புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் தனது 4-ஆவது போட்டியில் கடந்த சீசன் சாம்பியனான பாட்னா பைரேட்ஸை நேற்று எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 33- 32 என பாட்னாவைத் தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றிருக்கிறது தமிழ் தலைவாஸ் .
இரு அணிகளும் முதல் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினர். கடைசிநேர திக்... திக்... நிமிடங்களில் சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றியை ருசித்தது. குறிப்பாக சப்ஸ்டிடியூட் வீரராகக் களமிறங்கிய ஹிமான்ஷு சிங் அதிரடி ஆட்டத்தை ஆடினார். ஒரு ரெய்டில்கூட பிடிபடாமல் சூப்பர் 10 எடுத்து தமிழ் தலைவாஸ் வெற்றிக்குப் பெரிதும் பங்காற்றினார். தோல்வியிலிருந்து மீண்டு தமிழ் தலைவாஸ் தனது முதல் வெற்றியைப் பெற்றத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காயம் காரணமாக பவன் இந்த ஆட்டத்திலும் களமிறங்கவில்லை. அருமையான டோ டச் மூலம் முதல் ரெய்டில் முதல் புள்ளியை தமிழ் தலைவாஸுக்கு எடுத்துக் கொடுத்தார் நரேந்தர் கண்டேலா. வழக்கம்போல இந்த ஆட்டத்திலும் ரெய்டில் அதிரடி பெர்பார்மன்ஸை ஆடினார் .

கடந்த போட்டியில் யு மும்பா அணிக்கு எதிராக சூப்பர் 10 எடுத்த நிலையில் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி 9 ரெய்டு புள்ளிகளை எடுத்தார்.
நன்றாகத் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபென்டர்கள் முதல் டேக்கிளில் பாட்னா பைரேட்ஸ் வீரரை லாகவமாகப் பிடித்து அசத்தினர். சிறப்பாக தொடங்கிய ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் தவறான டேக்கிள்களால் மெல்ல மெல்ல ஆட்டத்தின் வேகத்தை (momentum) இழந்தனர் தமிழ் தலைவாஸ். இதனால் முதல் பாதி ஆட்டத்திலேயே முதலிலேயே ஆல் அவுட் ஆனது தமிழ் தலைவாஸ். முதல் பாதி முடிவில் 16-15 என பாட்னா பைரேட்ஸ் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தைத் தொடங்கிய இரு அணிகள் பாட்னா பைரேட்ஸ் அதிரடியாக விளையாடி புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் ஆடிக்கொண்டிருந்தனர். அந்த அணியில் ரோகித் ,சச்சின் ரெய்டிலும் சுனில் டிபன்சிலும் சிறப்பாக ஆடியதால் தமிழ் தலைவாஸ் மீண்டும் ஒரு ஆல் ஆவுட்டை சந்தித்தது.
அடுத்த ஆல் அவுட் நோக்கி சென்று கொண்டிருந்த போது சப்ஸ்டியூட் வீரராக களம் இறங்கிய ஹிமான்ஷு சிங்முதல் ரெய்டிலயே சூப்பர் ரெய்டு எடுத்து அணியை ஆல் அவுட் ஆகாமல் காப்பாற்றினார்.

ஆட்டத்தின் திருப்புமுனையாக ஹிமான்ஷு சிங்கின் ஆட்டம் இருந்தது .இதை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .10 ரெய்டுகள் சென்று பிடிபடாமல் 11 ரெய்டு புள்ளிகள் பெற்று சூப்பர் 10ன் எடுத்தார் ஹிமான்ஷு. கடைசி ஐந்து நிமிடங்கள் ஆட்டத்தின் திக் திக் நிமிடங்களாக இருந்தன . 29- 26 என முன்னிலையில் இருந்த பாட்னா பாரிஸ் ஹிமான்ஷ சிங்கின் சிறப்பான ரெய்டு மற்றும் சாகரின் முக்கியமான டேக்கிள்களால் பாட்னா பைரேட்ஸை ஆல் அவுட் செய்தது. அதன் பின் பிரஷர் இல்லாமல் தமிழ் தலைவாஸ் சூப்பராக ஆடினர். கடைசி ஒரு சில நிமிடங்களில் ஹிமான்ஷு சிங் 2 புள்ளிகள் அடித்து மாஸ் காட்டினார். இறுதியாக 33- 32 என கணக்கில் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ். இது தமிழ் தலைவாஸ் க்கு முதல் வெற்றி ஆகும். முதல் ஆட்டம் டையில் முடிய அடுத்த இரண்டு போட்டியில் கடுமையாக தோல்வியை சந்தித்தது தமிழ் தலைவாஸ். மூன்று முறை சாம்பியன் ஆன பாட்னா பைரேட்ஸை தமிழ் தலைவாஸ் வென்றது ஒரு தரமான சம்பவமே. முதல் வெற்றியை பெற்றாலும் சொதப்பலான டிபன்ஸ் ஆட்டம் ஆடியதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது . குறிப்பாக சாகர், மோஹித், சாஹல் ஆகியோர் ஏமாற்றத்தை தந்தனர். மொத்தமாகவே 7 டேக்கிள் புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தனர். ஒரு சூப்பர் டேக்கிளை கூட டிபன்ட்டர்கள் எடுக்கவில்லை. ஆட்டத்தில் நல்ல மொமெண்டம் இருந்தாழும் அதை தவறான டேக்கிள்கள் மூலம் இழக்கின்றனர் தமிழ் தலைவாஸ். கேப்டனாக இருக்கும் சாகர் மற்றும் சாஹில் பார்மிற்கு திரும்ப வேண்டும்.
ஹிமான்ஷு சிங் சிறப்பாக ஆடவில்லை என்றால் கண்டிப்பாக தமிழ் தலைவாஸ் தோற்று இருக்கும். தற்போது அணியில் பவன் விளையாடவில்லை என்றாலும் நரேந்தர் கண்டேலா அவருக்கு துணையாக இளம்வீரர் ஹிமான்ஷ சிங் ஆகியோர் தமிழ் தலைவாஸ்க்கு பலம் கொடுப்பார்கள் .இவர்களுடன் தமிழக வீரர் விஸ்வநாத் ரெய்டுகளில் பலமாகயிருப்பார். இதைப்போல் டிஃபன்ட்டர்களும் கை கொடுத்தால் நிச்சயமாக வரும் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வெற்றிகளை குவிக்க முடியும்.