எங்கள் பள்ளியின் ஜூனியர் சுட்டிகளுக்கு செம ஜாலியாக ஒரு நாடகம் நடத்தி, குலுங்கக் குலுங்க சிரிக்கவைக்க பிளான் போட்டோம். அட்டையில், விலங்குகளின் முகமூடிகளைத் தயார்செய்தோம். காட்டில் நடக்கும் சிங்க ராஜாவின் பிறந்தநாளில் விலங்குகள் புகழ்ந்து பாடுவதும், சிறந்த பாட்டுக்கு சிங்க ராஜா பரிசு தருவதும்தான் கான்செப்ட். அந்தச் சிங்கம் ஒரு முட்டாள். காட்டுக்குள்ளே போகலாம் வாங்க...

சிங்கம்: ‘‘எல்லோரும் பாட்டோடு வந்திருக்கீங்களா?’’
விலங்குகள்: ‘‘ரெடி ராஜா, யாருக்குப் பரிசு கொடுக்கிறதுனு தெரியாம திணறப்போறீங்க.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிங்கம்: ‘‘அதையும் பார்த்துடுவோம். முதல்ல, பெருசு (யானை) ஆரம்பிக்கட்டும்.’’
யானை: ‘‘கானகத்தின் கட்டிக் கரும்பே ஜங் ஜங் ஜங்... கமகமக்கும் சோற்றுக் கவளமே ஜங் ஜங் ஜங்... கேரளத்து தேங்காய் மூடியே ஜங் ஜங் ஜங்... வாழ்க நீ நூறாண்டு ஜங் ஜங் ஜங்.’’
சிங்கம்: ‘‘யோவ் பெருசு, என்ன தீனிப் பாட்டு இது? போ அப்பாலே. அடுத்தது யார்?’’
மான்: ‘‘நான்தான் ராஜா, மான் மரிக்கொழுந்து. என்னோட பாட்டு சூப்பரா இருக்கும்.
உனக்கும் எனக்கும் பேச்சில்லை; உங்கப்பா கையில வாட்ச் இல்லை. காலம் பார்க்காம எங்களைக் காத்தாரே; மேலும் காக்க உங்களைக் கொடுத்தாரே.’’
சிங்கம்: ‘‘என் அப்பா தொல்லை தாங்காமத்தான் துரத்தினேன். மறுபடியும் அவரை ஞாபகப்படுத்துறியா? ஓடிப்போயிரு. அடுத்தது யார்?’’
குரங்கு: ‘‘அது நானே. இப்போ பாடப்போறதும் நானே. பரிசு ஜெயிக்கப்போறதும் நானே...

சூர்யா அடிச்சா ஒண்ணரை டன்னு; நீ நடந்தாலே நாலரை டன்னு. தெறியா வர்றாரு விஜய் அண்ணாச்சி; என்னிக்குமே தெறிக்கவிடுறது நீதான் அண்ணாச்சி!’’
சிங்கம்: ‘‘ச்சீ... ச்சீ... அடிக்கடி நாட்டுக்குள்ளே போய் சினிமா பார்த்துக் கெட்டுட்டே. எதுவுமே பிடிக்கலை. நரித் தம்பி, நீயாவது நல்ல பாட்டா பாடு தம்பி.’’
நரி: ‘‘பரிசைத் தயாரா கையில் வெச்சுக்கங்க ராஜா. என் பாட்டைக் கேட்டு இளையராஜாவே ஓடி வருவார் பாருங்க.

அன்பு செய்வதில் நீ கரும்பு; வம்பு செய்பவன் உனக்குத் துரும்பு. வாட்ச் கட்டாத மேன் நீ; எங்களைக் காக்கும் வாட்ச்மேன் நீ. நூறு சூர்யா, நூறு விஜய் உனக்கு இணையில்லை; பல நூறு வருஷம் எதிரிகளுக்கு நீ தொல்லை!’’
சிங்கம்: ‘‘சூப்பர்... சூப்பர்... உனக்கே பரிசு.’’
யானை (கிசுகிசுப்பாக): ‘‘ஏம்ப்பா... இவன் பாட்டை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே?’’

குரங்கு: ‘‘சரியாக் கவனி பெருசு. நாம சொந்தமா எழுதிப் பாடினதுல இருந்து, ரெண்டு ரெண்டு வரிகளை உருவிப் போட்டு பரிசு வாங்கிட்டான்.’’
மான்: ‘‘என்ன கொடுமை சரவணா இது?’’
கதாபாத்திரங்கள்:
சிங்கம்: தமிழ்ச்செல்வன், யானை: சேது அரவிந்த்
நரி: சேதுராமன், மான்: திருமுருகன்,
குரங்கு: அண்ணாமலை.
கதையாக்கம்: ர.பவித்ரா, மு.ரிஷ்மிதா.