ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... தேர்வுகள் முடிந்து விடுமுறை உற்சாகத்தில் இருப்பீர்கள். நண்பர்களுடன் விளையாட்டு மைதானம், பூங்கா எனப் பல திட்டங்களைப் போட்டிருப்பீர்கள். கிரிக்கெட், ஃபுட்பால் எனப் பல விளையாட்டுகள் உங்கள் திட்டத்தில் இருக்கும். நன்கு ஓடியாடி விளையாடுங்கள். அதேநேரம், நம் பாரம்பர்யமான விளையாட்டுகளையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை, பொழுதுபோக்கு, உற்சாகம், உடலுக்குச் சுறுசுறுப்பு அளிப்பது மட்டுமன்றி, பல்வேறு குணநலன்களையும் நம்மிடம் உருவாக்கும். அப்படியான நம் பாரம்பர்ய விளையாட்டுகள் சிலவற்றைப் பற்றிய அறிமுகம் இதோ.

கிச்சு கிச்சு தாம்பாளம்

நபர்கள்: 2 பேர்

விளையாடும் முறை: இருவரும் எதிரெதிராய் அமர்ந்து இருவருக்கும் இடையில் மணலைக் குவித்து வைக்க வேண்டும். ஒருவர் தன்னிடமுள்ள சிறு குச்சியை மணலுக்குள் ஒளித்துவைக்க வேண்டும். மற்றவர் எந்த இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது என்பதைத் தன் இரு உள்ளங்கைகளாலும் வைத்துச் சுட்டிக்காட்ட வேண்டும். சரியாகக் காண்பித்தால் அவர் அதுபோல் ஒளித்து வைக்க எதிரிலிருப்பவர் கண்டுபிடிக்க வேண்டும்.

முடிவு: விரும்பும்போது முடித்துக்கொள்ளலாம்.

பயன்:கண்டறியும் ஆற்றல், கூர்ந்து நோக்கும் திறன், சிந்தனையை ஒருமுகப்படுத்தும் பண்பு ஆகியனவற்றை வளர்க்கிறது.

கிட்டிப்புள்

நபர்கள்:  2 முதல் 10 பேர் வரை

விளையாடும் முறை:  சிறு குழி ஒன்றில், புள் எனப்படும் சிறு மரத்துண்டினை வைத்து, கிட்டியால் கெந்திவிட வேண்டும். புள் விழுந்த இடத்துக்குச் சென்று, கிட்டியால் தட்டி எழுப்பி அடிக்க வேண்டும். அது எங்கே போய் விழுகிறதோ அங்கிருந்து மீண்டும் மீண்டும் அடிக்க வேண்டும். இறுதியில், எதிர் அணியினர் புள் கிடந்த இடத்திலிருந்து, கேலியான ஒலி எழுப்பியபடி ஆட்டம் தொடங்கிய இடத்துக்கு வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். முதலில் புள்ளைக் கெந்தும்போது எதிர் அணியினர் புள்ளைப் பிடித்துவிட்டால், கெந்தியவர் ஆட்டம் இழப்பார்.

பயன்கள்: ஊருடன் இணைந்துவாழக் கற்றல், திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

பம்பரம்

நபர்கள்: 2 முதல் 10 பேர்

விளையாடும் முறை: சிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது. இதில், இரண்டு வகை ஆட்டங்கள் உண்டு. வல்லா, காட்டுக்குத்து எனக் குறிப்பிடுவர். வட்டத்துக்குள் பம்பரத்தை வைத்து ஆடுவது, வல்லா. இரு எல்லைக் கோடுகள் வரைந்து, அதற்குள் பம்பரத்தைவிட்டுக் கைகளில் ஏந்தி ஆடுவது ‘காட்டுக்குத்து’ எனப்படும்.

பயன்கள்: தனித்திறன், தன்னம்பிக்கை வளர்கிறது.

அம்பால்

நபர்கள்: 2 முதல் 10 பேர்

விளையாடும் முறை: 7-ம் எண் வடிவக் குச்சியை ஒருவர் இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அதைத் தள்ளிவிட வேண்டும். கீழே விழுந்த அம்பால் குச்சியை மற்றவர்கள் தள்ளிச்செல்ல வேண்டும். தன் குச்சியைத் தள்ளிச்செல்பவர்களைத் தொட்டு ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும். ஆட்டம் இழப்பவர், தன் குச்சியை உயர்த்திப் பிடித்து நிற்க, மீண்டும் மீண்டும் தொடரும். அதற்கு முன்பு, கீழே கிடக்கும் குச்சியை அதற்குரியவன் கையில் எடுத்துக்கொண்டு, ஆட்டம் தொடங்கிய இடத்துக்கு ஓடிவர வேண்டும்.

முடிவு: இரு அணிகளிலும் சமமான வெற்றி கிடைத்ததும் முடித்துக்கொள்வர்.

ஆட்டத்தின் பயன்: மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

கண்ணாமூச்சி

நபர்கள்: 3 முதல் 10 பேர்

விளையாடும் முறை: ஒருவர் கண்ணை மற்றொருவர் பொத்த, பிறர் ஒளிந்துகொள்ள வேண்டும். ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப் பொத்தியிருப்பவரோடு கீழ்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்ததும் கண்ணைத் திறந்துவிட வேண்டும்.

முடிவு: அனைவரையும் கண்டறிந்ததும், ஒரு சுற்று முடிவுக்கு வரும்

பயன்கள்: சிறுவர்களுக்குரிய கண்டறியும் ஆற்றலை வளர்க்கிறது.

உரையாடல்:

கண்ணாமூச்சி காதடைப்பு
உங்க வீட்டுல என்னா சோறு?
நெல்லுச் சோறு
ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா?
எறும்பு உழுந்துது
எடுத்துச் சாப்பிட்டியா, எடுக்காமச் சாப்பிட்டியா?
எடுத்துட்டுச் சாப்பிட்டேன்
காட்டுக்குப் போயி ஒரு சிங்கம், ஒரு புலி,
ஒரு கரடி எல்லாம் புடிச்சிக்கிட்டு வா...

கல்பாரி

நபர்கள்: 5 பேர்

விளையாடும் முறை: ‘பாரி’ என்றால், கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் என்று பொருள். தரையில் செவ்வக வடிவில் கோடு கிழித்து, அதனுள் குறுக்கு நெடுக்காக இரு கோடுகள் அமைக்க வேண்டும். கோடுகள் வெட்டும் இடத்தில் ஒரு சிறு வட்டம் வரைந்து, 4 கற்கள் வைக்கவேண்டும். கட்டத்துக்கு ஒருவர் வீதம் 4 பேர் நிற்க, நடுக்கோட்டில் ஒருவர் நிற்க வேண்டும். கட்டத்துக்குள் இருப்போர் கற்களை எடுத்துச்சென்றுவிடாமல் காவல் காக்கும் விளையாட்டு. காவலாளியிடம் அடிபடாமல் கற்களை எடுத்துவிட்டால், வென்றதாகப் பொருள்.

முடிவு: அனைவரும் ஆட்டம் இழக்கும்போது முடிவுக்கு வரும்.

பயன்கள்: உழைத்துப் பொருளீட்ட வேண்டும், ஈட்டிய பொருளில் தேவை போக, எஞ்சியதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்ற குணத்தைச் சொல்கிறது.

சில்லி

நபர்கள்: இருவர்

விளையாடும் முறை: இருவர் சேர்ந்து ஆடுவதால், தலா 5 கட்டங்களை நிலத்தில் வரைய வேண்டும். உடைந்த மண் பானைத் துண்டுகளைச் சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீச வேண்டும். ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்துக்குள் இருக்கும் சில்லியை மிதித்து, அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ள வேண்டும். அதுபோல, ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர். நான்கு சுற்றுகளை வெற்றிகரமாக முடித்தால், ஒரு பழம் பழுத்ததாகக் கூறுவர். கடைசி நான்காவது கட்டத்தில், ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர், ஆட்டத்தில் வெற்றிபெறுவார்.

முடிவு: ஒருவர் வெற்றி பெற்றால், ஓர் ஆட்டம் முடியும். இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வர்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே ஏற்படுத்துகிறது.

ஓரி

நபர்கள்: 5 முதல் 10 பேர்

விளையாடும் முறை: நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல, நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்க வேண்டும். ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்...

ஆத்துல கெண்ட புடிச்சேன்
எல்லாருக்கும் குடுதந்தேன்
எங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே!

முடிவு: உடல் சோர்வுறும்போது முடியும்.

பயன்கள்: நீச்சலை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். யூகித்து அறியும் ஆற்றல் வளரும்.

சடுகுடு

நபர்கள்: 10 முதல் 20 பேர்

விளையாடும் முறை: தமிழர்களின் வீர விளையாட்டு. செவ்வகக் கட்டத்தில் இரு அணிகளுக்கும் தனித்தனி இடம் பிரிக்கப்படும். ஒருவர், எதிரணியின் எல்லைக்குள் சென்று ஆடுதல், அங்கே உள்ளவர்களைத் தொட்டு ஆட்டம் இழக்கச் செய்தல், பிடிக்க வருபவர்களிடமிருந்து மீளுதல்.

முடிவு: தொடங்கும்போதே எத்தனை ஆட்டம் என்று முடிவுசெய்து விளையாடுவர். நான்கு முறை விளையாடியதும் முடிப்பது வழக்கம்.

பயன்கள்: வீர உணர்வு வளரும். சவால்களை எதிர்கொள்ளக் கற்பிக்கிறது. தமிழரின் போர் மரபுகளை அறிய உதவுகிறது.

ஆபியம் [பச்சைக் குதிரை]

நபர்கள்: 6 பேர்

விளையாடும் முறை: 6 சிறுவர்கள் சேர்ந்து ஆடும் விளையாட்டு இது. பகல், இரவு என இரு பொழுதுகளிலும் ஆடுவர். ஒருவர் குனிந்து நிற்க, மற்றவர்கள் குனிந்து நிற்பவரின் முதுகில் கை வைத்து ஒரு புறமிருந்து மறுபுறம் தாண்ட வேண்டும். அப்படித் தாண்டும்போது, கால்கள் குனிந்திருப்பவரின் மீது படக் கூடாது, பட்டால் ஆட்டம் இழப்பர்.

முடிவு: அனைவரும் விரும்பும்போது முடித்துக்கொள்வர்.

பயன்கள்: எச்சரிக்கை உணர்வை வளர்க்கும், எதையும் தாங்கும் வலிமையைத் தரும்.

ஆட்டத்தில் பாடப்படும் பாடல்...

ஆபியம்...
மணியாபியம்...
கிருணாபியம்
நாகனார் மண்ணைத்தொடு
ராஜா பின்னால
ஒத குடு!

ஜோடிப் புறா

நபர்கள்: 9 பேர் அதற்குமேல் ஒற்றைப்படையில் எவ்வளவு பேரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விளையாட்டு முறை: ஒரு வட்டம் வரைந்து இருவர் இருவராகக் கை கோத்து நிற்க வேண்டும் 9 பேர் என்றால், இருவர் இருவராக 4 குழுக்களாகப் பிரிந்து கை கோத்ததும், மீதமிருக்கும் ஒருவர், கை கோத்த நிலையில் இருப்பவர்களைத் துரத்த வேண்டும். ஓடுபவர்கள் வட்டத்தினுள் மட்டுமே ஓட வேண்டும். கை கோத்தபடியே ஓடுபவர்களில் யார் தொடப்படுகிறாரோ அவர் பிரிந்துகொள்ள, காலியாக இருப்பவருடன் முதலில் தொட்டவர் கை கோத்துக்கொள்ள வேண்டும். கை கோத்திருப்பதை எடுத்துவிட்டாலோ, எல்லையைவிட்டுத் தாண்டினாலோ ஆட்டம் இழப்பர்

முடிவு:அனைவரும் விரும்பும்போதும் முடித்துக்கொள்ளலாம்.

பயன்கள்: கூட்டுமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டுப் பிரச்னைகளிலிருந்து மீளும்திறன் வளரும்.

குண்டு (கோலி)

விளையாடும் முறை: பேந்தா குண்டு, குழி குண்டு என இரு வகை உண்டு. தரையில் சதுரம் வரைந்து, அதனுள் கோலிக்குண்டை வைத்து ஆடுவது, பேந்தா குண்டு. குழியினுள் அடித்து ஆடுவது, குழிக் குண்டு. பேந்தாவில் இருக்கும் குண்டுகளைக் கையில் இருக்கும் குண்டால் குறி பார்த்து அடித்து வெளியேற்ற வேண்டும். அது எவ்வளவு தூரம் செல்கிறதோ, அங்கிருந்து எதிரணியில் உள்ளவர்கள் கைவிரல்களை மடக்கி, மணிக்கட்டுகளால் அந்தக் குண்டுகளைப் பேந்தாவை நோக்கித் தள்ளிவர வேண்டும். இவ்வாறு மூன்று முறை விளையாடுவது ஓர் ஆட்டம் ஆகும்.

நபர்கள்: எண்ணிக்கை வரையறை இல்லை

முடிவு: மூன்று ஆட்டம் விளையாடியதும் முடிவுபெறும்.

பயன்கள்: பொருள்களைக் கையாளும் திறன், விரல்களை ஒருங்கிணைக்கும் திறன், குறி தவறாமல் அடிக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்தும் பண்பு ஆகியவற்றைப் பெறலாம்.

நாடு பிரித்தல் (அல்லது) கிட்டிப் பிரித்தல்

நபர்கள்: 4 அல்லது அதற்குமேல் எத்தனை பேர் வேண்டுமானாலும்.

விளையாடும் முறை: எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அதற்கேப ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொள்ளும்படி சம அளவு சதுரங்கள் வரைந்துகொள்ளவும். சிறிய அளவு தக்கையான குச்சி ஒன்றையும் எடுத்துக்கொள்ளவும். வரைந்த கட்டங்களை ஆளுக்கொன்றாகப் பிரித்துக்கொண்டு, அவரவர்களுக்குப் பிடித்த நாட்டின் பெயரையோ, காய்கனி பெயரையோ வைத்து அதில் நின்றுகொள்ள வேண்டும். முதலில், குச்சியை யார் போடுவது என்று தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், தன் கையிலிருக்கும் குச்சியை எந்தக் கட்டத்தில் போட விரும்புகிறாரோ, அந்தக் கட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயரைச் சொல்லி, அந்தக் கட்டத்தின் மீது வீச வேண்டும். அந்த நொடியில், அனைவரும் தங்களால் இயன்ற அளவு வெவ்வேறு திசையில் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஓட வேண்டும்.

குச்சி விழுந்த கட்டத்தில் நிற்பவர், குச்சியைத் தன் கையில் எடுத்து, ‘நிற்கலாம்’ அல்லது ‘stop’ என்று கத்தியதும், அனைவரும் நின்றுவிட வேண்டும். அதன்பின், குச்சியைக் கையில் வைத்திருப்பவர் ஓடியவர்களில் யாராவது ஒருவரைக் குறிவைத்து எறிய வேண்டும். எறிந்த குச்சி, நின்றிருப்பவர் மீது பட்டுவிட்டால், அவரது கட்டத்தில் ஒரு மூலையில் ஆரம்பித்து மறு மூலை வரை இயன்ற அளவுக்கு எந்தக் கோணத்திலாவது நிறுத்தாமல் கோடு கிழித்து ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும். பிறகு, இதில் வென்றவர் குச்சி எறிதலை ஆரம்பிக்க வேண்டும்.

குச்சி எறியும் நபர், சொல்லிய பெயர் ஒன்றாகவும், குச்சி விழுந்த இடம் வேறாகவும் இருந்தால், குச்சி எறிந்தவர் ஆட்டம் இழப்பார். அவரது இடத்தைக் குச்சி எறிந்தவர் சொல்லிய இடத்தின் நபர் ஆக்கிரமிக்க வேண்டும்.

குச்சி விழுந்த இடத்தைச் சேர்ந்தவர், ஓடிய நபர்களை நோக்கி வீசும் முன்பு, யார் மீது வீசப்போகிறோம் என்றும் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லிவிட்டு வீசும்போது, அவர்மீது குச்சி படாவிட்டாலோ, வேறு யார் மீதாவது பட்டாலோ, சொல்லில் இருந்த இடத்தைச் சேர்ந்த நபர், குச்சி வீசிய நபரின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யலாம். சொல்லிய நபரைக் குச்சி சரியாகத் தாக்கிவிட்டால், எறிந்தவர் ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆக்கிரமிப்பு செய்யப்பட வேண்டிய இடம் எட்டாத பட்சத்தில், அருகில் இருப்பவர்களிடம் உத்தரவு வாங்கிச்சென்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்யலாம்.

பயன்கள்: சர்வதேச அரசியலில் எல்லைப் பிரச்னைகள்கொண்ட நாடுகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையும். இலக்கு நோக்கி வீசும் ஆற்றல் உண்டாகிறது. கால்களுக்கும் வேகம் தரும் விளையாட்டாக அமைகிறது.

டிக் டிக் டிக்

நபர்கள்:  குறைந்தது இருவர்

விளையாடும் முறை: பிடிப்பவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கேள்வி பதில் முறையிலான விளையாட்டாக அமைந்திட வேண்டும். கேள்வி பதிலும்கூட ராகத்துடன் பாடல்போல இருக்கும். பிடிக்கும் நபர் முதலில் டிக் டிக் என்று சொல்லி ஆரம்பிக்க, பிறகான கேள்வி பதில் ஆரம்பமாகும்.

கே: யாரது? ப: திருடன்
கே: என்ன வேண்டும்? ப: நகை வேண்டும்.
கே: என்ன நகை? ப: கலர் நகை.
கே: என்ன கலர்? ப: சுற்றுப்புறத்தில் என்னென்ன கலர் இருக்கிறதோ அதில் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லியதும், அனைவரும் ஓடிப்போய் அந்த வண்ணத்தைத் தொட வேண்டும்.

முடிவு: வண்ணத்தைத் தொடுவதற்கு முன்பு, பிடிப்பவர் யாரைத் துரத்திப் பிடிக்கிறாரோ அவர் ஆட்டம் இழப்பார். மீண்டும் விளையாட்டை ஆரம்பித்துப் பிடிபட்டவர் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும்.

பயன்கள்: வண்ணங்களை எளிதில் தெரிந்துகொள்ளவும், நினைவில் நிறுத்தவும் உதவும்.

காயே கடுப்பங்காய்

நபர்கள்: 10 பேர்

விளையாடும் முறை: இரு அணிகளாகப் பிரிந்து, எதிரெதிரே அமர்ந்துகொண்டு, கைகளை முதுகுப் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் அணிக்கு ஒரு தலைவர். அவர் அமர்ந்திருப்பவர்களின் பின்னால் நிற்க வேண்டும். ஓர் அணித் தலைவர் ஏதேனும் ஒரு சிறு பொருளைக் கையில் வைத்துக்கொண்டு, பாடல் பாடிக்கொண்டே ஓர் உறுப்பினரின் கைகளில் லாகவமாக ஒளித்து வைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர் யார் கைகளில் பொருள் வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முடிவு: விளையாடும் நபர்கள் விரும்பும்போது முடித்துக்கொள்ளலாம்.

பயன்கள்: குழுவாக இணைந்து செயல்படுதலை மேம்படுத்தும்.

பாடல்:

காயே கடுப்பங்காய்
கஞ்சி வார்த்த நெல்லிக்காய்
உப்பே புளியங்காய்

ஊறுகா போட்ட நெல்லிக்காய்
கள்ளன் வரான் கதவைச் சாத்து
வெள்ளன் வரான் விளக்கேத்து
திடுமுடு திடுமுடு வாய்தா பணம்…

கண்டுபிடி அல்லது கரென்ட் பாஸ்

நபர்கள்: 5 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கை.

விளையாடும் முறை: விளையாடும் நபர்கள் வட்டமாகக் கை கோத்த வண்ணம் அமர்ந்துகொள்ள, இருவர் கண்டுபிடிப்பவராக வட்டத்தினுள் அமர வேண்டும். கை கோத்து அமர்ந்திருப்பவர்கள் கண்டுபிடிப்பவருக்குத் தெரியாத வகையில், விரல்களால் வருடி சமிக்கை (சிக்னல்) செய்ய வேண்டும். சமிக்கை பெற்றவர் தொடர்ந்து மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். கண்டுபிடிப்பவர்கள் கை அசைவுகளை வைத்து யார் சமிக்கை கொடுக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முடிவு: கண்டுபிடிப்பவர் சமிக்கை செய்தவரைக் கண்டுபிடித்ததும், அவரிடத்தில் வந்து அமர்ந்துவிட, விளையாட்டு தொடரும். இனி, பிடிபட்டவர் கண்டுபிடிக்க வேண்டும்.

பயன்கள்: அதீத கவனம் பெறுதல், சுறுசுறுப்புடன் இயங்குதலுக்கான களமாக அமைகிறது.

ராஜா ராணி

நபர்கள்: 5 முதல் 10 நபர்கள்

விளையாட்டு முறை:  விளையாடும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறுசிறு காகிதங்களில் ராஜா(1001), ராணி (500), மந்திரி (300), சேவகன் (200) போலீஸ் (100), திருடன் (0), என மதிப்பெண்ணுடன் எழுதிக்கொள்ளவும்.

மடித்த காகிதங்களைக் குலுக்கிக் கீழே வீசியதும், ஆளுக்கொரு காகிதத்தை எடுக்க வேண்டும். போலீஸ் பெயர் வந்தவர், திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், போலீஸின் மதிப்பு அவருக்கே கிடைக்கும். தவறாகச் சொன்னால், போலீஸ் மதிப்பு திருடனுக்குச் சென்றுவிடும்.

முடிவு: பல சுற்றுகள் முடிவடைந்து அதிக மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளர்

பயன்கள்: என்றைக்கும் திருடர்கள் என்றால் மதிப்பு குறைவுதான் என்ற எண்ணத்தைக் குழந்தைகள் மத்தியில் உளவியல் ரீதியாக விதைக்கலாம்.

அம்புலி

நபர்கள்: இருவர்

விளையாட்டு முறை: குழந்தையைக் காலில் கிடத்தி விளையாட்டுக் காட்டுவதையே ‘அம்புலி’ என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். குழந்தையைப் படத்தில் உள்ளவாறு அமர்த்தி, கீழ்க்காணும் பாடலைப் பாடி, விளையாட்டுக் காட்டுவர். பெரியவர் பாடலைப் பாட, குழந்தையும் பின்பற்றிப் பாடுவதாக விளையாட்டு தொடரும்.

முடிவு: பாடல் முடிய, விளையாட்டும் நிறைவுபெறும்.

பயன்கள்: இதன்மூலம் குழந்தைகளின் கேட்கும் திறனும் பேசும் திறனும் அதிகரிக்கிறது.

அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு
ஏன் போன?
குச்சி ஒடிக்க
ஏன் குச்சி?
குழி தோண்ட
ஏன் குழி?
பணம் பொதைக்க
ஏன் பணம்?
மாடு வாங்க
ஏன் மாடு?
சாணி போட
ஏன் சாணி?
வீடு மொழுவ
ஏன் வீடு?
பிள்ளைகள் வளர
ஏன் பிள்ளைகள்?
ஆத்து மணலுல... அஞ்சி வெளையாட...
கோரப்பாயில... கொஞ்சி வெளையாட...

குலை குலையா முந்திரிக்காய்

நபர்கள்: 10 பேர்

விளையாடும் முறை: அனைவரும் வட்டவடிவில் அமர்ந்திருக்க, ஒருவர் மட்டும் கையில் வைத்திருக்கும் துணியைச் சுழற்றியவாறு வட்டத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடியபடி ஓட வேண்டும். பிறகு, அமர்ந்திருப்போரில் யாரேனும் ஒருவர் பின்னே துணியைப் போட்டுவிட்டு ஓட வேண்டும். துணி யாருக்குப் பின்னால் கிடக்கிறதோ, அவர் எழுந்து துணியைப் போட்டவரைப் பிடிக்க வேண்டும் அல்லது, இவர் வேறொருவர் பின்னால் துணியைப் போட, ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

முடிவு:விரும்பும்போது முடித்துக்கொள்ளலாம்.

பயன்கள்: கை, கால், மூட்டு மற்றும் உடல் வலுப்பெறும். .

பாடல்:

குலை குலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி!

ஏழாங்காய்

நபர்கள்: இருவர்

விளையாடும் முறை: சிறுமியர் ஆடுவது. ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால், இந்தப் பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு, மற்ற காய்களைச் சிதறவிடுவர். கையிலிருக்கும் காயை மேலேவிட்டு, கீழிருக்கும் காயை எடுத்தவாறு, மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.

முடிவு: இருவரும் விரும்பும்போது முடிவுக்கு வரும்.

பயன்கள்: கை, வாய், கண் ஆகிய முப்புலன்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் ஆற்றல் வளர்கிறது.

பாடல்:

ஆலெல பொறுக்கி
அரசெல பொறுக்கி
கிண்ணம் பொறுக்கி
கீரிப்புள்ள தாச்சி
தாச்சின்னா தாச்சி
மதுர மீனாட்சி!

திம்பி விளையாட்டு

நபர்கள்: இருவர்

விளையாடும் முறை:சிறுமியர் விளையாடுவது. முன்னிரவு நேரத்தில் ஆடுவர்.

பெயர்க் காரணம்: தும்பி சில நேரங்களில் ஓரிடத்திலிருந்து கரகரவெனச் சுற்றும். அதனால், இந்த விளையாட்டு ‘தும்பி சுற்றுதல்’ என்று சூட்டப்பட்டு, ‘திம்பி சுற்றுதல்’ எனத் திரிந்திருக்கலாம்.

முடிவு: இருவருக்கும் உடல் சோர்வு ஏற்படும் வரை விளையாடுவர்.

பயன்: தோழமை உணர்வு, சமுதாயத்தில் இணைந்து செயல்படும் பண்பை வளர்க்கிறது.

திம்பி சுற்றும்போது பாடப்படும் பாடல்கள்...

1. எண்ண இல்ல சீப்பு இல்ல
ஊதா பொடவ இல்ல
உன்னக் கூட நான் வல்ல

2. நீயும் நானும் சோடி
நெல்லு குத்த வாடி
ஆத்து மணல அள்ளிபோட்டு
அவுலு இடிக்க வாடி

பூப்பறிக்க வருகிறோம்

நபர்கள்: 10 அல்லது அதற்கு மேல் சமமாக இரு குழுக்களாகப் பிரிக்கும் அளவுக்கான நபர்கள்.

விளையாடும் முறை: சம எண்ணிக்கையிலான இரு குழுக்களாகப் பிரிந்து விளையாட வேண்டும். விளையாடுவதற்கு முன்பு, ஒரு குழுவில் விளையாடுபவர்களுக்கு ஏதாவதொரு பூ பெயரை வைக்க வேண்டும். மற்றொரு குழுவில் உள்ள அனைவருக்கும் மாதங்களின் பெயரை வைக்க வேண்டும். பெயர்கள் வைத்ததும் இரு குழுக்களாகப் பிரிந்து, விளையாட்டுக்குரிய பிரத்தியேக பாடலை அனைவரும் சேர்ந்து பாடியவாறு விளையாட வேண்டும்.

பாடல்:

குழு 1: பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்

குழு 2: பூப்பறிக்க வருகிறீர் வருகிறீர் எந்த மாதத்தில்?

குழு 1: பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்....................... (எந்த மாதம் தேவையோ அதைச் சொல்ல வேண்டும்) மாதத்தில்

குழு 2: அந்தப்பூவை பறிக்காதீர் பறிக்காதீர் இந்த மாதத்தில்

குழு 1: பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் ............... (வேறு மாதம் சொல்ல வேண்டும்) மாதத்தில்

குழு 2: என்ன பூவை பறிக்க வருகிறீர் வருகிறீர் இந்த மாதத்தில்?

குழு 1: ................ (எந்தப் பூ தேவையோ அந்தப் பூவின் பெயரைச் சொல்லி) பூவை பறிக்க வருகிறோம் வருகிறோம் இந்த மாதத்தில்

குழு 2: அந்தப் பூவை பறித்துக்கொள்ளுங்கள் இந்த மாதத்தில்

என்று முடியும்போது, இறுதியாக வந்த மாதம் மற்றும் பூவின் பெயர்களைக்கொண்ட நபர்கள் முன்னால் வந்து கை நீட்ட வேண்டும். மற்றவர்கள், அவருக்கு ஆதாரமாகப் பின்னால் நின்று இழுக்க ஆரம்பிப்பார்கள். அவ்வாறு இழுக்க, ஏதாவது ஒரு குழுவில் இருக்கும் முதல் நபர், மற்றொரு பக்கம் வந்துவிடுவார். அதன்பிறகு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும். இரு குழுக்களுக்கு இடையில், ஒரு சிறிய கோடு இட்டுக்கொண்டு அதைத் தாண்டிவிடாதவாறு விளையாட வேண்டும். ஒரு மாதம் சொல்லும்போது அந்த மாதத்துடன் தொடர்புடைய பூவை மட்டுமே இழுக்க வேண்டும்.

முடிவு:  அனைவரும் எந்தக் குழுவில் இழுக்கப்பட்டு விடுகிறாரோ அந்தக் குழு வெற்றி பெற்றதாகும்.

பயன்கள்: பல பூக்களின் பெயர்களையும் ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த பூக்கள் சிறப்பு பெற்றவை என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

நூற்றுக் குச்சி

நபர்கள்:  குறைந்தது இருவர்

விளையாடும் முறை: 10 சிறிய தென்னங்கீற்றுக்குச்சிகள் மற்றும் ஒரு பெரிய குச்சியை ஒன்றோடொன்று சிக்கலாக இருக்கும் அளவுக்குக் கீழே போட்டுவிட்டு, ஒவ்வொரு குச்சியாகச் சிணுங்காமல் ஒன்றையொன்று படாமல் ஒவ்வொரு குச்சியாக எடுக்க வேண்டும். ஒரு குச்சியை எடுக்கும்போது, பக்கத்தில் இருக்கும் குச்சியை அசைத்துவிடக் கூடாது. முதல் குச்சியை மட்டும்தான் கையால் எடுக்க வேண்டும். மற்ற குச்சிகளைக் குச்சியைக்கொண்டே எடுக்க வேண்டும். சிறிய குச்சிகளுக்கு 10 மதிப்பெண்ணும் பெரிய குச்சிக்கு 100 மதிப்பெண்ணும் கொடுத்து விளையாட வேண்டும்.

முடிவு: யார் அதிக முறை அனைத்துக் குச்சிகளையும் எடுக்கிறாரோ அவரே வெற்றிபெற்றவர்.

பயன்கள்: அதீத கவனம், கை மற்றும் கண் நரம்புகளுக்கு வலுவாக அமைகிறது இந்த விளையாட்டு.

நிறம் சேர்

நபர்கள்:  2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை.

விளையாடும் முறை: வெவ்வேறு நிறத்திலான உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். தரையில் ஒரு சிறிய வட்டமிட்டு, அதனுள் கண்ணாடித் துண்டுகளைப் பரப்பவும். இரு விரல்களால் ஒரே நிறத்தினாலான துண்டுகளை, மற்ற துண்டுகள் மீது படாமல் எடுக்க வேண்டும். ஒருவர் நிறுத்திய பிறகு மற்றொருவர் என மாற்றி மாற்றி விளையாட வேண்டியதுதான். கண்ணாடித் துண்டுகளைத் தரையுடன் இழுத்த நிலையிலே வட்டத்தைவிட்டுக் கொண்டுவர வேண்டும். ஒரு துண்டுக்கு ஒரு விரலை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

முடிவு:  அதிகமான துண்டுகளை எடுத்தவர் வெற்றியாளர்

பயன்கள்: அதீத கவனம் மற்றும் கை விரல்கள், கண்களுக்கான சிறந்த பயிற்சியாகவும் நிறப்பிரிகை தன்மையை அதிகரிக்கும் விதமாகவும் அமையும்.

கோடையைச் சமாளிக்க...

துள்ளிக் குதித்து வெயிலில் விளையாடச் செல்லும் முன்பு, கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்...

* கோடைக் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 1 முதல் 9 வயது வரையிலான குழந்தைகள், நாள் ஒன்றுக்கு 1.3 - 1.7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 9 முதல் 13 வயது குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சிய நீரைக் குடிப்பதே நல்லது.

* வெயில் காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பது முக்கியம்.

* வியர்க்குருவை நீக்க, பவுடர் அல்லது டால்கம் பவுடரைப் பூச வேண்டாம். அது, வியர்வைச் சுரப்பிக் குழாய்களை அடைத்துக் கொள்ளும்.

* எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்புச் சத்து அதிகமான உணவுகள், இனிப்புகள், க்ரீம் மிகுந்த பேக்கரி அயிட்டங்கள், மசாலா கலந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

* ஜீன்ஸ், ஃபேன்ஸி ஆடைகளைத் தவிருங்கள். காற்றோட்டமான காட்டன் ஆடைகளே நல்லது.

* வெயிலில் விளையாடும்போது எனர்ஜியை இழப்பது, சோர்வு, திடீர் மயக்கம் ஏற்படலாம். இவற்றைத் தடுக்க, தண்ணீரில் சிறிது உப்பு, சர்க்கரை கலந்து அடிக்கடி குடிக்கலாம்.

* நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை `அல்ட்ரா வயலெட் ஏ’ கதிர்கள், சூரிய வெப்பத்தில் வெளிப்படும். இது, சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும். எனவே, இந்த நேரங்களில் வீட்டிலேயே விளையாடுங்கள். காலை 10 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்குப் பிறகும் மைதானம் அல்லது வெளியே சென்று விளையாடுங்கள்.

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:

* உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல பலன்கள் ஏற்படுகின்றன. உற்சாகமாக விளையாடும்போது, ‘எண்டார்ஃபின்’ போன்ற மன மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் நன்றாகச் சுரக்கும்.

* உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும்.

* மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு அதிகரிக்கும்.

முனைவர். ரத்தின புகழேந்தி - மன்னம்பாடி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர். தாம் வாழும் நிலப்பரப்பை எழுத்துகளில் பதிவு செய்து வருபவர். கிராமத்து விளையாட்டுகள் எனும் நூலின் ஆசிரியர்.

‘பல்லாங்குழி’ அமைப்பை நடத்தி வருபவர் இனியன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மாணவர்களுக்குப் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறார்

சுட்டிகள் கோடைக் காலத்தில் விளையாடுவதற்கு முன்பும் விளையாடிய பின்னும் செய்யவேண்டிய நலக் குறிப்புகளை வழங்கியவர் டாக்டர் கண்ணன், குழந்தைகள் நல மருத்துவர்.

தொகுப்பு : வி.எஸ்.சரவணன், வெ.வித்யா காயத்ரி

படங்கள்: தே.சிலம்பரசன், க.சதீஷ்குமார்

மாடல்: அரசினர் உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி-மாணவர்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேல ராதாநல்லூர், திருவாரூர்-மாணவர்கள்.