Published:Updated:

`அதே டெய்லர், அதே வாடகை'! வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas vs Telugu Titans ( Pro Kabaddi )

கடைசி 3 நிமிடங்கள் இருக்கும்போது 38-29 என 9 புள்ளிகள் முன்னிலையோடு இருந்தது தமிழ் தலைவாஸ். வெற்றி பெற மிகச் சிறந்த வாய்ப்பு இருந்தது. இப்போது மறுபடியும் ஒரு சொதப்பல். அதுவும் மெகா சொதப்பல்.

Published:Updated:

`அதே டெய்லர், அதே வாடகை'! வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்!

கடைசி 3 நிமிடங்கள் இருக்கும்போது 38-29 என 9 புள்ளிகள் முன்னிலையோடு இருந்தது தமிழ் தலைவாஸ். வெற்றி பெற மிகச் சிறந்த வாய்ப்பு இருந்தது. இப்போது மறுபடியும் ஒரு சொதப்பல். அதுவும் மெகா சொதப்பல்.

Tamil Thalaivas vs Telugu Titans ( Pro Kabaddi )

இரண்டு ஆண்டுகள் நடக்காத ப்ரோ கபடி தொடர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. புதிய சீசன், புதிய வீரர்கள் என் பெரும் மாற்றத்தோடு இந்தத் தொடர் ஆரம்பித்திருந்தாலும் தமிழ் தலைவாஸுக்கு என்னவோ முடிவுகள் முன்பைப் போலத்தான் இருக்கும்போல. 37 நிமிடங்கள் முன்னிலையில் இருந்த, நிச்சயம் வெற்றி பெறவேண்டிய போட்டியில், கடைசி 3 நிமிடங்கள் சொதப்பி கோட்டை விட்டிருக்கிறது தலைவாஸ் அணி!

யு மும்பா அபார வெற்றி!

நேற்று நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ், யு மும்பா அனிகள் களம் கண்டன. ஸ்டார் ரெய்டன் பவன் குமார் ஷெராவத் இருப்பதால், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், தங்கள் அட்டகாசமான டிஃபன்ஸல் அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கினார் யு மும்பா வீரர்கள். பவனால், பெரிய அளவு சோபிக்க முடியாமல் போனாலும், தமிழக வீரர் சந்திரன் ரஞ்சித் அந்த அணிக்குத் தேவையான நேரங்களில் புள்ளிகள் பெற்றுக்கொடுத்தார். ஆனால், எதிர்முனையில் அபிஷேக் சிங் ஒன் மேன் ஷோ நிகழ்த்தி, ஆட்டத்தை மாற்றிவிட்டார்.

ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலேயே ஆல் அவுட் ஆன புல்ஸ் அணியால், போட்டியின் எந்தக் கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 25-வது நிமிடத்தில்தான் அபிஷேக் சிங்கை அவர்களால் முதல் முறையாக அவுட்டாக்க முடிந்தது. அவர்கள் டிஃபன்ஸ் அந்த அளவுக்கு சொதப்பலாக இருந்தது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்து பவன் குமாரே டேக்கிள் செய்ய முற்பட்டு அவுட் ஆனார்.

இந்தப் போட்டியில் யு மும்பா பயிற்சியாளர் ராஜகுருவின் முடிவுகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன. ஒருகட்டத்தில் யு மும்பா ஆல் அவுட் ஆவது போல் இருந்தது. 3 வீரர்கள்தான் களத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் அஜித்தை எடுத்துவிட்டு ரைட் கார்னர் வீரரான ராகுலைக் களமிறக்கினார் ராஜகுரு. வந்த வேகத்தில் பவனை டேக்கிள் செய்து மீண்டும் யு மும்பாவை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தது.

U Mumba vs Bengaluru Bulls
U Mumba vs Bengaluru Bulls
Pro Kabaddi

கேப்டன் ஃபசல் அத்ரச்சாலி ஒரேயொரு டிஃபன்ஸிவ் பாயின்ட் எடுத்திருந்தாலும், ஹரேந்திரா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்கு முதல் வெற்றியைப் பரிசளித்தனர். இறுதியில் 46-30 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது அந்த அணி. அபிஷேக் சிங் 19 புள்ளிகள் குவித்து அசத்தினார். 14 ரெய்டுகள் சென்ற சந்திரன் ரஞ்சித் 13 புள்ளிகள் எடுத்தார். 21 ரெய்டுகள் சென்றிருந்தாலும், 12 புள்ளிகளே எடுத்தார் பவன் குமார்.

சொதப்பிய தமிழ் தலைவாஸ்

இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. அணியின் புதிய ரெய்டர்களான பிரபஞ்சன், மஞ்சீத், பவானி ராஜ்புத் தங்கள் முதல் ரெய்டிலேயே பாயின்ட் எடுத்தனர். இருந்தாலும், ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய டைட்டன்ஸ், எட்டாவது நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸை ஆல் அவுட் செய்தது. 5-4 என முன்னிலையில் இருந்த நம் அணி, அடுத்தடுத்து 9 புள்ளிகளைத் தாரை வார்த்துக் கொடுத்தது. 13-19 என தமிழ் தலைவாஸ் பின்தங்கியிருந்தபோது ஒரு அட்டகாசமான சூப்பர் ரெய்ட் செய்தார் மஞ்சீத். அதன்மூலம் ஒரு சூப்பர் கம்பேக் கொடுத்த நம் அணி, 19-வது நிமிடத்தில் டைட்டன்ஸை ஆல் அவுட் ஆக்கியது. முதல் பாதி முடிவில் 23-21 என முன்னிலையும் பெற்றிருந்தது.

Tamil Thalaivas vs Telugu Titans
Tamil Thalaivas vs Telugu Titans
Pro Kabaddi

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் தேசாய் பெரும்பாலும் பெஞ்சிலேயே உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், டைட்டன்ஸுக்கு அவ்வளவு எளிதாக புள்ளிகள் கிடைத்திடவில்லை. போதாக்குறைக்கு டிஃபண்டர் சுர்ஜித் தமிழ் தலைவாஸுக்கு புள்ளிகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தார்.

இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு மிகப்பெரிய தவறு செய்தது. எதிரணியில் 3 வீரர்களே இருந்தனர். அப்படியொரு சூழ்நிலையில், பிரபஞ்சன், மஞ்சீத் இருவரையும் வைத்துக்கொண்டு பவானியை ரெய்டுக்கு அனுப்பினர். சூப்பர் டேக்கிளில் அவர் அவுட்டாக, டைட்டன்ஸுக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. அதன்பிறகு அவர்கள் கை கொஞ்சம் ஓங்கியது. இருந்தாலும் மறுபடியும் ஒரு கம்பேக் கொடுத்து 31-வது நிமிடத்தில் அந்த அணியை ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ். 33-28 என முன்னிலையும் பெற்றிருந்தது.

கடைசி 3 நிமிடங்கள் இருக்கும்போது 38-29 என 9 புள்ளிகள் முன்னிலையோடு இருந்தது தமிழ் தலைவாஸ். வெற்றி பெற மிகச் சிறந்த வாய்ப்பு இருந்தது. இப்போது மறுபடியும் ஒரு சொதப்பல். அதுவும் மெகா சொதப்பல். டூ ஆர் டை ரெய்டுக்கு வந்தார் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் மாற்று வீரர் தீரஜ். அவரை 30 நொடிகள் ஆடவிட்டு நெறுக்கடி ஏற்படுத்தியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, மோஹித் அட்டாக் செய்ய, தப்பித்து 2 புள்ளிகளோடு சென்றார் தீரஜ். போதாக்குறைக்கு சித்தார்த்தையும் ரிவைவ் செய்தார். போட்டி ஒட்டுமொத்தமாக மாறியது. தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆக 39-38 என டைட்டன்ஸ் முன்னிலையும் பெற்றது.

கடைசியில் ஒருவழியாக உருண்டு பிரண்டு 40-40 என போட்டியை டிராவாக்கியது நம் அணி. கடைசி ரெய்டில் மஞ்சீத் தப்பித்திருந்தாலும் நாம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், டூ ஆர் டை ரெய்டிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.

Pardeep Narwal
Pardeep Narwal
Pro Kabaddi

பர்தீப் நர்வாலும் சொதப்பல்

பவன் குமார், சித்தார்த் தேசாய் ஆகியோர் சூப்பர் 10 எடுத்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவர்களின் செயல்பாடு சுமாராகவே இருந்தது. அடுத்த போட்டியில் விளையாடிய பர்தீப் நர்வால் அதைவிட சுமாராகவே விளையாடினார். யு.பி.யோதாஸ் அணிக்கான அவரது முதல் போட்டியில் 8 புள்ளிகள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் கலக்கிய ஆல்ரவுண்டர் இஸ்மாயில் நபிபக்‌ஷ், இந்தப் போட்டியிலும் பட்டையைக் கிளப்பினார். அட்டாக்கில் 8, டிஃபன்ஸில் 3 என 11 புள்ளிகள் பெற்றார். சுகேஷ் ஹெக்டே, மனிந்தர் சிங் போன்றவர்களும் தங்கள் பங்களிப்பைச் செய்ய, 38-33 என வெற்றி பெற்றது வாரியர்ஸ்.