சுட்டி ஸ்டார் நியூஸ்!
பொது அறிவு
புதிர் பக்கங்கள்
Published:Updated:

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் - டிராவிட் படை வென்றது எப்படி?

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் - டிராவிட் படை வென்றது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் - டிராவிட் படை வென்றது எப்படி?

கவர் ஸ்டோரிமு.பிரதீப் கிருஷ்ணா

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை நான்காவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. ஒரு போட்டியில்கூட தோற்காமல் ஆரம்பம் முதல் இறுதிப் போட்டிவரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் ஆட்டம் டாப் கிளாஸ்!  

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் - டிராவிட் படை வென்றது எப்படி?

‘இவர்கள்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்’ என்று இப்போதே வல்லுநர்கள் புகழ்பாடத் தொடங்கிவிட்டனர். இத்தனை பாராட்டுகளுக்குக் காரணம் என்ன? டிராவிட்டின் படை வென்றது எப்படி?

ஆடிய 6 போட்டிகளிலுமே வெற்றி. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, பாப்புவா நியூ கினியா அணிகளை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் வங்கதேசத்தை 131 ரன்களில் வென்றது. அரையிறுதிப்போட்டியில், 203 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானைப் பந்தாடியது. இறுதிப் போட்டியிலும் சிரமம் இல்லை.       39-வது ஓவரிலியே 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் ஆனது. வெற்றி வித்தியாசங்களைப் பார்க்கும்போது இது மிகவும் எளிதான வெற்றியைப்போலத்தான் தெரியும். ஆனால், இதற்கு இந்திய அணி தயாராகியிருந்த விதம்தான் உலகத்தரம்.

உலக அரங்கில், தேசிய அணிக்காக விளையாடும்போது மிகவும் கட்டுக்கோப்புடன் விளையாட  வேண்டியது அவசியம். பயிற்சியாளர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். ஆனால், இதில் விளையாடும் அனைவருமே 16 முதல் 19 வயதுவரையே நிரம்பிய இளம் வீரர்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரிய நினைக்கும் வயது. பிறரின் ஆலோசனைகளை உதாசீனப் படுத்தவும் தட்டிக்கழிக்கவும் செய்யக்கூடிய பருவம். மீடியா வெளிச்சம் மேலே விழும்போது தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ளத் துடிக்கும். இந்த வயதில் இவற்றையெல்லாம் கடந்து சாதிக்க வேண்டுமெனில் பக்குவம் அடைந்திருக்க வேண்டும். 

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் - டிராவிட் படை வென்றது எப்படி?நம் இந்திய வீரர்கள் நன்றாகவே பக்குவப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அண்டர் 19 அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட். தங்கள் பயிற்சியாளர் சொல்வதைக் கொஞ்சமும் தட்டாமல் பின்பற்றினார்கள் இந்திய வீரர்கள்.

இந்திய அணி பேட்டிங் செய்தபோது, மொத்த ஆஸ்திரேலிய அணியும் பதற்றுத்துடனேதான் விளையாடியது. காரணம், அவர்கள் அடித்திருந்தது வெறும் 216 ரன்கள். குறைந்த ரன்களே எடுத்திருந்ததால், அந்த பிரஷரில் பௌலிங்கின்போது சொதப்பியது ஆஸ்திரேலியா.

இந்தியக் கேப்டன் ப்ரித்வி ஷா பேட்டிங் செய்தபோது, பல ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைச் சீண்டினர். ஒரு 18 வயது இளைஞன் அதுபோன்ற நேரத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்கக்கூடும். ஆனால், ப்ரித்வி ரொம்பவுமே அமைதியாக இருந்தார். டிராவிட் களத்தில் எந்தளவுக்கு அமைதி காப்பாரோ அந்த அளவுக்கு அமைதியைக் கடைப்பிடித்தார்.

சுப்மான் கில், இந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகன், விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் 1 சதம், 3 அரைசதங்கள் உள்பட 372 ரன்கள் குவித்தார். அவர் மட்டுமல்ல, இறுதிப் போட்டியில் சதம் அடித்த மஞ்சோத் கல்ரா, இந்தத் தொடரில் 14 விக்கெட் எடுத்து ‘டாப் விக்கெட் டேக்கரா’க விளங்கிய அனுகுல் ராய் என ஒவ்வொருவருமே டிராவிட் பேச்சைக் கேட்ட ‘நல்ல பிள்ளைகள்’.

“ஐ.பி.எல் ஏலம் நடந்த வாரம் எனக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. எங்கு வீரர்களின் கவனம் சிதைந்துவிடுமோ என்று எண்ணினேன். ஆனால், ஏலம் முடிந்தவுடனே வீரர்கள் அதே உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஏலம் முடிந்த இரண்டாம் நாள், இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டி நடந்தது. பாகிஸ்தான் அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற இஷான் போரெல், ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாதவர்! இந்த முதிர்ச்சி டிராவிட்டை மட்டுமல்ல, மொத்த தேசத்தையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்த அணியிலிருந்தும் பலர் விரைவில் இந்திய அணிக்குத் தேர்வாகலாம். ஏன், இந்த 16 பேருமே ஒருநாள் இந்திய அணிக்கு விளையாடக்கூடும். ஏனெனில், சந்தேகமே இல்லை... இவர்கள் இந்திய கிரிக்கெட்டின் ஜூனியர் சூப்பர் ஸ்டார்கள்!