Published:Updated:

நீங்களும் ஆகலாம் தோனி!

பு.விவேக் ஆனந்த், அட்டை ஓவியம்: பாலா

பிரீமியம் ஸ்டோரி

கேந்திர சிங் தோனி என்றதும் நினைவுக்கு வருவது அட்டகாசமான அந்த ஹெலிகாப்டர் ஷாட் மட்டும்தானா? இந்திய அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று, உலகக் கோப்பையை வாங்கித்தந்த வெற்றி கேப்டனிடம் இருந்து கிரிக்கெட் தவிர கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படியான அற்புத பண்புகள் 10 இங்கே...

நீங்களும் ஆகலாம் தோனி!

1 தோல்வியில் துவளாதே!

பெற்றோர்களுக்கு சிரமம் தரக் கூடாது என, டிக்கெட் கலெக்டர் வேலைக்குச் சென்றார்.  அப்போதும் தான் உயிராக கருதும்  கிரிக்கெட் மீது கவனமாக இருந்தார்.  கிடைக்கும் சிறிய வாய்ப்புகளிலும் ஸ்கோர் செய்து,  இந்திய அணியில் இடம்பிடித்தார். விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில்  டக் அவுட். எனினும் துவண்டுவிடவில்லை.  சில போட்டிகள் இடைவெளியிலேயே சதம் அடித்து அசத்தினார். கேப்டனாக உயர்ந்தபோதும் தோல்வியில் அணி துவளும்போதெல்லாம் மற்ற வீரர்களை தோனி உற்சாகப்படுத்துவார்.

2  ஈகோ வேண்டாம்!


இந்திய அணியில் நுழைந்த மூன்றே ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பை ஏற்றார் தோனி. கங்குலி, சச்சின், டிராவிட், லட்சுமண் என சீனியர்கள் ஒரு பக்கம். யுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் என சம வயது வீரர்கள் இன்னொரு பக்கம். சீனியர் - ஜூனியர் இடையே பிரச்னை வராமல் வழிநடத்தினார். சீனியர்கள் சொல்வதை ஏற்றார். ஜூனியர்களுக்கும் மதிப்பு கொடுத்தார். வெற்றிக்கு ஈகோ கூடாது என நிரூபித்தார்.

3 தோல்விக்கு பொறுப்பு!

இந்திய அணி எத்தனை முறை தோல்வியடைகிறதோ, அத்தனை முறையும் பொறுப்பேற்று பதில் சொல்லிக்கொண்டிருப்பார் தோனி. இன்னொருவர் மேல் குற்றம் சொல்லாமல், நிகழ்ந்துவிட்ட தவறுக்கு பொறுப்பேற்பதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. அதைத்தான் செய்தார் தோனி. தோல்வியை முழுமையாக ஏற்கும்போதுதான் வெற்றிக்கான வழியை கண்டடைய முடியும். நல்ல தலைவராக மிளிர  இந்தப் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் ஆகலாம் தோனி!

4 அமைதியாக இரு!

பல்லாயிரம் பேர் நம்மை கவனித்துக்கொண்டிருக்க, வெற்றிக்காக  நொடிக்கு நொடிக்கு களத்தில் வியூகங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் இருப்பார் தோனி. பதற்றத்தால் மேலும் தவறுகளே நிகழும். எனவே, கூலாக யோசியுங்கள்; மாற்று வழி கிடைக்கும்.

 5 அனைத்தையும் பழகு!

நீங்கள் எந்தத் துறையில் இருக்கிறீர்களோ, அந்தத் துறையின் அனைத்து வேலைகளையும் கற்றுகொள்ளுங்கள். இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வந்தார் தோனி.  ஒன்டவுன் பேட்ஸ்மேனாக இறங்க ஒரு  அதிரடி வீரர் தேவைப்பட, அந்த இடத்தில் இறங்கினார். கேப்டன் தேவைப்பட்டபோது, அந்த பொறுப்பையும் ஏற்றார். அணிக்கு நல்ல  ஃபினிஷர் தேவைப்பட, யோசிக்காமல் பின்வரிசையில் இறங்கினார். இப்போது, நடுவரிசையில் நிலைத்து ஆடும் வீரர் வேண்டும் என்பதால், அதற்குத் தயாராக இருக்கிறார்.

6 நோக்கத்தில் விலகாதே!

STAY FOCU்SSED எனச் சொல்வார்கள்.  ‘நோக்கத்தின் மீது குறியாக இரு’ என அர்த்தம். வாழ்க்கையில் நீண்டகாலத் திட்டம், குறுகியகாலத் திட்டம் என இரண்டு திட்டங்கள் இருக்க வேண்டும். குறுகியகாலத் திட்டங்களை முறையாக நிறைவேற்றினால், நீண்டகாலத் திட்டம் தானாக நிறைவேறும்.  தோனி இதைத்தான் செய்தார். அவர் எதை விரும்புகிறாரோ, அதை மிகக் கவனமாக,  பொறுப்போடு அணுகினார்.

7 உள்ளுணர்வை உணர்!


ஒரு விஷயத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என கிடையாது. ஏன் இன்னொரு விதமாகச் செய்யக் கூடாது என கேட்டுக்கொள்ளுங்கள். 2007 உலகக் கோப்பை டி20 போட்டி ஃபைனலில் இறுதி ஓவரை யார் வீசுவது என கேள்வி எழுந்தது. எல்லோரும் ஹர்பஜன் சிங் வீசுவார் என நினைத்தனர். தோனியின் உள்ளுணர்வு, வேறு புதியவர் வீசுவது சரி என நினைத்தது.  இளம் வீரர் ஜோகீந்தர் ஷர்மாவை களமிறக்கினார். அந்த உள்ளுணர்வு வியூகம் வெற்றியைத் தந்தது. உங்கள் மனதை முழுமையாக நம்புங்கள்.

நீங்களும் ஆகலாம் தோனி!

8 எதிராளியை மதி!

தோனி எந்த நிலையிலும் எதிர் அணியினரைச் சீண்ட மாட்டார். வலு குறைவான அணிகளோடு மோதும்போது  உரிய மரியாதை கொடுப்பார். நம் எதிராளியிடம் எந்த அளவுக்கு பண்புடன் நடந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு உயர முடியும்.

9 அளவோடு குதூகலி!

ஒரு வெற்றிக்கு பின் தலைவனாக எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக செய்துகாட்டுபவர் நம் தோனி. எந்தக் கோப்பையை ஜெயித்தாலும், சக வீரர்களுக்கு கொடுத்து முன்னால் நிறுத்திவிட்டு பின்வரிசையில் அமைதியுடன் ரசிப்பார்.  உங்கள் வாழ்க்கையிலும் வெற்றி ஏற்படும்போது அகம்பாவம் தலைக்கு ஏறாமல், அளவோடு குதூகலியுங்கள்.

10 ஒருங்கிணைந்து செயல்படு!


நீங்கள் மட்டுமே ஹீரோ என்ற மனநிலையில் செயல்படக் கூடாது. யார் எந்த வேலையை எப்போது சரியாக செய்வார் என அறிந்து அவர்கள் முழுத் திறன்களுக்கும்  அனுமதிக்க வேண்டும். குழுத் தலைவனுக்கு இந்த ஒருங்கிணைப்பு பண்பு மிகவும் அவசியம்.   மற்றவர்களின் சாதனைகளைத் தட்டிக் கொடுத்து பாராட்டும்போது, தலைவனாக மேலும் உயரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு