அதகளமாக ஆரம்பிக்கிறது ஆறாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள். இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன. மார்ச் 8-ம் தேதி தொடங்கி, இந்தியாவில் நடக்கப்போகும் இந்தத் தொடரில், ஜெயிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லும் ரேஸில் முன்னிலையில் இருக்கும் அணிகளின் பலம், பலவீனங்கள் என்ன? கிரவுண்டில் இறங்கிப் பார்ப்போமா?

இந்தியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலம்:
• மிகச் சமீபத்தில், ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே டி20 தொடரில் வாஷ்அவுட் செய்ததும் இலங்கையை வென்றதும் அணிக்கு பெரிய உத்வேகம்.
• தோனி, யுவராஜ் சிங், ரோஹித் ஆகியோரின் ஐந்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடிய அனுபவம்.
• ரோஹித், தவான் எனத் துவக்க ஆட்டக்காரர்களின் அதிரடி. ‘குட்டி டிராவிட்’ எனப்படும் ரஹானே, கோஹ்லி போன்ற அடுத்த நிலை ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டம்.
• ரெய்னா என்ற அட்டகாச ஆல்ரவுண்டர். புதிய வேகப் புயல் பும்ரோ மற்றும் முகமது சமி.
• சுழற்பந்து வீச்சில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் அஸ்வின். அவருக்குப் பக்கபலமாக ஜடேஜா, ரெய்னா, யுவராஜ் சிங். எக்ஸ்ட்ராவாக இவர்களின் சிறப்பான ஃபீல்டிங்.
• தோனியின் புயல் வேக ஸ்டம்ப்பிங்.

பலவீனம்:
• எதிர் அணியினர் மிரண்டுபோகும் அளவுக்கான வேகப்பந்து வீச்சு இல்லாதது.
• சில வீரர்களைத் தவிர, பிற வீரர்கள் ஃபீல்டிங்கில் ஆவேசமாக இல்லாமல் இருப்பது.
• யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா வழக்கமான அதிரடி ஆட்டத்துக்கு முழுமையாகத் திரும்பாதது.
• தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால், ஐந்தாவது விக்கெட்டுக்குப் பிறகு வலுவான கூட்டணி இல்லாதது.
ஆஸ்திரேலியா

பலம்:
• டி20 உலகக் கோப்பையை இதுவரை வெல்லாததால், இந்த முறை வென்றே தீர வேண்டும் என்ற வெறியில் விளையாடுவது.
• எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டும் அதிரடி பேட்ஸ்மேன்கள்.
• எதிர் அணி பேட்ஸ்மேன்களைத் திணறச் செய்யும் வேகப்பந்து வீச்சு.
• டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-க்கும் கேப்டனாக மாறியுள்ள ஸ்மித்.
பலவீனம்:
• பாக்னர், பின்ச், கோல்டர் நைல் போன்ற வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது.
• இந்திய மைதானங்களில் சிறப்பாகப் பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது.
தென்னாப்பிரிக்கா

பலம்:
• மற்ற அணிகளைவிட வலுவான பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கும் அணி.
• துல்லியமான லைன்&லெங்க்த்தில் பந்து வீசும் நான்கு பந்து வீச்சாளர்கள் மற்றும் மீதமுள்ள அனைவரும் அதிரடி பேட்ஸ்மேன்களாகக் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபார்முலாவைப் பயன்படுத்தும் தென்னாப்பிரிக்க கேப்டன் டூப்ளெஸியின் வியூகம்.
• எதிர் அணியினரைப் பயமுறுத்தும் டிவில்லியர்ஸ், ஸ்டெயின் போன்றோர் அணியில் இருப்பது.
பலவீனம்:
• உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் என்றாலே, இறுதிப் போட்டிகள் வரை அட்டகாசமாக ஆடி, மோசமாகத் தோற்கும் ராசி. இது மனரீதியாக வீரர்களைப் பாதிப்பது தென்னாப்பிரிக்க அணியின் பலவீனம்.
நியூசிலாந்து

பலம்:
• போட்டியின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருப்பது.
• சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளையே 20 ஓவர் போட்டிகளைப்போல விளையாடியவர்கள். 20 ஓவர் போட்டிகளை எப்படி விளையாடப்போகிறார்கள் என்று எல்லா அணிகளுமே எதிர்பார்க்கிறது.
பலவீனம்:
• பிரண்டன் மெக்கல்லம் என்ற அதிரடி பேட்ஸ்மேன் ஓய்வு பெற்றுவிட்டது.
• வெட்டோரிக்குப் பிறகு வெளிநாடுகளில் அற்புதம் புரியும் சுழற்பந்து வீச்சாளர்கள் கிடைக்காமல் போனது.
மேற்கிந்தியத் தீவுகள்

பலம் :
• 20 ஓவர் போட்டிகளை விளையாடுவதற்கு என்றே பிறந்தவர்களைப்போல விளையாடும் அணி என்பதே அவர்களது கூடுதல் பலம்.
• இமாலய சிக்ஸர்களை அடிக்கும், சிக்ஸர் மழை பொழியும் கெயில் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது.
பலவீனம்:
• நரேய்ன், பொல்லார்டு, பிராவோ போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இல்லாமல் இருப்பது.
• நிலையான அதிரடி ஆட்டத்தை எந்த வீரர் தருவார் என நம்பவே முடியாது. திடீரென சொதப்பலாக விளையாடி, வேகமாக வெளியேறுவது.
-சுப.தமிழினியன்
வார்னே சொன்னா பலிக்குமா?

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே சொல்லும் கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்துள்ளன. 2011-ம் ஆண்டு இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என்றார். மைக்கேல் கிளார்க் கேப்டனாக இருந்தால், 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று கூறியிருந்தார். 2011-ம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த டெஸ்ட் போட்டி ஒன்று, டையில் முடியும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது அத்தனையுமே நடந்தது. ‘இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியாதான் இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். இந்த முறையும் ஷேன் வார்னேயின் கணிப்பு பலிக்குமா?
டி20 உலகக் கோப்பையை இதுவரை நடத்திய நாடுகளில், இலங்கையைத் தவிர வேறு எந்த நாடுமே இரண்டாவது சுற்றைத் தாண்டியது இல்லை. இந்த ஃபார்முலாவை இந்திய அணி உடைக்குமா?
இன்னும் சில அணிகள்!
இலங்கை: குஷால் பெரேரா, தில்ஷான் என வலுவான துவக்க வீரர்கள். இறுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசும் மலிங்கா, சுழற்பந்து வீச்சில் கலக்கும் சேனநாயகா போன்றோர் அணியின் மிகப்பெரிய பலம்.
சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றோருக்குப் பிறகு, மத்தியில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லாமல் இருப்பது. மலிங்காவுக்கு துணையாக, சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பலவீனம்.
பாகிஸ்தான்: அப்ரிடி, மாலிக், ஹபீஸ், ரியாஸ் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது. உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் திடீர் பலம் பெற்று ஆச்சர்யம் அளிப்பது பலம்.
ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததால், அவர்களுக்கு இந்திய மைதானங்களின் தன்மை புரியாமல் இருப்பது பெரிய பலவீனம்.

இங்கிலாந்து: சமீப காலங்களில், 20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கிறார்கள். சமீபத்தில், பாகிஸ்தானை வென்று கூடுதல் உத்வேகத்துடன் இருப்பது பலம்.
வேகப்பந்து வீச்சு பலமாக இருந்தாலும், இந்திய மைதானங்களில் விக்கெட்களை வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை.
பலம் வாய்ந்த இந்த அணிகளைத் தவிர, வங்கதேசம், ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளும் விளையாடுகின்றன. இத்தகைய சின்னச்சின்ன அணிகளும், பல சமயங்களில் திடீர் ஆச்சர்யத்தை அளிக்கும். கடந்த ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில், வங்கதேச அணி மற்ற சின்ன அணிகளை வென்றதோடு, இங்கிலாந்தையும் வீழ்த்தியது. அதுபோல ஆச்சர்யங்களும் இந்த டி20 உலகக் கோப்பையில் காத்திருக்கலாம்... பார்ப்போம்!