில்தான் நான் இவளுக்கு இதில் ஆர்வம் இருப்பதை உணர்ந்துகொண்டேன் அன்று முதல் பயிற்சியைத் தொடங்கினேன். வீட்டில் பாசமான அப்பா மகளாகவும் பயிற்சியின்போது ஆசானும் மாணவராகவும் சுமார் 8 மாதங்கள் எங்கள் பயணம் சென்றது. சவால் நிறைந்த நாள்கள் என்றுதான் இந்த 8 மாதங்களையும் சொல்ல வேண்டும். ஸ்வேதாவின் பள்ளியிலிருந்தும் சூளகிரி வட்டாட்சியரிடமிருந்தும் நல்ல ஒத்துழைப்பும் பக்கபலமும் கிடைத்ததால்தான் வெறும் 8 மாதத்தில் இப்படியோர் சாதனையாளரை என்னால் உருவாக்க முடிந்தது" என்கிறார்.

தன் தந்தை பவித்ராமனுடன் ஸ்வேதா
தன் தந்தை பவித்ராமனுடன் ஸ்வேதா

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம், ஈரோட்டில் 'உலக சிலம்ப விளையாட்டு சங்கம்' நடத்திய மாநில அளவிலான சிலம்ப போட்டியிலும் முதலிடம். கோவாவில் 'யூத் ஓவர் ஆஃப் கேம்ஸ் அசோசியேஷன்' நடத்திய தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம். சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசையும் தங்க நாணயத்தையும் பெற்றுள்ளார் ஸ்வேதா. 'பிரேவோ இண்டர்நேஷனல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் ' அமைப்பு ஸ்வேதாவின் சாதனையைப் பாராட்டியதோடு இளம் வயதினருக்கான உலக சாதனையாளர் என்ற அங்கீகாரத்தையும் வழங்கிச் சிறப்பித்தது.

தன் மகள் எட்டியிருக்கும் உயரம் பற்றிப் பேசும் பவித்ராமன், "என் மகள் என் தேசத்துக்காகத் தங்கம் வெல்ல வேண்டும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நமது தேசியக் கொடியை உயரத்தில் பறக்க வைக்க வேண்டும், இனி அதற்கான வேலையில் களமிறங்கப்போகிறேன். பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் ரீதியிலான தாக்குதலும் அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில் விருதுக்காக மட்டுமல்ல, வாழ்வதற்காகவே அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் இதுபோன்ற தற்காப்பு கலைகளைச் சொல்லித்தந்து வளர்க்க வேண்டும்" என்றார்.

`தங்கம் வெல்வேன்; புதிய ரெக்கார்டு படைப்பேன்!'- மாற்றுத்திறனாளி வீராங்கனையின் பாரா ஒலிம்பிக் சபதம்

பதக்கங்களைப் புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதாவிடம் பேசினோம், "அப்பாக்கிட்ட அடுத்து குங்ஃபூ, கராத்தே கத்துக்கப்போறேன்" என்று மழலை மாறாமல் கூறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு