
ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் சிங் பிறந்த நாளைத்தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆகஸ்டு 29, 2012-ம் ஆண்டில், தயான் சந்தின் 108-வது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நாளில் விளையாட்டுகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு... அர்ஜுனா, துரோணாச்சார்யா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய விளையாட்டு தினமாக, ஒரு விளையாட்டு வீரரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?
• சச்சின் எப்படி கிரிக்கெட் கடவுளோ, அதுபோல ஹாக்கியில் தயான் சந்த். நிகரற்ற பல சாதனைகள் படைத்தவர். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ல் பிறந்தவர். சிறு வயதில் எங்கே போனாலும் ஹாக்கி மட்டையும் கையுமாகவே இருப்பார். நிலா வெளிச்சத்திலும் விளையாடுவார். அதனால், அவரது நண்பர்கள் ‘சாந்த்... சாந்த்' என்று அழைத்தனர். அதுவே அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டு, பின்னாளில் ‘தயான் சந்த் சிங்' என மாறியது. ‘சாந்த்' என்றால், இந்தி மொழியில் ‘நிலவு' என்று பொருள்.
• இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம். ஒரு ஹாக்கி போட்டியைப் பார்க்கப்போனார் தயான். இந்தியர்கள் அணியுடன் வெள்ளையர் அணி மோதிக்கொண்டிருந்தது. இந்தியர்கள் அணியை ஊக்குவித்து ஆர்ப்பரித்தார் தயான். இதைப் பார்த்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், ‘உன்னால் விளையாட முடியுமா?' என தயானிடம் சவால் விடுத்தார். சவாலை ஏற்று களம் இறங்கிய தயான், வெள்ளையர் அணிக்கு எதிராக 4 கோல்களை அடித்து மிரளவைத்தார்.

• 16 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்துவிட்டார் தயான் சந்த். அங்கும் ஹாக்கி பயிற்சி செய்தார். அப்போது, ஒலிம்பிக் போட்டியில் ‘பிரிட்டிஷ் இந்தியா' என்ற பெயரில்தான் இந்தியா பங்கேற்கும். 1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் தயான் சந்த் இடம்பெற்றார். இந்திய அணி தங்கம் வென்றது.
• அடுத்து நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், தயானின் ஹாக்கி மட்டை, மந்திர மட்டையாக மாறியது. அவரது சகோதரர் ரூப் சிங்கும் ஹாக்கி வீரர்தான். தயானுடன் அவரும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 24 கோல்கள் அடித்து, அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் நொறுக்கியது இந்தியா. ஹாக்கி உலகில் இந்தியா பெற்ற மிகப் பெரிய வெற்றி இது. இந்த ஆட்டத்தில், ரூப் சிங் 10 கோல்களும் தயான் சந்த் 8 கோல்களும் அடித்தனர். இறுதி ஆட்டத்தில், ஜப்பான் அணியை 11 கோல்கள் அடித்து வீழ்த்தி, தங்கம் வென்றது இந்தியா.
• 1936-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கேப்டன் ஆனார் தயான் சந்த். ‘ஒலிம்பிக் மைதானத்தில் மேஜிக் ஷோ நடக்கிறது. இந்திய மந்திரவாதி தயான் சந்த் ஹாக்கி மட்டையால் மேஜிக் காட்டுகிறார். பார்க்கத் தவறாதீர்கள்' என பெர்லின் பத்திரிகைகள் விளம்பரம் செய்தன. பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பயிற்சி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஆனாலும், லீக் சுற்று ஆட்டங்களில் திறமையாக விளையாடி, இறுதிச் சுற்றுக்கு வந்துவிட்டது. இறுதி ஆட்டம், மீண்டும் ஜெர்மனி அணியுடன். ஆட்டத்தைப் பார்க்க, முன் வரிசையில் தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருந்தார் ஹிட்லர். முதல் பாதியில் இந்திய அணியால் ஒரு கோல்தான் அடிக்க முடிந்தது. இடைவேளையின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார் தயான். இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது, தயான் சந்த் காலணி அணியாமல் வெறுங்காலுடன் விளையாடினார். தயானின் கால்களும் கைகளும் மாயாஜாலம் செய்யத் தொடங்கின. தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்தார் தயான். இறுதியில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, ஹாட்ரிக் தங்கத்தை வென்றது இந்தியா.
• தயானின் ஆட்டத்தைக் கண்ட ஹிட்லர், அவரது ரசிகராக மாறிவிட்டார். போட்டி முடிந்ததும் தயானிடம் வந்த ஹிட்லர், ‘‘ஜெர்மனி ராணுவத்தில் கர்னல் பதவி தருகிறேன், இங்கேயே வந்துவிடுங்கள்'' என்றார். உலகமே பார்த்து நடுங்கும் ஒரு மனிதரான, வானளாவிய அதிகாரம்கொண்ட ஹிட்லரின் வேண்டுகோளைக் கேட்ட தயான், ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. ‘‘தாய்நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டு அணிக்கும் விளையாடும் உத்தேசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டார்.
• ‘ஹாக்கியின் பீலே' என்று இவரைச் சொல்லலாம். தனது ஹாக்கி வாழ்க்கையில், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 39 கோல்கள் உள்பட 400 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.
• ஹாக்கியில் இவருக்கு அபார நுண்ணறிவு உண்டு. ஒரு போட்டியில், பல முறை கோல் அடிக்க முயற்சித்தார். பந்து, கோல் கம்பங்களுக்குள் புகவில்லை. நடுவரிடம் சென்று, ‘‘இரு கோல் கம்பங்களுக்கும் இடையே உள்ள அளவு, விதிகளின்படி இல்லை, வித்தியாசம் இருக்கிறது'' என்றார். அளந்து பார்த்தபோது, வித்தியாசம் இருப்பது தெரிந்தது.

• 1956-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து மேஜர் அந்தஸ்துடன் தயான் ஓய்வுபெற்று, உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் வசித்தார். தேசம், அந்த மாவீரனைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தது. தயானின் இறுதி நாட்களில் புற்றுநோய் தாக்கியது. 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, அரசு மருத்துவமனை ஒன்றில் யாரென்று தெரியாமலேயே இறந்துபோனார்.
• தயான் சந்த்-துக்கு இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், மலை மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது, பாதாள ரயில் நிலையம் ஒன்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டது. 2002-ம் ஆண்டிலிருந்து விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு, தயான் சந்த் பெயரில் ‘வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
• தயான் சந்த்-தின் மகன் அசோக்குமாரும் ஹாக்கி வீரர்தான். கடந்த 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அணியிலும், 1975-ம் ஆண்டு நடைபெற்ற கோலாலம்பூர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் அசோக்குமார் இடம்பெற்றிருந்தார்.
- எம்.குமரேசன்