புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது 11வது போட்டியை நேற்று முன்தினம் ஆடி முடித்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வென்று அசத்திருக்கிறது தமிழ் தலைவாஸ். இந்தப் போட்டியில் 35 - 34 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதன் முறையாக 3-வது இடத்தை பிடித்திருக்கிறது தமிழ் தலைவாஸ். கடந்த ஐந்து போட்டிகளாக ஒரு தோல்விகள் கூட இல்லாமல் வெற்றி முகமாகவே இருக்கின்றனர்.

தமிழ் தலைவாஸின் இந்த சீசன் செயல்பாடுகளை பயிற்சியாளர் அசன் குமார் வருகைக்கு முன் வருகைக்கு பின் என வகைப்படுத்தலாம். ஏனென்றால் அவர் வந்த பிறகுதான் தமிழ் தலைவாஸ் சிறப்பான அதிரடியான ஆட்டங்களைக் களத்தில் வெளிப்படுத்தி வருகின்றது. இளம் வீரர்களை வழி நடத்தி, கடைசி 11வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணியைத் தற்போது ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பைப் பெறும் அளவுக்கு உருமாற்றி இருக்கிறார் பயிற்சியாளர் அசன் குமார்.
தமிழ் தலைவாஸ் அணியின் தொடர் வெற்றிகள் பற்றியும் பயிற்சியாளர் அசன் குமார் பற்றியும் ஓர் விரிவான அலசல் இங்கே...
பவன் காயமும் தமிழ் தலைவாஸ் தொடர் தோல்விகளும்:
பவன் குமாரை இரண்டு கோடிக்கும் அதிகமாகக் கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் வாங்கி இருந்தது. இந்த சீசனில் பவனை நம்பி மட்டும்தான் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. தமிழ் தலைவாஸ் ரசிகர்களுமே பவனின் வருகையால் உற்சாகமடைந்தனர்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டேக்கிள் செய்யும் பொழுது முட்டி மடங்கி பவனுக்குக் காயம் ஏற்பட்டது. அடுத்து தமிழ் தலைவாஸ் விளையாட ஆடிய எந்தப் போட்டியிலும் பவன் களமிறங்கவில்லை.
காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டார் பவன் குமார்.
பவன் குமார் இல்லாததால் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. ரெய்டர்கள் நன்றாக ஆடினால் டிஃபன்டர்கள் சொதப்புவார்கள். டிஃபன்டர்கள் நன்றாக ஆடினால் ரெய்டர்கள் சொதப்புவார்கள். தமிழ் தலைவாஸிடம் ஒரு அணியாக ஒருங்கிணைந்த பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படவே இல்லை.
பயிற்சியாளர் உதயகுமார்
கடந்த சீசன் மற்றும் இந்த சீசனின் சில போட்டிகள் வரை பயிற்சியாளர் உதயகுமாரோடு களமிறங்கியது தமிழ் தலைவாஸ். ஒரு வெற்றிக்கான தேடல் அவரிடம் காணப்படவில்லை. டிஃபன்சிவ்வான அணுகுமுறையே அவரிடம் அதிகம் காணப்பட்டது. ஸ்டார்டிங் 7-ல் இரண்டே இரண்டு ரெயடர்களோடும் ஐந்து டிஃபென்டர்களோடுதான் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது.

ஏழு புள்ளிகள் வித்தியாசத்துக்குள் தோல்வி அடைந்தால் தோற்றாலும் ஒரு புள்ளி கிடைக்கும் என்பதால் அந்த ஒரு புள்ளியை எடுக்கும் முனைப்புடன்தான் அவரது பயிற்சியின் கீழ் தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் அக்ரசிவ்வாக ரெய்டு பாயின்ட்டுகளுக்கு முயற்சி செய்யாமல் நிறைய போட்டிகளில் எம்ப்டி ரெய்டுகளை செய்து வந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்த அணுகுமுறையே உதயகுமாரின் வெளியேற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
பயிற்சியாளர் அசன் குமார்
தற்போது தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக வென்று வருகிறது. இந்த வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணம் புதிதாக வந்திருக்கும் பயிற்சியாளர் அசன் குமாரும் அவரின் அணுகுமுறையுமே. உள்ளூர் போட்டிகள் முதல் வெளிநாட்டு அணிகள் வரை பயிற்சியளித்த அனுபவமுள்ள பயிற்சியாளர் அசன் குமார். அவர் வந்த பிறகுதான் வெற்றிக்கான ஆக்ரோஷம் தமிழ் தலைவாஸ் வீரர்களிடம் வெளிப்பட்டது. அசனின் வருகைக்குப் பிறகு அணியில் ஓர் ஒருங்கிணைப்பு உண்டானது.
ரெய்டில் நரேந்தர் கண்டோலாவை மட்டும் நம்பி இருக்காமல் அவருக்கு அடுத்தபடியாக அஜிங்கியா பவர் திறமையாக ஆட ஆரம்பித்தார். நரேந்தர் களத்தில் இல்லையென்றாலும் அஜிங்கியா பவரால் புள்ளிகள் எடுக்க முடியும் என்ற நிலை உருவானது.
டிஃபென்டர் அபிஷேக் வெறித்தனமாக ஆட ஆரம்பித்தார். கேப்டன் சகார் ஃபார்முக்குத் திரும்பினார். களத்தில் வீரர்களிடம் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்தது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கைக் கொடுத்து எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற முடியும் என நிரூபித்திருக்கிறார் பயிற்சியாளர் அசன் குமார். களத்தில் அவர் கொடுக்கும் ஆலோசனைகளும் அவர் முன்னெடுக்க சொல்லும் அக்ரசிவ் அப்ரோச்சும் தமிழ் தலைவாஸ் அணிக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தின.
இவரது அக்ரசிவ் அணுகுமுறை காரணமாகப் போட்டிகளில் முதல் பாதியிலேயே அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையை எட்டி விடுகிறது. இரண்டாம் பாதியில் அந்த முன்னிலையை தக்கவும் வைக்கிறது.
நாயகன் நரேந்தர் கண்டோலா
கேலோ இந்தியா கபடி போட்டியில் அதிரடி காட்டிய ஃபார்மோடு பிகேஎல் சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காகக் களமிறங்கினார் நரேந்தர் கண்டோலா. பவன் இல்லாத சமயத்தில் அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் நரேந்தர் மேல்தான் இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் நரேந்தர் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அறிமுகமான முதல் சீசனிலேயே இதுவரை 11 போட்டிகள் விளையாடி 115 வரை புள்ளிகளை எடுத்துள்ளார் நரேந்தர். அவரின் அதிரடி ஆட்டத்தினால் தமிழ் தலைவாஸ்க்குத் தொடர் வெற்றிகள் கிடைத்திருக்கின்றன.
ஓர் இளம் வீரராக பிரஷர் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியில் ஆடுகிறார். பலம் வாய்ந்த தபாங் டெல்லி அணியுடன் மோதும் பொழுது 21 ரெய்டு சென்று 27 ரெய்டு புள்ளிகளை எடுத்து அதிரடி காட்டினார். பல சூப்பர் 10களை எடுத்து தமிழ் தலைவாஸின் ஸ்டார் ரெய்டராக நரேந்தர் மாஸ் காட்டுகிறார்.
கேப்டன் சாகர்
பவன் காயம் காரணமாக விளையாடாததால் தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சாகர் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர் அசன்குமார் வந்த பிறகுதான் சாகரின் ஆட்டம் வேறு விதமாக மாறியது. இரண்டு ஆட்டங்கள் பொறுப்புடன் விளையாடி கம்பேக் கொடுத்திருக்கிறார். அதிக சோலோ டேக்கிள் மூலம் புள்ளிகளை எடுத்து அதிரடியாக ஆடுகிறார். கடந்த இரு போட்டிகளில் இரண்டு முறை ஹை 5 எடுத்து தமிழ் தலைவாஸ் டிஃபன்ஸ்க்குப் பலமாக இருக்கிறார். இவரது ஃபார்ம் அடுத்து வரும் போட்டிகளில் முக்கியமானதாக அமையும்.
Do or die ஸ்பெஷலிஸ்ட் அஜிங்கிய பவார்
தமிழ் தலைவாஸ் அணியின் அடுத்த ஸ்டார் ரைடராக அஜிங்கிய பவார் உள்ளார்.
தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரே ரெய்டில் 6 புள்ளிகள் எடுத்து தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். அந்த ரெய்டில் டேக்கிள் நிகழ்த்தினாலும் ஈசியாக நலுவி பாய்ந்து நடுக்கோட்டை தொட்டு இந்த சீசனில் ஒரே ரெய்டில் அதிக புள்ளிகளை எடுத்து அசத்தினார்.
Do or die ரெய்டு மற்றும் சூப்பர் டேக்கிள் சூழ்நிலையில் பிரஷர் இல்லாமல் விளையாடி புள்ளிகளை எடுக்கிறார். முக்கியமான நேரங்களில் டேக்கிள்கள் நிகழ்த்தி ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்ஸை கொடுக்கிறார் அஜிங்கியா பவார். இவரது ஃபார்ம் தமிழ் தலைவாஸ் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.
தமிழ் தலைவாஸ் இப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் பல தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.