புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டிருந்தது. தொடர் தோல்விகளில் சிக்கித் தவித்த தமிழ் தலைவாஸ் அணி இந்தப் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தால் 38- 27 என அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை புள்ளிப் பட்டியலில் கடைசியாக 11-வது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியிருப்பது எதிர்பார்த்திடாத ட்விஸ்ட்.

ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழ் தலைவாஸ் நிரூபித்திருக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை தமிழ் தலைவாஸ் அணியின் ஒவ்வொரு மூவுமே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
தனிப்பட்ட காரணங்களால் தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் உதயகுமார் விலகியதையடுத்து புதிய பயிற்சியாளர் அசன் குமாரோடு தமிழ் தலைவாஸ் களமிறங்கியிருந்தது. பயிற்சியாளர் அசன் குமார் இளம்வீரர்களை ஊக்கப்படுத்தி தமிழ் தலைவாஸ் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.
தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் வீரர்களின் ஆக்ரோஷம் களத்தில் வெறித்தனமாக வெளிப்பட்டது.
முதல் ரெய்டில் டச் நிகழ்த்தி முதல் புள்ளியை எடுத்தார் நரேந்தர் கண்டோலா. அதிரடியாக விளையாடி இந்தப் போட்டியிலும் சூப்பர் 10 எடுத்து அசத்தினார். டிஃபென்டர்கள் கடுமையாக முயன்று டேக்கிள் புள்ளிகளைப் பெற்றனர். குறிப்பாக டிஃபென்டர் அபிஷேக் நிகழ்த்திய அசத்தலான டேஷ் டேக்கிள்கள் எதிரணி வீரர்களுக்குச் சவாலாக இருந்தது.

முதல் ஆறாவது நிமிடத்திலேயே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் அதிரடி வீரர் அர்ஜுன் தேஸ்வால் இந்தப் போட்டியில் ஸ்டார்டிங் 7-ல் களம் இறக்கப்படவில்லை. தமிழ் தலைவாஸின் மிரட்டலான ஆட்டத்தைக் கண்டு அர்ஜுன் தேஷ்வாலைக் களமிறக்கியது ஜெய்ப்பூர். தமிழ் தலைவாஸின் ஆட்டம் எப்படியிருந்தது என்பதை இதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம். முதல் பாதி முடிவில் 20 - 8 என முன்னிலை வகித்தது தமிழ் தலைவாஸ்.
இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் சிறந்த ஆட்டத்தை ஆடியதால் தொடக்கத்தில் மீண்டும் ஒரு ஆல் அவுட் ஆனது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ். இதன் பிறகு, சற்று சுதாரித்துக் கொண்டு கொஞ்சம் கவனமாக ஆடியது ஜெய்ப்பூர். அதிரடி வீரர் அர்ஜுன் தேஷ்வால் சில ரெய்டு புள்ளிகளை எடுத்தார். கடைசி 10 நிமிடங்களில் 30 - 13 எனத் தமிழ் தலைவாஸ் முன்னிலையில் இருந்தாலும் எதிரணி வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் தமிழ் தலைவாஸ் ஒரு ஆல் அவுட்டைச் சந்தித்தது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் கடைசி நிமிடங்கள் வரை வெற்றிக்காக போராடியது. ஆனாலும் தமிழ் தலைவாஸ் இறுதியில் 38 -27 என அசத்தலான வெற்றியைப் பெற்றது.

#Giveitallmachi என்பது தமிழ் தலைவாஸ் டேக்லைன். அது வார்த்தை மட்டுமல்ல, களத்திலுமே அத்தனை உழைப்பையும் கொடுத்து அதை நிஜமாக்கியிருக்கிறது தமிழ் தலைவாஸ். பயிற்சியாளர் அசன் குமார் வீரர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையாலும் உத்வேகத்தாலும் அடுத்தடுத்த போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணிக்கு வெற்றிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.