Published:Updated:

டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்!
டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்!

பு.விவேக் ஆனந்த் - எம்.விஜயகுமார்

பிரீமியம் ஸ்டோரி

.பி.எல் 2017 சீசனுக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். இந்த ஆண்டு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய வீரரே நடராஜன் தான். இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான் என சீனியர் வீரர்களையே யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 வீரராகத் திகழும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீரைக் கூட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இப்படியொரு சூழ்நிலையில்தான் நடராஜனை தங்கள் அணிக்குள் கொண்டுவருவதற்குப் பல அணி உரிமையாளர்களும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபி அணி இவரை மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்!

யார் இந்த நடராஜன்?

சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் டி.நடராஜன். இவரது அப்பா தச்சுத் தொழிலில் கூலி வேலைக்குச் செல்கிறார். அம்மா சாந்தாவோ சாலையோரத்தில் மாலைநேரச் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறார். நடராஜனுக்கு மூன்று தங்கைகளும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள். கூலி வேலை செய்து அப்பா தரும் பணத்திலும், மதியம் முதல் இரவு வரை சாலையோரக்கடையில் கிடைக்கும் அம்மாவின் பணத்திலும்தான் மொத்தக் குடும்பமும் சாப்பிட வேண்டும். இப்படியொரு வறுமையான சூழலில் வளர்ந்தவர் இந்த நடராஜன்.

அவரது பெற்றோருக்கு கிரிக்கெட் அகாடமியில் எல்லாம் சேர்ப்பதற்கு வசதி கிடையாது. பள்ளியில் படித்தபோதும் சரி, கல்லூரியிலும் சரி டென்னிஸ் பாலில்தான் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார் நடராஜன். தன் பதின் பருவத்தில் இருந்தே வேகப்பந்து வீச்சில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் இவர். ஊருக்குள் நடக்கும் சின்னச் சின்ன போட்டிகளில் கூட நடராஜன் அபாரமாக வீசும் பந்துகளை கவனித்தவர்கள் அசந்து போனார்கள். நடராஜனுடன் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த நண்பரான ஜெயபிரகாஷ் என்பவர் தான் இவரது திறமையை அடையாளம் கண்டுகொண்டார்.

டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்!

பண உதவி செய்து சென்னையில் உள்ள கிளப்களில் கிரிக்கெட் ஆட சேர்த்துவிட்டிருக்கிறார். அங்கே இவரது பந்து வீசும் திறமையைப் பார்த்து மிரண்டு போன தமிழக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடனடியாக மாநில அணிக்கு இவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ரஞ்சி கோப்பையில் ஆடும்போது, இவர் பந்து வீசும் முறை விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகச் சொல்லி போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதித்தார்கள் நடுவர்கள். இதையடுத்து மிகவும் சிரமப்பட்டு தனது பந்து வீசும் முறையை மாற்றினார் நடராஜன். கடும் பயிற்சிகள் செய்து பவுலிங்கில் தேர்ச்சி பெற்றார்.

கடந்த வருடம் டி.என்.பி.எல் கிரிக்கெட் நடந்த போது, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடிய இவர், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்குத் தேர்வாகி இருக்கிறார்.   டி.என்.பி.எல் மேட்சுகளில் இவர் வீசிய யார்க்கர் பந்துகள் இவர் எப்பேர்ப்பட்ட பவுலர் என்பதை வெளிஉலகுக்குக் காட்டின. தூத்துக்குடிக்கு எதிரான போட்டி ஒன்றில் சூப்பர் ஓவரில் சிக்கனமாகப் பந்து வீசி அணியை வெற்றி பெற வைத்தார். இவரின் திறமையைக் கண்டுபிடித்த ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் எப்படியாவது அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்தார்கள். இப்படித்தான் பஞ்சாப் அணிக்குள் நுழைந்திருக்கிறார் நடராஜன்.

எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

‘‘ஐ.பி.எல்லில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சிதான், ஆனால் இனிமேல்தான் சிறப்பாக விளையாட வேண்டும். இந்தியாவே உற்றுநோக்கும் போது சிறப்பாக ஆட வேண்டும்; மேலும் இந்திய அணிக்காகவும் கிரிக்கெட் ஆட வேண்டும். கனவுகள் நிறைவேறும் என நினைக்கிறேன். ஏனெனில் என் மேல் நம்பிக்கை இருக்கிறது’’ எனத் தன்னம்பிக்கையோடு தம்ப்ஸ் அப் காட்டினார்

வறுமை என்பது சாதிப்பதற்குத் தடையே இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அதற்கு உதாரணமாக நடராஜன் இருக்கிறார். ஆகவே சுட்டிகள் எந்த நிலையிலும் மனம் தளராமல் உழைத்தால் வெற்றி நிச்சயம். எப்போதும் நம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சித்துக் கொண்டே இருங்கள். வெற்றி உங்களை வந்து சேரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு