Published:Updated:

குட் பை சாம்பியன்ஸ்!

குட் பை சாம்பியன்ஸ்!

குட் பை சாம்பியன்ஸ்!

குட் பை சாம்பியன்ஸ்!

Published:Updated:

தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டால் என்ன ஆகும்? படபடவென்று அதுவாக வெடித்து முடிக்கும் வரை யாராலும்  தடுக்க முடியாது. ஷேவாக்கின் பேட்டிங்கும் அப்படித்தான்.

என் வழி தனி வழி!

‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால், ஷேவாக்கின் அதிரடியைப் பார்த்துள்ளேன்’’ என்று தோனி பெருமையாகக் குறிப்பிட்ட ஷேவாக்,  தனது 37-வது பிறந்தநாளான அக்டோபர் 20-ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்.

குட் பை சாம்பியன்ஸ்!

டெல்லியில் படிக்கும்போது, ஷேவாக் விளையாடிய அரோரா வித்யா மந்திர் பள்ளி மைதானத்தை, கிரிக்கெட்டின் கோயிலாக நினைத்து பல சிறுவர்கள் அங்கே  விளையாட விரும்புகிறார்கள்.சச்சினைப் போல பள்ளிக் காலத்திலேயே ஷேவாக் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக விளங்கினார். ஷேவாக் ஆடுகிறார் என்றால், அதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடும்.

ஒரு முறை ஷேவாக் இடம்பெற்ற அணி, 100 ரன்களுக்குள் எதிர் அணியைச் சுருட்டிவிட்டது. தொடக்க வீரராகக் களம் இறங்கினார் ஷேவாக்.

‘‘சரி, நீயே அடித்து முடித்துவிடு. நாங்கள் அடுத்த மேட்சுக்காக வேறு ஒரு மைதானத்தைத் தயார்செய்கிறோம்’’ என்று சொல்லிவிட்டு, அணியின் மற்ற பேட்ஸ்மேன்களை அழைத்துச் சென்றுவிட்டார் பயிற்சியாளர்.

நண்பருடன் இணைந்து கடகடவென ரன்களைக் குவித்து, ஆட்டத்தை  முடித்த ஷேவாக், மைதானத்தைத்  தயார்செய்யும்  இடத்துக்கும் சென்று  இணைந்துகொண்டார்.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஷேவாக் கலந்துகொண்டாலே, போட்டி அமைப்பினர் சலித்துக்கொள்வார்கள். ‘அவர் நிறைய சிக்ஸர்கள் அடிப்பதால், பந்துகள் காணாமல்போகின்றன’ என்பார்கள்.

2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியின்போது 281 ரன்கள் அடித்து, ‘அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர்’ என்ற சாதனையைச் செய்திருந்த லக்ஷ்மனிடம், ‘‘சாதனைக்கு வாழ்த்துகள். ஆனால், நான் இதைத் தாண்டுவேன். நிச்சயம் முச்சதம் அடிப்பேன்’’ என்ற ஷேவாக், இரண்டு டெஸ்ட்டில் முன்னூறுகள் எடுத்தார்.

சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்தபோது, ஹரியானா அரசு ஷேவாக்குக்கு இலவசமாக நிலம் வழங்கியது. அந்த இடத்தில், சர்வதேசப் பள்ளியைத் தொடங்கியுள்ளார் ஷேவாக். அவரது தந்தை ஆசைப்பட்டது போல கல்விக்கூடமாகவும் விளையாட்டு மைதானமாகவும் உள்ளது அந்தப் பள்ளி.

ஒரு நாள், டி20, டெஸ்ட் போட்டி என எல்லா வகை ஆட்டங்களிலும் அதிரடிதான் ஷேவாக் பாணி. இத்தனைக்கும் சச்சின், டிராவிட் போல கிரிக்கெட்டை தொழில்நுட்பத்தோடு ஷேவாக் கற்றது இல்லை.

ஷேவாக்கின் பயிற்சியாளர் ஏ.என். சர்மா, ‘‘முறையாக ஆட முதலில் கற்றுக்கொடுத்தேன். ஆனால், அதைப் பின்பற்ற ஷேவாக் மிகவும் கஷ்டப்பட்டார். அதனால், அவர் பாணியிலேயே ஆட விட்டுவிட்டேன்’’ என்கிறார் சர்மா.

தோள்பட்டையை ஓர் ஆயுதமாக்கி, பந்தைச் சரியாகக் கணித்து ரன்களைக் குவிப்பதுதான் ஷேவாக்கின் ஸ்டைல்.

ஒரு முறை ஷேவாக்கிடம், ‘‘அவ்வளவு பெரிய பௌலரை எப்படி சிக்ஸருக்கு அடிக்கிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. ‘‘நான் பௌலரை அடிப்பது இல்லை. பந்தைத்தான் அடிக்கிறேன்’’ என்று குறும்பாக பதில் அளித்தார் ஷேவாக்.

தன்னுடைய ஓய்வு அறிவிப்பிலும் மிகவும் குறும்பாக, ‘எனக்கு கிரிக்கெட் அறிவுரைகளை வழங்கியவர்களுக்கு நன்றி. பெரும்பாலான அறிவுரைகளை நான் ஏற்றுக்கொள்ளாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.’ என்று குறிப்பிட்டார்.

ஷேவாக் பேசியது, அவரைப் பற்றி மற்றவர்கள் பேசியது என நிறையக் கதைகள் உண்டு. அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிறகு, எங்கு பார்த்தாலும் ஷேவாக் பற்றிய பேச்சாக இருக்கிறது. இனி, இன்னொரு ஷேவாக் இல்லை என்பதுதான் ரசிகர்களின் வருத்தம்.

இனிய நினைவுகள்!

மும்பையில் உள்ளது நேஷனல் கிரிக்கெட் கிளப். அங்கே முன்னாள் டெஸ்ட் வீரர், சுதிர் நாயக் பயிற்சியாளராக இருந்தார். தன் தந்தையுடன் வந்திருந்த 12-ம் வகுப்பு முடித்த அந்த இளைஞன், சுதிர் நாயக் முன் வந்து ‘‘நான் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்’’ என அறிமுகம் செய்துகொண்டார்.

‘‘எங்கே பந்தை வீசு பார்க்கலாம்’’ என்றார் சுதிர். அந்த இளைஞன் பந்து வீசியதைக் கண்ட சுதிர், தந்தையின் பக்கம் திரும்பி, ‘நீங்கள் ஊருக்குக் கிளம்பலாம். இவனை இனி நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார்.

குட் பை சாம்பியன்ஸ்!

அந்த இளைஞன் ஜாகீர் கான். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்ரீராம்பூர் கிராமத்தில் இருந்து வந்த  ஜாகீர் கான், முதல் முறையாக 17-வது வயதில்தான் கிரிக்கெட் பந்தில் விளையாடப் பழகினார். மிகவும் தாமதமாக கிரிக்கெட் ஆடத் தொடங்கியதால், மற்ற வீரர்களைவிடவும் கூடுதல் உழைப்பைச் செலுத்தினார். யார்க்கர், இன்ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், 140 கி.மீ வேகம் என எல்லா வகையிலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.

2000-ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஐசிசி போட்டியின் கால் இறுதியில், இந்திய அணி பலம் மிகுந்த ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. ஸ்டீவ் வாக்கின் விக்கெட்டை ஜாகீர் கைப்பற்றினார். லெக் ஸ்டம்ப் பறந்தது கண்கொள்ளாக் காட்சி. ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திய ஜாகீரின் பந்துவீச்சை கிரிக்கெட் உலகம் கவனிக்க ஆரம்பித்தது.

2007-ம் ஆண்டு, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. ஒரே காரணம் ஜாகீர் கான். 5 விக்கெட்டுகள் எடுத்து, ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ பட்டம் பெற்றார். இந்தியா சார்பில் தொடர் நாயகன் விருதும் கிடைத்தது.

‘‘ஜாகீர் பந்துவீச்சு எதிர்பாராத விதத்தில் இருந்தது. அதுபோன்ற பந்துவீச்சை எங்கள் அணியினர் எதிர்கொண்டதே இல்லை. வாசிம் அக்ரம்கூட இப்படி ஸ்விங் செய்தது இல்லை’’ என்று புகழ்ந்தார் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.

‘‘அணிக்குப் பங்களிப்பு செய்ததில் சச்சினுக்குக் கிடைக்கும் மரியாதை ஜாகீர் கானுக்கும் கிடைக்க வேண்டும். பந்துவீச்சாளர்களில் எங்களுடைய சச்சின், ஜாகீர் கான்’’  என்று பேட்டி அளித்தார் தோனி. 

வேகப்பந்து வீச்சாளர்களையும் காயங்களையும் பிரிக்கவே முடியாது. ஜாகீர் கான் சற்று கூடுதலாகவே பாதிக்கப்பட்டார். ‘தோள்பட்டைக் காயத்தால்’ தன்னால் இனி நாளொன்றுக்கு 18 ஓவர்கள் வீச முடியாது, என்று எண்ணியதால், ‘‘மிகச் சிறந்த நினைவுகளுடன் விடைபெறுகிறேன்’ என்கிறார் ஜாகீர் கான்.

- கிருஷ்