Published:Updated:

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

-சுட்டிகளுடன் கலகல சந்திப்பு

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

-சுட்டிகளுடன் கலகல சந்திப்பு

Published:Updated:

‘பேய்’ எனச் சொன்னதும் பெரியவங்களே பயந்து நடுங்கியது ஒரு காலம். இப்போது, பேய் எதிர்ல வந்து நின்னா, ‘ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடலாம் வர்றியா?’னு எல்கேஜி பையன்கூட கூப்பிடுவான். அந்த அளவுக்கு பேய்ப் படங்களை செம ஜாலியா கொடுத்து, எல்லோரையும் ரசிக்கவெச்சவர், ராகவா லாரன்ஸ் அங்கிள்.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

சென்னை, அசோக் நகரில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது இந்த கலகல கதை நிகழ்ச்சி. லாரன்ஸ் அங்கிள் நுழைஞ்சதும், “மொட்ட சிவா கெட்ட சிவா வந்தாச்சு” எனச் சுட்டிகள் போட்ட கூச்சலில், ஆடிட்டோரியமே ஆ... ஆ... ஆ... ஆடிப்போச்சு.

“படிப்போடு, மத்த விஷயத்திலும் அப்டேட்டா இருக்கீங்கன்னு தெரியுது’’ எனச் சிரித்தார் லாரன்ஸ் அங்கிள்.

“அங்கிள், நீங்க என்ன கதை சொல்லப்போறீங்க?” எனக் கேட்டார் ஒரு சுட்டி.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

“கொஞ்ச நேரம் ஜாலியா பேசுவோம். அப்புறமா கதை சொல்றேன்” என்றார் லாரன்ஸ் அங்கிள். 

“அங்கிள், ரியலாவே நீங்க பாத்ரூம் போகும்போது உங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போவீங்களா?” என ஆரம்பத்திலேயே அதிரடி சிரிவெடிக் கேள்வியைக் கொளுத்திப் போட்டார் ரூபஸ்ரீ.

“எங்கே போனாலும் இந்தக் கேள்வியைக் கேக்கிறாங்கப்பா. சின்ன வயசுல பாட்டியைக் கூட்டிட்டுப்போவேன். இப்போ, தனியாதான் போறேன். சத்தியமா சொல்றேன் நம்புங்க” என்றார்.

“அப்போ, பேய் இல்லைனு சொல்றீங்களா? அப்புறம் ஏன் பேய்ப் படங்களா எடுக்குறீங்க?” என மடக்கினார் சாந்தி.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

“உங்களுக்கு அதுதானே ரொம்பப் பிடிக்குது. ரசிகர்களுக்கு பிடிக்கிறதைக் கொடுக்கிறோம். சினிமாவில் பார்க்கிறது எல்லாம் கற்பனை. ரசிச்சுட்டு மறந்துடணும். நான், ஆக்‌ஷன் படங்கள், சென்டிமென்ட் படங்களும் எடுத்திருக்கேன்” என்றார்.

“நீங்க யார்கிட்டே டான்ஸ் கத்துக்கிட்டீங்க? எங்களுக்காக ஒரு டான்ஸ் ஆடிக் காட்டுங்க” என்றார் பாலாஜி என்ற சுட்டி.

“நானாதான் டான்ஸ் கத்துக்கிட்டேன். கடைசியா ஆடிக் காட்டுறேன்” என்றார்.

“நீங்க நிறையப் பேருக்கு ஹெல்ப் பண்றதா படிச்சு இருக்கேன். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சு?’’ எனக் கேட்டார் அக்‌ஷயா.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

“சின்ன வயசுல நான் சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்பட்டேன். படிக்க முடியாமக் கஷ்டப்பட்டேன். உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டேன். அதனால், நம்மால் முடிஞ்ச ஹெல்ப்பை மத்தவங்களுக்கு செய்யணும்னு நினைச்சேன். சினிமாவில் நல்ல நிலைக்கு வர ஆரம்பிச்சதும், 60 குழந்தைகளை வளர்க்க ஆரம்பிச்சேன். அவங்க எல்லாம் என்னை அப்பானு கூப்பிடுறப்போ, அவ்வளவு சந்தோஷமா இருக்கு. வீடு வாங்கினப்போ கிடைக்காத சந்தோஷம், கார் வாங்கினப்போ கிடைக்காத சந்தோஷம், மத்தவங்களுக்கு உதவும்போது கிடைக்குது. இதுக்கு அப்புறம் 200 குடிசைப் பகுதிக் குழந்தைகளை கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்கவெச்சேன். இது தெரிஞ்சதும், அண்ணா நகரில் இருக்கும் எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் 400 குழந்தைகளுக்கு இலவசமா இடம் கொடுத்தாங்க. நல்ல விஷயத்தை நாம ஆரம்பிச்சுவெச்சோம்னா, நிறையப் பேர் உதவ வருவாங்கன்னு புரிஞ்சது. நீங்க யாருக்காவது ஹெல்ப் பண்ணி இருக்கீங்களா?’’ எனக் கேட்டார் லாரன்ஸ் அங்கிள்.

சட்டென எழுந்த ரூபிணி, “அங்கிள், நானும் என் ஃப்ரெண்டு அமுதாவும் ஒரு பாட்டிக்கு டெய்லி ஹெல்ப் பண்றோம். அவங்க வீட்டுல பாட்டி மட்டும்தான் இருக்காங்க. லாரித் தண்ணி வந்துட்டா, அவங்களால குடத்தைத் தூக்கிட்டுப் போக முடியாது. நாங்கதான் தண்ணீர் பிடிச்சு, வீட்டுல கொண்டுபோய் வைப்போம்” என்றார்.

வயதானவர்களுக்கு பஸ்ஸில் இடம் கொடுப்பது, பார்வையற்றோருக்கு சாலையைக் கடக்க உதவுவது என ஒவ்வொரு சுட்டியும் தாங்கள் செய்யும்  உதவிகள் பற்றிச் சொன்னார்கள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. உதவி செய்யும்போது, ‘பார்த்தியா நாம செஞ்சோம்’னு ஆணவம் இருக்கக் கூடாது. அதே நேரம், நாலு பேர்கிட்டே சொல்லுங்க. ஏன்னா, அதைக் கேட்டு அவங்களுக்கும் உதவும் எண்ணம் வரும்” என்றார் லாரன்ஸ் அங்கிள்.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

“அங்கிள், நீங்க எல்லாப் பேட்டியிலுமே உங்க அம்மாவைப் பற்றி சொல்றீங்களே அது ஏன்?” எனக் கேட்டார் ஒரு சுட்டி.

“ஏன்னா, நான் உங்க முன்னாடி இப்படி நிற்கிறேன்னா, அதுக்குக் காரணம் அம்மாதான். அவங்களுக்காக ஒரு கோயிலைக் கட்டிட்டு இருக்கேன். தினமும் அவங்க காலைத் தொட்டுக் கும்பிட்டு, என் நெற்றியில் ஒற்றிக்கிட்டுதான் வெளியே கிளம்புவேன். அம்மாவைக் கும்பிட்டுட்டு எந்த விஷயமா வெளியே போனாலும் அது சக்ஸஸ் ஆகும். நீங்களும் செஞ்சு பாருங்க. அப்போ, உங்க அம்மா முகத்தில் வெளிப்படும் சந்தோஷத்துக்கு ஈடு கிடையாது. இந்த உலகத்தில் அம்மாவைவிட பெரிய தெய்வம் கிடையாது. சரி, ரொம்ப சீரியஸா போய்ட்டு இருக்கே. ஜாலி ரூட்டுக்கு மாறுவோமே” என்றார்.

உடனே எழுந்த இந்திரா என்ற சுட்டி, “அங்கிள், நான் ஒரு விடுகதை கேட்கிறேன். நாக்கே இல்லாதவன் நல்ல விஷயங்கள் சொல்வான், அவன் யார்?’’ எனக் கேட்டார்.

கொஞ்சம் யோசித்த லாரன்ஸ் அங்கிள், “புத்தகம். கரெக்ட்டா?” எனக் கெத்தாக காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார்.

விசாலாட்சி என்ற சுட்டி, “நான் கேட்கிறேன். சட்டையைக் கழற்றியதும் சட்டெனச் சாப்பிடணும், அது என்ன?” என்றார்.

“பட்டுனு சொல்றேன் கேட்டுக்கோ, வாழைப்பழம்” என்று அப்ளாஸ் அள்ளியவர், “சரி, யாராவது கதை சொல்லுங்க” என்றார்.

“என்ன அங்கிள், பந்தை நைசா எங்க பக்கம் திருப்பிவிடுறீங்க?” என உஷார் கேள்வி கேட்டார் ஒரு சுட்டி.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

“முதல்ல, நீங்க ஒரு கதை சொல்லுங்க பார்ப்போம். அப்புறம் நான் சொல்றேன்” என்றார் லாரன்ஸ் அங்கிள்.

ஹரிணி, ஒரு புதையல் கதையையும், அக்‌ஷயா, ஒரு நகைச்சுவைக் கதையையும் சொல்லிவிட்டு, “இப்போ, நீங்க ஒரு பேய்க் கதையைச் சொல்லுங்க” என்று அவரைச் சூழ்ந்து கொண்டார்கள் சுட்டிகள்.

“அதான் நிறையப் பேய்ப் படங்கள் வருதே. நான், ஒரு புறா ஃபேமிலி பற்றின கதையைச் சொல்றேன்” என ஆரம்பித்து, ரொம்ப அழகாக ஒரு கதையைச் சொல்லிவிட்டு எழுந்தார்.

“பேய்ப் படங்கள் தந்த காஞ்சனாவின் பக்கா மாஸ் சென்டிமென்ட் கதை’’ என அபிநயம் செய்தார் ஒரு சுட்டி.

“அங்கிள், டான்ஸ் ஆடிக் காட்டுறதா சொன்னீங்களே” என்று மீண்டும் ரவுண்டு கட்டினார்கள்.

“இப்பவும் செக் வைப்போம்ல... முதல்ல, நீங்க ஆடிக் காட்டுங்க. யார் வரப்போறீங்க?” எனக் கேட்டார் லாரன்ஸ் அங்கிள்.

சந்தியா மற்றும் ரூபஸ்ரீ முன்னால் வந்தார்கள். ‘கறுப்புப் பேரழகா கண்ணுக்குள்ளே நிக்கிறியே ஜோரா” எனப் பாடியவாறு ஆட ஆரம்பித்தார்கள்.

அப்புறம் என்ன? லாரன்ஸ் அங்கிளும் ஆட ஆரம்பித்தார். இன்னும் சிலர் சேர்ந்துகொள்ள, அந்த ஆடிட்டோரியமும் ஆ... ஆ... ஆட ஆரம்பித்தது.
 

 - கே.யுவராஜன்,   படங்கள்: கே.கார்த்திகேயன்

 பங்கேற்பு: அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,
 கோடம்பாக்கம், திருவான்மியூர் சுட்டிகள்.

 ஒருங்கிணைப்பு: ம.கா.செந்தில்குமார், கே.ஆர்.ராஜமாணிக்கம்

லாரன்ஸ் அங்கிள் சுட்டிகளுக்குச் சொன்ன கதை.

ஒரு அம்மா புறா, ஒரு அப்பா புறா, ஒரு மகன் புறா, ஒரு மகள் புறா என ஒரு கோயில் கோபுரத்தில் புறா ஃபேமிலி இருந்துச்சு. அம்மா புறா, கோயிலில் பக்தர்கள் போடும் தானியங்களைச் சேகரிச்சுட்டு வந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும். அப்பா புறா, வெளியே போய் இரையைச் சேகரிச்சுட்டு வந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும். மகன் புறாவுக்கும் மகள் புறாவுக்கும் கோயிலுக்கு வர்றவங்களை வேடிக்கை பார்க்கிறதுதான் பொழுதுபோக்கு. கொஞ்ச நாளில், அந்தக் கோயிலில் திருவிழாவுக்காக சுத்தம் செய்ற வேலை ஆரம்பிச்சது. “இனிமே நாம இங்கே இருக்க முடியாது. வேற இடத்துக்குப் போயிடலாம்”னு சொல்லிச்சு அப்பா புறா.

பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!

நான்கு புறாக்களும் அங்கே இருந்து பறந்து, ஒரு தேவாலயத்தை அடைஞ்சாங்க. தேவாலயத்தின் பெரிய மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் கூடு கட்டித் தங்கினாங்க. வழக்கம்போல மகன் புறாவும், மகள் புறாவும் தேவாலயத்துக்கு வர்றவங்களை வேடிக்கை பார்த்துட்டு இருந்துச்சுங்க. கொஞ்ச நாளில், அந்தத் தேவாலயத்திலும் சுத்தம் செய்யும் வேலை நடந்துச்சு.

தேவாலயத்தில் இருந்து பறந்து தர்காவுக்கு வந்தாங்க. அங்கே தொழுகைக்கு வந்தவங்களை வேடிக்கை பார்த்த மகன் புறா, “அப்பா, எனக்கு ஒரு டவுட். நாம முதலில் தங்கிய கோயிலுக்கு வர்றவங்க, நெற்றியில் திருநீறும் குங்குமமும் வெச்சுப்பாங்களே. அவங்க யாரு?”னு கேட்டுச்சு.

“அவங்களுக்கு இந்துக்கள் என்று பெயர்” என்றது அப்பா புறா.

“அப்படினா, ரெண்டாவதா தங்கின இடத்தில் வர்றவங்க யாரு?” எனக் கேட்டுச்சு மகள் புறா.

“சிலுவைக் குறியீடு போட்டு வணங்கும் அவங்களுக்கு, கிறிஸ்துவர்கள் எனப் பெயர். இங்கே தொழுகை நடத்தும் இவங்க முஸ்லீம்கள்” என்றது அம்மா புறா.

“இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்றால் என்ன? எல்லோரும் மனிதர்கள்தானே?” எனக் கேட்டுச்சு மகன் புறா.

“எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால், இவங்களுக்குள் மதம், சாதி எனும் பிரிவுகளை ஏற்படுத்திக்கிட்டு வாழறாங்க. சில நேரம் அவங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கிறாங்க. ஒருத்தர் இடத்துக்கு ஒருத்தர் வரக் கூடாதுனு முறைச்சுக்கிறாங்க. புறாக்களான நமக்கு சாதி, மதம் இல்லை. அதனால்தான், மனிதர்களைவிட அறிவிலும் ஆற்றலிலும் குறைவாக இருந்தாலும் ரொம்பச் சந்தோஷமா இருக்கிறோம். எந்த இடத்துக்கும் சுதந்திரமாப் போகிறோம்’னு சொல்லிச்சு அப்பா புறா.

புரிஞ்சுக்கிட்ட குழந்தைப் புறாக்கள் சந்தோஷமா தங்களோட சிறகுகளைப் படபடனு அடிச்சுக்கிச்சு.