பிரீமியம் ஸ்டோரி

சுட்டிப் பசங்களுக்கான குட்டி மாரத்தான் போட்டி, ‘சென்னை கிட்டத்தான்’ என்ற பெயரில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. 3,000 மாணவர்கள் கலந்துக்கிட்ட அந்த நிகழ்ச்சியின் ரன்னிங் கமென்ட்ரி...

ரன்னிங்!

சண்டே தூக்கத்தைத் தியாகம் செய்து, விடியற்காலையிலேயே சுட்டிகள் என்ட்ரி கொடுத்தாங்க. மூன்றிலிருந்து ஐந்து வயது குழந்தைகளுக்கு, 500 மீட்டர் தூரமும், ஆறில் இருந்து 12 வயதுச் சுட்டிகளுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரமும், ஒன்பது முதல் 14 வயதுஉள்ளவர்களுக்கு, நான்கு கிலோமீட்டர் என்பதும் டார்கெட்.

‘‘ஓடுறதுக்கு முன்னாடி வார்ம்-அப் செய்யணும். அப்போதான் ரொம்பத் தூரம் ஓடலாம்’’ என மாஸ்டர்கள், சொல்லிக்கொடுத்த பயிற்சிகளை, உடம்பை வளைத்து நெளித்து சுட்டிகள் செய்தது செம க்யூட்.

ரன்னிங்!

சீஃப் கெஸ்ட்டாக, நடிகைகள் ஜோதிகா மற்றும் பூஜா குமார் வந்திருந்தாங்க. சூர்யா-ஜோதிகாவின் மகள் தியாவும் ஓட்டத்துக்கு ரெடியாக கூட்டத்தில் நின்னுட்டு இருந்தாங்க.

‘‘ஆரம்பத்திலேயே வேகமா ஓடக் கூடாது. சீக்கிரம் டயர்டு ஆகிடும். மெதுவா ஆரம்பிச்சு, சீரான வேகத்தில் போனால்தான் இலக்கை எட்டலாம். ஓடும்போது, ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுக்கக் கூடாது. யாராவது கீழே விழுந்துட்டா, தூக்கிவிடணும்” என்று நிறைய இன்ஸ்ட்ரக்‌ஷன்.

ரன்னிங்!

ஜோதிகாவும், பூஜா குமாரும் கொடி அசைத்ததும் சுட்டிகளின் ஓட்டம் ஆரம்பிச்சது. கொஞ்ச தூரம் ஓடினதும், ‘ஆகா, தெரியாம வந்துட்டோமோ’ என யோசிச்சுக்கிட்டே நின்ற சுட்டிகளை, அவங்களோட அப்பா, அம்மாக்கள் தூக்கிக்கிட்டு ஓடினது டர்னிங் பாய்ன்ட்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு என வழக்கமான மாரத்தான் போட்டிகள் மாதிரி இல்லாமல், கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் பதக்கமும் சான்றிதழும் கொடுத்தாங்க. பதக்கத்தை மாட்டிக்கிட்டு, சுட்டிகள் கெத்தாக நடந்தது, சூப்பர் கிளைமாக்ஸ்.

- ந.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள் : இரா.யோகேஷ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு