Published:Updated:

வயது 6, ஸ்கேட்டிங் அனுபவம் 4 வருடங்கள்... சர்வதேசப் போட்டியில் கலக்கும் கனிஷா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வயது 6, ஸ்கேட்டிங் அனுபவம் 4 வருடங்கள்... சர்வதேசப் போட்டியில் கலக்கும் கனிஷா!
வயது 6, ஸ்கேட்டிங் அனுபவம் 4 வருடங்கள்... சர்வதேசப் போட்டியில் கலக்கும் கனிஷா!

வயது 6, ஸ்கேட்டிங் அனுபவம் 4 வருடங்கள்... சர்வதேசப் போட்டியில் கலக்கும் கனிஷா!

பறக்கக் காத்திருக்கும் சின்னப் பறவையைப் போலக் காத்திருக்கிறார் சுட்டிப் பெண் கனிஷா. அவரின் கால்கள் ஸ்கேட்டிங் சக்கரங்களின் மேல் உறுதியாக நின்றுகொண்டிருந்தன. மாஸ்டர் விசில் ஊதிய அடுத்த நொடி விர்ரென்று விரைகிறார். 

இரண்டாம் வகுப்பு படிக்கும் கனிஷா, தனது இரண்டரை வயதிலிருந்து ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 4 வயதாக இருக்கும்போதே சர்வதேசப் போட்டியில் அசத்தியவர். சேலம், சங்கர் நகரில் வசிக்கும் கனிஷாவின் அம்மா கோகிலாவைச் சந்தித்தேன். ``எல்லா பிள்ளைகளையும் போலத்தான் கனிஷாவும் பயங்கரச் சேட்டைக்காரி. ஆட்டம், பாட்டம்னு ஒரு நிமிஷம்கூட சும்மா இருக்க மாட்டா. படிப்பில் ஆவரேஜ்தான், ஆனா, விளையாட்டுல செம ஆர்வம். ஸ்கேட்டிங்கில் சேர்த்துவிட்டப்ப ஜாலியா பயிற்சி எடுத்தா. ஆனா, போட்டின்னு போகும்போது ரொம்ப பயம். ஏன்னா, மத்தவங்க எல்லாம் பெரிய பசங்களா இருப்பாங்க. இவ ரொம்ப குட்டிப் பொண்ணா இருப்பா. இந்த பயமெல்லாம் ஆரம்பத்துலதான் போகப் போக அவளாகவே மாறிட்டா. இப்போ எல்லாம் எனக்கு முன்னாடி அவ கிளம்பி ரெடியா இருக்கா. இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் மாஸ்டர்தான்" என்ற கோகிலாவின் கழுத்தைக் கட்டிக்கொள்கிறார் கனிஷா. `நீயும் பேசு' என கனிஷாவிடம் அம்மா சொன்னதும் ஒரு நிமிடம் என்ன பேசுவது என யோசித்துவிட்டுப் பேசத்தொடங்குகிறார் கனிஷா. 

``என் பேரு கனிஷா, நாட்ரே டாம் ஹோலி கிராஸ் ஸ்கூலில் (Notre Dame of Holy Cross School) இரண்டாவது படிக்கிறேன். அப்பாதான் என்னை ஸ்கேட்டிங் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. அம்மா சொன்னமாதிரி, பெரிய பசங்களோட போட்டி போட்டு ஜெயிக்க முடியுமான்னு பயமா இருக்கும். அந்த பயத்தோடேயே விளையாடி சாம்பியன் பட்டம் வரைக்கும் வாங்கியிருக்கேன். நான் கலந்துக்கிற எல்லா போட்டியிலேயும் கோல்டு மெடல் வாங்கணும் அதுதான் என் ஆசை. அதுக்காக சூப்பரா ட்ரெயினிங் கொடுக்கிற மாஸ்டருக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் அங்கிள், என் தம்பி என் ஸ்கூல்லதான் யூ.கே.ஜி படிக்கிறான். அவனும் என்கூடவே ஸ்கேட்டிங் கிளாஸ்க்கு வரணும்னு அடம்பிடிக்கிறான்." என்று சொல்லிவிட்டு தம்பியோடு விளையாடச் செல்கிறார் கனிஷா. 

கனிஷாவைப் பற்றி பெருமை பொங்கும் குரலில் பேசத் தொடங்குகிறார் பயிற்சியாளர் மேகலா ராஜேஷ், ``ஜோஷ் குயின் ஹெல்த் அண்ட் ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் கிளப்பை பத்து வருஷமா நடத்திட்டு வருகிறோம். இங்கே பயிற்சிக்கு வருகிறவர்களிலேயே ரொம்ப குட்டிப் பொண்ணு கனிஷாதான். ஆரம்பத்தில், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் வாங்கினாள். அவள் வீட்டு வரவேற்பறை முழுக்க அவள் வாங்கின வெற்றிக் கோப்பைகள் நிரம்பியிருக்கும். கடந்த டிசம்பர் மாதம் நாக்பூரில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு, 4 முதல் 5 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ரிலே ரேஸ் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் 500 மீட்டர் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், 1000 மீட்டர் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். அந்த நாள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது, கனிஷாவின் ஆர்வமும் சோர்வில்லாமல் பயிற்சி எடுத்ததும்தான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம். எதிர்காலத்தில் பெரியவர்களோடு போட்டியிட்டு உலக சாதனை படைப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்கிறார். 

கனிஷாவின் வெற்றிப் பயணம் தொடரட்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு