Published:Updated:

9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம்! ஸ்கேட்டிங்கில் அசத்தும் 5 வயதுச் சிறுவன் தவிஷ்

9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம்! ஸ்கேட்டிங்கில் அசத்தும் 5 வயதுச் சிறுவன் தவிஷ்

அப்போ தவிஷூக்கு 2 அரை வயசுதான். சுத்திலும் 500, 600 பேர் இருந்திருப்பாங்க. அவங்களுக்கு மத்தியில கிரவுண்ட்ல தவிஷ் ஓடினதை எங்களால இப்போதும் மறக்க முடியாது.

9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம்! ஸ்கேட்டிங்கில் அசத்தும் 5 வயதுச் சிறுவன் தவிஷ்

அப்போ தவிஷூக்கு 2 அரை வயசுதான். சுத்திலும் 500, 600 பேர் இருந்திருப்பாங்க. அவங்களுக்கு மத்தியில கிரவுண்ட்ல தவிஷ் ஓடினதை எங்களால இப்போதும் மறக்க முடியாது.

Published:Updated:
9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம்! ஸ்கேட்டிங்கில் அசத்தும் 5 வயதுச் சிறுவன் தவிஷ்

மாலை 6 மணி இருக்கும். சூரியன் மெள்ள மறைய, ஒளி பொருந்தியிருந்த மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இருள் பூச தொடங்கியிருந்த நேரம் அது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த மைதானத்தில் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30 பேரில் நம்மை வெகுவாகக் கவர்ந்தவன் தவிஷ். 5 வயதுச் சுட்டி அவன். ஆனால், ஐம்பூதங்களும் திக்கித்து நிற்கிறது அவன் சாதனை கண்டு. மைதானத்தில் அவன் வயதையொத்த பிள்ளைகள் எல்லோரும் தனியே நின்று உடற்பயிற்சி செய்துகொண்டிருக்க தவிஷ் மட்டும் சீனியர்களோடு ஸ்கேட்டிங் ஓடுதளத்தில் ரேஸ் பயிற்சி செல்லத் தயாராகிக்கொண்டிருந்தான். தன் உடல்வாகிற்கேற்ப கால்களை முன்னும் பின்னும் உந்தித்தள்ளி வேக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் காட்டும் இலக்கின் தொலைவை கால்கள் துல்லியமாகச் சென்றடைகின்றன. தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நமக்கு மட்டுமல்ல, மற்ற பிள்ளைகளோடு வந்திருந்த பெற்றோர்களும் ஆச்சர்யமாகவே பார்க்கிறார்கள். 

``இது ப்ராக்டிஸ் பண்ற இடம்தாங்க. ஆனாலும், அவனைப் பாத்தீங்கள்ல. ஏதோ காம்படிஷன்ல ஓடுற மாதிரி வேக வேகமாப் போயிட்டு இருக்கான். அதுதாங்க அவனோட ஸ்பெஷல். ப்ராக்டிஸ்ல இருந்தாலும் காலில் ஸ்கேட்டிங் ஷூவை மாட்டிட்டா அவனை கையில புடிக்கவே முடியாது. நாம சொன்னா எதுவும் கேட்க மாட்டான். இப்போதைக்கு அவன் கோச் சொல்றது மட்டும்தான் அவன் காதுல விழும்” என்கிறார் தவிஷின் தந்தை சுரேஷ். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கோச் வெங்கட் அங்கு வர அவரிடம் பேசினோம். 

``இப்போதுள்ள சூழல்ல பிள்ளைகளுக்கு விளையாடுறதுக்கான நேரம் குறைஞ்சிட்டே வருது. அதுமட்டுமல்ல, முக்கியமா விளையாடுறதுக்கான கிரவுண்ட் கிடையாது. சென்னைல இருக்கிற ஒரு சில கிரவுண்ட்லயும் கிரிக்கெட் விளையாடுறாங்க. அதனாலதான், சின்னச் சின்ன கிரவுண்ட்லாம் ஸ்கேட்டிங்ல டெவலப் ஆக ஆரம்பிச்சது. நான் எத்தனையோ பசங்களுக்கு ஸ்கேட்டிங் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன். ஆனாலும், அவங்கள்ல தவிஷ் ரொம்பவே வித்தியாசமா இருக்கான். இயல்பாவே அவனுக்கு ஸ்கேட்டிங் நல்லா வருது. அவன்  வயசு குழந்தையா இருக்கும்போது என்கிட்ட வந்தான். அப்போவே அவனோட சுறுசுறுப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அந்த வயசுலயே அவனால என்ன பண்ண முடியுமோ அதைச் செய்தான். ஷூவை மாட்டி விட்டதும் சிட்டா பறக்க ஆரம்பிச்சிட்டான். அதனால, ஸ்கேட்டிங்ல உள்ள சின்னச் சின்ன விஷயங்களை மட்டும் அவனுக்குப் புரியுற மாதிரி சொல்லிக் கொடுத்தேன். பலம் அதிகமா இருக்கிற காலைக்கொண்டு அப்ரோச் ரன் கொடுக்கிறதுக்கு, ஆக்ஸிலரேட் பண்றதுக்கு, நாம சொல்ற கமென்ட்டை உள்வாங்கிக்கிறதுக்கு, ஸ்பீடு டிரெயின் பண்றதுக்குன்னு சில சில நுணுக்கங்களை இம்ப்ரூவ் பண்ணிக்கிறதுக்காகவே டே பை டே அவனைத் தயார் பண்ணினோம். 

அவனோட அப்சர்வேஷனைப் பாத்து நான் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுருக்கேன். கூட ப்ராக்டிஸ் பண்ற பசங்கள்ல இருந்து, நான் சொல்லிக் கொடுக்கிறது, அவன் பேரன்ட்ஸ் சொல்றதுன்னு எல்லா விஷயங்களையும் கவனிக்கிறான். அவன்  வயசுப் பசங்களுக்கு அது ரொம்பவே பெரிய விஷயம்.  ஸ்கேட்டிங் பழகின கொஞ்ச நாள்லயே இன்டர் காம்படிஷனுக்கு அனுப்பினோம். அப்போ தவிஷூக்கு 2 அரை வயசுதான். சுத்திலும் 500, 600 பேர் இருந்திருப்பாங்க. அவங்களுக்கு மத்தியில கிரவுண்ட்ல தவிஷ் ஓடினதை எங்களால இப்போதும் மறக்க முடியாது. அதுல இருந்து இப்போ வரை அண்டர் 6 லதான் அவன் கலந்துக்கிறான். சமீபத்துல நேஷனலுக்காக புனே, இன்டர்நேஷனலுக்காக பாங்காக் வரையிலும் போயிட்டு வந்துட்டான். இதுவரை 9 கோல்டு, 5 சில்வர், 4 வெண்கல மெடலும் வாங்கிட்டான். ஸ்கேட்டிங் ஹைட், வெயிட்டுக்கு அப்பாற்பட்டது. இந்த விளையாட்டல பர்ஃபாமென்ஸ்தான் முக்கியம். ஸ்பீடை மென்டலா உணர்ந்தாதான் இங்க வெற்றி கிடைக்கும். அவன் ஸ்கேட்டிங்கை அளவுக்கு அதிகமா நேசிக்கிறான். அதனால, நிச்சயமா அவன் ஸ்கேட்டிங்கை நிறுத்திட மாட்டான். இன்னும் பல வெற்றிகள் அவனைத் தேடி வரும்” பூரிப்போடு சொல்கிறார் வெங்கட். 

``தவிஷைப் பார்க்க மினி பாடி பில்டர் மாதிரியே இருப்பான். தினமும் காலையில 4 மணிக்கெல்லாம் எழுந்து 5 மணிக்கெல்லாம் ப்ராக்டிஸை ஆரம்பிச்சிடுவான். நானும் என் மனைவி கார்த்திகாவும் வேலைக்குப் போறோம். அதனால, வேலைக்குப் போறதுக்கு முன்னாடியே அவனுக்குத் தேவையானதை எல்லாம் பாத்துப் பாத்துப் பண்ணிடுவோம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாங்க ரெண்டு பேரும் அவன்கிட்ட ஸ்கேட்டிங் பத்தியே பேசிட்டு இருப்போம். நீ விளையாடுறது முக்கியமில்லடா. வின் பண்ணணும். அதுதான் முக்கியம்னு சொல்லிட்டே இருப்போம். அது அவனுக்குள்ள ஏதோ ஒரு கான்ஃபிடன்ட்டைக் கொடுக்குது. இப்போக்கூட அவன்கிட்ட போய் சாக்லேட் வேணுமா இல்ல மெடல் வேணுமான்னு கேட்டா யோசிக்காம மெடல்தான் வேணும்னு சொல்லுவான். அதுதான் எங்களையும் தொடர்ந்து அவனுக்காக ஏதாவது பண்ணணும்ங்கிற தூண்டுதலைக் கொடுக்குது. இப்போ வர்ற 29 ம் தேதி நேஷனலுக்காக பஞ்சாப் போறான். மே மாதம் இந்தோனேசியா போறான். கண்டிப்பா அங்கேயும் போய் ஜெயிச்சிட்டு வருவான்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” மகனின் வெற்றியில் களிப்புற்றிருக்கும் அந்தத் தந்தையின் முகத்தில் அப்படியொரு பிரகாசம். ஸ்கேட்டிங் கிரவுண்ட்டில் விளையாடிக்கொண்டிருந்த தவிஷை அழைத்தோம். ஆனால், அவனோ நம்மிடம் வருவதாகவே தெரியவில்லை. சுரேஷ் அழைத்தபோதுகூட,

``டாடி எனக்கு டைம் இல்ல. என்ன ஃப்ரீயா விடுங்க. நீங்களே அந்த அங்கிள்கிட்ட பேசுங்க. நான் ப்ராக்டிஸ் பண்ணணும். நீங்கதானே சொன்னீங்க. பஞ்சாப்லயும் நீதான் வின் பண்ணணும்னு. அதுக்காகதான் ப்ராக்டிஸ் பண்றேன். ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்கிறான். 

பயிற்சியில் மட்டுமல்ல, பேச்சிலும் அவனிடம் வைராக்கியம் தெரிந்தது. அதுவே அந்தச் சுட்டியைத் தொடர்ந்து வெற்றி பெற வைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு தவிஷை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து கிளம்பினோம். 

வாழ்த்துகள் தவிஷ்.