உன்னோடு... உணர்வோடு!
கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம்ஸ் விளையாடிய அனுபவம் உண்டா?

கலர்ஃபுல் மைதானம், தோனியின் சிக்ஸரை நாமே அடிக்கலாம், பெரிய பேட்ஸ்மேனை ‘டக் அவுட்’ செய்யலாம். இதுபோல ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இருக்கும். ஆனால், உங்கள் நண்பர்களுடன், வீட்டு மாடியில் ஆடும் நிஜமான கிரிக்கெட் தரும் திருப்தியை வீடியோ கேம்ஸ் தருகிறதா? இல்லை. காரணம், நிஜம் தரும் உணர்வை தொழில்நுட்பத்தால் தர முடியாது.

இந்த நிலையை மாற்ற வேண்டும். தொழில்நுட்பம் என்பது, நிஜத்தில் வாழ்ந்துவரும் மனிதனின் ஆசைகளை, விருப்பங்களைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும் என யோசித்த ஒருவரின் கனவு, முயற்சிதான் மேஜிக் லீப் (Magic Leap).
இதை, 3D தொழில்நுட்பத்தின் லாங் ஜம்ப் எனலாம். சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் திடீரென, மைதானத்தின் நடுவே, தரையில் இருந்து ஒரு பெரிய திமிங்கிலம், தண்ணீர் தெறிக்க மேலே வந்தால் எப்படி இருக்கும்? 3D கண்ணாடி இல்லாமலே, ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

‘மேஜிக் லீப்’ நிறுவனம், தனது புராஜெக்ட்டை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. ஆனால், கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட காட்சிகளை, காற்றில் ‘லைட் ஃபீல்ட்’ (Light field) மூலம் புராஜெக்ட் செய்து, நம் கண்களுக்கு விருந்து படைக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றி அடைந்தால், மனிதர்கள் கல்வி கற்கும் முறையில் இருந்து விளையாட்டு வரை எல்லாமே தலைகீழாக மாறும். இதுவரை நிகழ்ந்த தொழில்நுட்ப அதிசயங்களிலேயே இது, அசுரப் பாய்ச்சலாக இருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
சும்மாவா... இந்த உண்மை தெரியாமலா கூகுள் நிறுவனம், மேஜில் லீப்பில் 540 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்?
- கார்க்கிபவா