பொது அறிவு
FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

விளையாட்டு 18

விளையாட்டு 18
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு 18

பு.விவேக் ஆனந்த், தா.ரமேஷ்

ஜிம்னாஸ்டிக்
 ஜிம்னாஸ்டிக் என்பது சர்க்கஸ் அல்ல. டான்ஸ் கற்பவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் உடலை வில்லாக வளைப்பதற்கு ஜிம்னாஸ்டிக் ரொம்பவே கைகொடுக்கிறது. ஜிம்னாஸ்டிக் பயில்வதன் மூலம் உடல் வலிமை, வளைந்து கொடுக்கும் தன்மை, பேலன்ஸ், சுறுசுறுப்பு, பொறுமை, கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் மேம்படும். வால்ட், அன்ஈவன் பார்ஸ், பேலன்ஸ் பீம், ஃப்ளோர் எக்சர்சைஸ் என ஜிம்னாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு.

துப்பாக்கி சுடுதல்
 ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முதலில் தங்கம் கிடைக்க காரணமாக இருந்தது இந்த விளையாட்டுதான். பீஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். ககன் நரங், விஜய்குமார் ஆகியோர் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றனர். ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் அதிகம் பங்கேற்பது துப்பாக்கி சுடுதல் வீரர்கள்தான். துப்பாக்கிச் சுடுதலில் ரைஃபிள், ஷாட்கன், பிஸ்டல் எனப் பல பிரிவுகள் உள்ளன.

கால்பந்து: 
 கால்பந்து விளையாட்டில் பெரும்பாலானோருக்கு புரியாத ஒரு விஷயம், ஆஃப்சைட் விதிமுறை. அதாவது, சக வீரரிடம் இருந்து இன்னொரு வீரர் பந்தை பாஸ் பெறும்போது, எதிர் அணியின் கோல் கீப்பருக்கு முன்னால், அதே அணியின் மற்றொரு வீரர் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பந்தை பாஸ் பெற்றால், அதுவே ஆஃப்சைட்.

விளையாட்டு 18

ஃபுட்சால்:
 ஃபுட்சால் என்று அழைக்கப்படும் ஐந்து வீரர்கள் விளையாடும் கால்பந்து போட்டியில் கால்பந்தின் மிக முக்கியமான, தலையால் பந்தை ஹெட் செய்ய அனுமதி கிடையாது. கால்பந்து விளையாட்டின் முக்கிய விதிமுறையான ஆஃப்சைட் விதிமுறையும் இதற்கு கிடையாது. விளையாடும் மைதானத்தின் அளவு 38 மீட்டரில் இருந்து 42 மீட்டர் வரை. குறுகிய இடைவெளியில் எதிரணி வீரர்களை ஏமாற்றி கோல் அடிப்பது சவாலான விஷயம். மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரொனால்டினோ உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் ஃபுட்சால் விளையாட்டில் ஜொலித்த பின்னரே, சிறந்த கால்பந்து வீரர்களாக ஜொலித்தனர். இப்போது, இந்தியாவிலும் பிரீமியர் ஃபுட்சால் தொடர் நடக்கிறது.

வாலிபால்
 ஓர் அணியில் 6 பேர் விளையாடும் வாலிபால் விளையாட்டில், ரொட்டேஷன் கேம் மிக முக்கியமானது. சர்வீஸ் போட்டு புள்ளி ஈட்டியதும், இந்த விளையாட்டில் ஒவ்வொரு வீரரும் கடிகார வரிசைப்படி தங்கள் பொஸிஷனில் இருந்து அடுத்த பொஸிஷனுக்கு மாறிவிட வேண்டும். தவறான இடத்தில் நின்றாலோ, இடம் மாறவில்லை என்றாலோ, எதிர் அணிக்கு சாதகமாக புள்ளி வழங்கப்படும்.

பீச் வாலிபால்

 பீச் வாலிபால் போட்டியில் ஓர் அணியில் இருவர்தான் இடம் பெற்றிருப்பார்கள். இந்த விளையாட்டில் மாற்று ஆட்டக்காரர் இறங்கவே முடியாது. கடைசி வரை அந்த 2 பேர்தான் விளையாட முடியும். ரொட்டேஷன் எல்லாம் கிடையாது. பிரேசில் போன்ற நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம். மேலைநாடுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பீச் வாலிபால் விளையாட்டில் தூள் கிளப்புவர்.

கூடைப்பந்து

 கூடைப்பந்து விளையாட்டில் ஓர் அணியில் 12 வீரர்கள் இடம்பெறுவார்கள்.  களத்தில் 5 பேர்தான் விளையாடுவார்கள். ஆனால், மாற்று ஆட்டக்கரார்களாக மீதியுள்ள 7 பேரில் இருந்து யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இறக்கிக்கொள்ளலாம். இந்தியாவில் கூடைப்பந்து அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், அமெரிக்காவில் என்.பி.ஏ என்ற பெயரில் நடக்கும் பேஸ்கட் பால் போட்டிகள் ரொம்பவே பிரபலம்.

தடகளம்
 தடகளம்தான் அனைத்து விளையாட்டுகளுக்கும் தாய். அதில் பல பிரிவுகள் இருந்தாலும், ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டம்தான் அல்டிமேட். விளையாட்டுகளிலேயே 100 மீட்டர் ஓட்டத்துக்கான விதிமுறைதான் சிம்பிள். விசில் அடித்ததும் நேராக 100 மீட்டர் தூரம் வேகமாக ஓட வேண்டும். பீஜிங், லண்டன், ரியோ ஆகிய மூன்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பிடித்து ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட்.

செபடாக்ரா
  மூங்கில் பந்தை காலால் உதைத்து விளையாடும் ஒரு வகை விளையாட்டு, செபடாக்ரா (Sepaktakraw). கிட்டத்தட்ட டேபிள் டென்னிஸ் விதிமுறைகள்தான் இதற்கும். மூன்று பேர் விளையாடும் இந்த விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த நித்தியலட்சுமி ஜொலித்து வருகிறார். சமீபத்தில், உலக சாம்பியன்ஷிப்  போட்டியில் பதக்கம் வென்று ஜொலித்தார்.

வாள்வீச்சு
 உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து வாள் கொண்டு சண்டை போடுவது வாள்வீச்சு. இலகு ரக வாள் சண்டை, குத்து வாள் சண்டை, அடி வாள் சண்டை என மூன்று வகைப்படும். அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் போட்டி நீடிக்கும். இலகு ரக போட்டியில் மார்பிலும், அடி வாள் சண்டையில் இடுப்புக்கு மேல் எந்தப் பகுதியிலும் தாக்கலாம். குத்து வாள் சண்டையில் உடலின் எந்தப் பகுதியிலும் தாக்கலாம். போட்டியின் முடிவில் அதிகப் புள்ளி பெறுபவர் அல்லது முதலில் ஐந்து புள்ளிகளைப் பெறுபவர் வெற்றியாளர்.

விளையாட்டு 18

கபடி
 சர்க்கிள் ஃபார்மட், சர்வதேச ஃபார்மட் என இரண்டு முறையில் கபடி விளையாடப்படுகிறது. பஞ்சாப் ஸ்டைல் அல்லது சர்க்கிள் ஃபார்மட் என சொல்லப்படும் கபடியில், மைதானம் வட்ட வடிவில் இருக்கும். சர்வதேச ஃபார்மட்டில் செவ்வக வடிவில் மைதானம் இருக்கும். இரண்டிலும் வெவ்வேறு விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கபடி உலகக் கோப்பை, ப்ரோ கபடி உள்ளிட்டவை, சர்வதேச ஃபார்மட்டில் நடத்தப்படுகின்றன.

கிரிக்கெட்

 எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாவது கிரிக்கெட்டில் சகஜம். 1774-ம் ஆண்டு முதல் இந்த விதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, லெக் ஸ்டம்புக்குள் பந்து பிட்சாகி, ஸ்டம்புகளை தாக்கும் வண்ணம் வர... அதனை பேட்ஸ்மேன் கால்களால் தடுத்தால், எல்.பி.டபிள்யூ. ஒருவேளை லெக் ஸ்டம்புக்கு வெளி லைனில் பந்து விழுந்து ஸ்டம்ப்புகளைத் தாக்கும் வண்ணம் வர, அதனை பேட்ஸ்மேன் தடுத்தால், நாட் அவுட்.

டென்னிஸ்
 ஷேக்ஸ்பியர் காலத்திலேயே டென்னிஸ் இருந்துள்ளது. ‘ஹென்றி வி’ எனும் வரலாற்று நாடகத்தில் டென்னிஸ் பந்தைக் குறித்து எழுதி இருக்கிறார் ஷேக்ஸ்பியர். தற்போது, டென்னிஸ் பந்து ஃப்ளோராசன்ட் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. வெகு சில இடங்களில் வெள்ளை நிறத்திலும் தயாரிக்கப்படுகிறது. டென்னிஸ் பந்தின் விட்டம் 6.54 - 6.86 செ.மீ., எடை 57.7 - 58.5 கிராம்.

பேட்மின்டன்

 1992-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் இடம்பெற்று வரும் பேட்மின்டன், இந்தியாவுக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்க காரணமாக இருந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் மற்றும் சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில்  பி.வி.சிந்து ஆகிய வீராங்கனைகள் பேட்மின்டன் மூலம் பதக்கம் வென்று, உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

நீச்சல்
 நீச்சல் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர், மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக்கில் 23 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் படைக்கப்பட்ட அனைத்து சாதனைகளுக்கும் இவர்தான் சொந்தக்காரர். 100 மீட்டர் பட்டர்ஃபிளை, 200 மீட்டர் பட்டர்ஃபிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே, 200 மீட்டர் ஃப்ரி ஸ்டைல், 200 மீட்டர் தனி நபர் மெட்லே பிரிவுகளில் பதக்கம் வெல்வது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

செஸ்

 உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், விஸ்வநாதன் ஆனந்த். சின்ன வயதில் தனது தாயை தோற்கடிப்பதற்காக செஸ் விளையாடத் தொடங்கினார். இன்று ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். இன்றைய இளம் தலைமுறை செஸ் ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் அவர்தான் ரோல் மாடல். பிரக்ஞாநந்தா, வைஷாலி என இவர் வழியில் இளம் செஸ் புயல்கள் தமிழகத்தில் உருவெடுத்து வருகின்றனர்.

நீளம் தாண்டுதல்

 இந்தியாவில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெற்றிகரமாக ஜொலித்த ஒரே வீராங்கனை, அஞ்சு பாபி ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரீஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார். இன்றுவரை அந்தத் தொடரில் வேறு யாரும் பதக்கம் வென்றது இல்லை. ஆண்கள் பிரிவில் அங்கித் ஷர்மா, தமிழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இருவர் மட்டுமே பெயர் சொல்லும் வீரர்கள். இதுவரை இந்தியாவில் ஐந்து வீரர்கள் மட்டுமே 8 மீட்டர் தூரத்தை தாண்டியுள்ளனர்.

குத்துச்சண்டை
 ஒரே எடையுடைய இரு வீரர்கள் கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து சண்டையிடும் ஒரு விளையாட்டு, குத்துச்சண்டை. ஒரு சண்டையாளர் அடித்ததில் எதிரி கீழே விழுந்துவிட்டால், நடுவர் 10 எண்ணுவதற்குள் திரும்பி எழ வேண்டும். இல்லையெனில், அவரை வீழ்த்தியவர் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார். அல்லது ஒரு போட்டியாளர் தொடர்ந்து சண்டையிட முடியாத வகையில் சோர்வு அடைந்தால், எதிர் தரப்பு ஆள் வெற்றி பெற்றதாக அர்த்தம். குறிப்பிட்ட சுற்றுகள் சண்டையிட்டு அதன் பின்னரும் நிலைத்து நின்றால், அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.