
பாவண்ணன்
குட்டிப் பூனை!

தட்டு நிறைய பாலை வைத்தேன்
தயிர்சோறு பிசைந்து வைத்தேன்
குட்டிப் பூனை ஓடிவா
குறும்புப் பூனை ஓடிவா
வெள்ளரிக்காய் எடுத்து வந்தேன்
துண்டு துண்டாய் நறுக்கி வைத்தேன்
குட்டிப் பூனை ஓடிவா
குறும்புப் பூனை ஓடிவா
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வைப்பேன்
பாட்டும் இசையும் சொல்லிக் கொடுப்பேன்
குட்டிப் பூனை ஓடிவா
குறும்புப் பூனை ஓடிவா
வண்ணக் குல்லாய் தைத்துத் தருவேன்
மாலை ஒன்றும் கோத்துத் தருவேன்
குட்டிப் பூனை ஓடிவா
குறும்புப் பூனை ஓடிவா
பஞ்சை நிறைத்து மெத்தை செய்தேன்
பட்டுத் துணியில் விரிப்பும் வைத்தேன்
குட்டிப் பூனை ஓடிவா
குறும்புப் பூனை ஓடிவா
குறும்புக் குரங்கு!

குறும்புக் குரங்கே ஓடிவா
குதித்துக் குதித்து ஓடிவா
உற்று உற்றுப் பார்ப்பதேன்?
உள்மனத்தில் ஐயமோ?
அச்சம் வேண்டாம் ஓடிவா
அருகில் நெருங்கி ஓடிவா
பொட்டு வைத்து விடுகிறேன்
பூவும் சூட்டி விடுகிறேன்
பூவன் பழம் பிடிக்குமா?
பேயன் பழம் பிடிக்குமா?
கடலை சுண்டல் வேண்டுமா?
கரும்புத் துண்டு வேண்டுமா?
உனது விருப்பம் என்னவோ
ஒரே நொடியில் தருகிறேன்
கர்புர் கொர்புர் குரலிலே
பாட்டு ஒன்று பாடுவாய்
குதித்துக் குதித்துத் தாவியே
குட்டிக் கரணம் போடுவாய்!