Published:Updated:

டுப்கி கிங், சுல்தான், சூப்பர் சுமித், சூறாவளி பவன்… 2019 ப்ரோ கபடி சூப்பர் ஸ்டார்ஸ்! #ProKabaddi

Pawan Kumar
Listicle
Pawan Kumar ( prokabaddi.com )

தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக ப்ரோ கபடி சாம்பியனாகியிருக்கிறது. பல முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், சிலர் தங்கள் மீதான ரசிகர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துள்ளனர். இந்த சீசனில் அதிக புள்ளிகள் பெற்று கலக்கிய டாப் 3 ரெய்டர்கள், டாப் 3 டிஃபண்டர்கள் இதோ…


Pawan Kumar ( prokabaddi.com )

பவன் குமார் - பெங்களூரு புல்ஸ்

360 புள்ளிகள் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக சீசனின் டாப் ஸ்கோரர் ஆகியிருக்கிறார் பவன் குமார் ஷெராவத். இரண்டாவது இடத்தில் இருக்கும் பர்தீப் நர்வாலை விட 56 புள்ளிகள் அதிகம்! இதுவே சொல்லிவிடும் பவன் எந்த லெவல் ஆட்டம் ஆடியிருக்கிறார் என்று. கேப்டன் ரோஹித் குமார் ராகுல் சவுத்ரியை விடவும் மோசமாக ஆடுகிறார்; மற்ற அணிகளுக்கு இருப்பதுபோல் இளமையான, அதேசமயம் அனுபவம் மிக்க ரெய்டர்கள் வேறு யாரும் இல்லை; டிஃபண்டர்களோ ரிஷப் பன்ட் போல் ஒருநாள் வெளுத்துக்கட்டுகிறார்கள், மறுநாள் வேடிக்கை பார்க்கிறார்கள். மேட்டில் இருக்கும் 6 வீரர்களில் யாரையுமே எந்த நிமிடமும் நம்பிவிட முடியாது. அப்படியொரு சூழலில் அணியை அரையிறுதி வரை அழைத்து வந்திருக்கிறார் பவன். ரோஹித் ஆடாத நேரத்தில், கேப்டனாகவும் அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். ரெய்டு செல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், முக்கியமான நேரங்களில் முக்கியமான டேக்கிள்களும் (14 டேக்கிள் பாயின்ட்கள்) செய்து மாஸ் காட்டினார். ஹரியானா ஸ்டீலர்சுக்கு எதிரான ஒரே போட்டியில் மட்டும் 39 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த கபடி உலகையும் மெர்சலாக்கினார் பவன். இனி வரும் சீசன்களிலும் அவரது ஆதிக்கம் நிச்சயம் தொடரும்.


Pardeep Narwal ( prokabaddi.com )

பர்தீப் நர்வால் - பாட்னா பைரேட்ஸ்

சொல்லப்போனால் பவனைவிட மோசமான நிலைமை பர்தீப்புடையது! கடந்த ஆண்டு இரண்டாவது ரெய்டர் சரியாக இல்லையென்று ஜாங் குன் லீயை இந்த சீசன் வாங்கினார்கள். அவர் தேசிய அணிக்காக விளையாடச் சென்றுவிட, சரியான இரண்டாவது ரெய்டர் இந்த முறையும் அமையவில்லை. டிஃபன்ஸ் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஒரு முறை பர்தீப் அவுட்டாகி பெஞ்சில் அமர்ந்துவிட்டால், அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வர நான்கைந்து நிமிடங்கள் ஆகிவிடும். அவரை `ரிவைவ்’ செய்ய அங்கு தரமான ஒரு ஆள்கூட இல்லை! சமயங்களில் அணி ஆல் அவுட் ஆகி ரீ என்ட்ரி கொடுக்கும்போதுதான் பர்தீப் உள்ளே வருவார். பல போட்டிகளில் எதிரணிகள் அவரை 15-20 நிமிடங்கள் வரை வெளியில் அமரவைத்தே வெற்றிபெற்றன. இருந்தாலும், தான் களத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் இந்த டுப்கி கிங். தொடக்கத்தில் சில போட்டிகளில் சொதப்பினாலும், போகப் போக பர்தீப்பின் உண்மை முகத்தைக் கண்டனர் ப்ரோ கபடி ரசிகர்கள். இந்த சீசனில் 304 புள்ளிகள் குவித்த பர்தீப், பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான போட்டியொன்றில் 36 புள்ளிகள் எடுத்து மிரட்டினார். அதுமட்டுமல்லாமல் 15 சூப்பர் ரெய்டுகள் வேறு!


Naveen Kumar ( prokabaddi.com )

நவீன் குமார் - தபாங் டெல்லி

இந்த சீசனின் மிகப்பெரிய சென்சேஷன். இந்திய கபடியின் இளம் சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். தபாங் டெல்லி, சாம்பியன் பட்டத்துக்கு மிக அருகில் வந்ததற்கு மிகமுக்கியக் காரணம் இந்த 20 வயது இளம் சூறாவளிதான். இப்படியொரு கன்சிஸ்டென்ட்டான ஆட்டத்தை பர்தீப், பவன் போன்றவர்கள்கூட ஆடியதில்லை. அவர்களைப்போல் 20, 30 புள்ளிகள் எடுக்காவிட்டாலும் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 10 புள்ளிகளாவது எடுத்துவிடுவார் நவீன். ஒவ்வொரு போட்டியிலும்! ப்ரோ கபடி வரலாற்றில் யாரும் செய்திடாத சாதனையாக, தொடர்ந்து 22 `சூப்பர் 10' எடுத்து தன் பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் இவரை சில நிமிடங்கள் பெஞ்சில் அமரவைக்க, டெல்லியின் வசமிருந்த போட்டி அப்படியே கைமாறியது. அதுவே சொல்லும் இந்த இளம் வீரரின் முக்கியத்துவத்தை. புயல் வேகத்தில் இவர் செய்யும் ரன்னிங் ஹேண்ட் டச்கள் `நவீன் எக்ஸ்பிரஸ்’ என்ற செல்லப்பெயரை இவருக்குப் பெற்றுத்தந்திருக்கின்றன. 303 புள்ளிகள் எடுத்திருந்தும், இறுதிப்போட்டியில் கண்ணீர் சிந்தி வெளியேறிய இந்த இளம் புயல், அடுத்து வரும் சீசன்களில் சூறாவளியாய் சுழன்றடிக்கும்!


Fazel ( prokabaddi.com )

ஃபசல் அத்ரசாலி - யு மும்பா

யு மும்பா அணியின் உயிர்நாடி, அவர்களின் கேப்டன் ஃபசல்தான்! 82 டேக்கிள் புள்ளிகள் எடுத்து, இந்த சீசனின் டாப் டிஃபண்டராகியிருக்கிறார். இவர் முகாமிட்டிருக்கும் மும்பையின் இடது கார்னரைக் குறிவைக்க, எப்பேர்ப்பட்ட ரெய்டருமே யோசித்தார்கள். ஆங்கிள் ஹோல்ட், தை ஹோல்ட், பேக் ஹோல்ட் என அனைத்து வித்தைகளையும் அச்சு பிசகாமல் அரங்கேற்றும் ஃபசல் அனைத்து ரெய்டர்களையுமே மிரட்டினார். சராசரியாக ஒவ்வொரு போட்டிக்கும் 3.2 டேக்கிள் புள்ளிகள் என்பதெல்லாம் அபாரமான செயல்பாடு. இருந்தாலும், கடந்த சீசனைவிட இந்த முறை இவரது செயல்பாடு சற்றே குறைவுதான். ஆனாலும், யு மும்பாவை இவர் வழிநடத்திய விதம், இந்த சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான் என்று சொல்லவைத்திருக்கிறது. ஒரு இரானிய வீரர், இந்திய வீரர்களை மேட்டில் வழிநடத்துவது சாதாரண விஷயமல்ல. மொழி மிகப்பெரிய பிரச்னை. ஆனால், ஃபசல், அதையெல்லாம் மிக சாதுர்யமாகக் கையாண்டார். எப்போதும் ஆர்வக்கோளாறாக இருக்கும் சுர்ஜித்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ரெய்டர்கள் ரெய்டுக்குச் செல்லும்போதெல்லாம், `ரைட் கார்னரைக் குறிவை, கவர் பிளேயர்ஸ்கிட்ட ஜாக்கிரதையா இரு’ என ஒவ்வொரு முறையும் ஆலோசனை கொடுத்து அனுப்பியது, அதையெல்லாம்விட களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அத்தனையையும் சிரித்துக்கொண்டே செய்தது… உண்மையிலேயே ஹாட்ஸ் ஆஃப் ஃபசல்.


Sumit ( prokabaddi.com )

சுமித் - யு.பி.யோதாஸ்

பொதுவாக ஒரு ரெய்டர் மிட் லைனைத் தொடப்போகும்போது, டிஃபண்டர்கள் பேக் ஹோல்ட் மூலம் அவர்களைப் பிடிப்பார்கள். இல்லையேல், பாக் லைனில் ஆடும்போது எதிர்த்திசையில் இருக்கும் டிஃபண்டர்கள் வந்து பிடிப்பார்கள். ஆனால், பவன் ஷெராவத்துக்கு சுமித் போட்ட பேக் ஹோல்ட் இருக்கிறதே… அதைப் பார்த்து மிரளாதவர்கள் இருக்க முடியாது. போனஸ் லைனில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார் பவன். அதுவும் சுமித்தின் கார்னரிலேயே. அப்படியான இடத்தில் பேக் ஹோல்ட் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சுமித், அதை சாத்தியப்படுத்தினார். லேசாக தன் வலதுபுறம் சாய்ந்து, அப்படியே காற்றில் பறந்து பவனையும் கட்டிப்பிடித்து இழுத்தார். பவன் சுதாரித்த நேரம், இருவரும் கீழே கிடந்தார்கள். மற்ற டிஃபண்டர்கள் உதவ ஓடிவருவதற்கு முன்பாகவே விசில் ஊதினார் நடுவர். அப்படியொரு கிடுக்குப்பிடி. டேக்கிள் ஆஃப் தி சீசன் விருதே வழங்கலாம். அப்படியொரு டேக்கிள். அது மட்டுமல்ல, இந்த சீசனின் ஒவ்வொரு போட்டியிலுமே தன் அபார செயல்பாட்டால் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தினார் சுமித். 77 டேக்கிள் புள்ளிகள் எடுத்து, இடது கார்னரில் ஃபசலுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆடிய இந்த 20 வயது வீரருக்கு இதுதான் முதல் சீசன்! நம்பமுடியவில்லை அல்லவா. ஆம், அவரது செயல்பாடு அப்படித்தான் இருந்தது. ஆச்சர்யமே இல்லாமல், இந்த சீசனின் புதிய இளம் வீரருக்கான விருதை வென்றவரும் இவரே!


Nitesh Kumar ( prokabaddi.com )

நிதேஷ் குமார் - யு.பி.யோதாஸ்

தொடக்கத்தில் அநியாயத்துக்கும் சொதப்பிய யு.பி.யோதாஸ் அணிக்கு உயிர்கொடுத்ததே நிதேஷ் - சுமித் கூட்டணிதான். ரெய்டர்கள் அவ்வப்போது சொதப்பினாலும், இவர்கள் தொடர்ந்து கன்சிஸ்டென்ட்டாக ஆடியதால்தான் அந்த அணி லீக் சுற்றைத் தாண்ட முடிந்தது. வலது கார்னரில் அந்த அணியின் மிகப்பெரிய அரணாய் உருவெடுத்திருக்கும் நிதேஷ் இந்த சீசனில் எடுத்த டேக்கிள் புள்ளிகள் 75! இது மிகச்சிறந்த நம்பரா என்றால், நிச்சயம் ஆம் தான் சொல்லவேண்டும். ஆனால், நிதேஷுக்கு? கண்டிப்பாக இல்லை. ஆறாவது சீசனில் 100 டேக்கிள் புள்ளிகள் எடுத்து மகத்தான சாதனை படைத்தவரின் செயல்பாடு, கொஞ்சம் குறைந்திருக்கிறதுதான். ஆனால், அவரது தாக்கம் எந்த வகையிலும் அந்த அணியில் குறைந்துவிடவில்லை. ஒருகட்டத்தில் தொடர்ந்து 5 போட்டிகளில் அந்த அணி வென்றபோது, இவர் ஒவ்வொரு போட்டியிலும் 4 அல்லது 5 டேக்கிள் புள்ளிகள் எடுத்துக்கொண்டிருந்தார். ஒருசில போட்டிகளில், அவருடைய ஸ்பெஷாலிட்டியான ஆங்கிள் ஹோல்ட் காலை வாரியது. இல்லாவிடில் இந்த முறையும் சதத்தை நெருங்கியிருப்பார். அடுத்த சீசனில் நிதேஷ், சுமித் கூட்டணி அத்தனை ரெய்டர்களையும் பந்தாடுவது உறுதி!