புரோ கபடி லீகின் 9-வது சீசன் இன்று பெங்களூரில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. பெங்களூரு, புனே, ஹைதராபாத் என மூன்று நகரங்களில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் கடந்த சீசனின் சாம்பியனான தபாங் டெல்லி, யு மும்பா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
தமிழ் தலைவாஸ் உட்பட இந்த சீசனில் ஆடவிருக்கும் 12 அணிகளின் சிறப்புகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களைப் பற்றி இங்கே ஓர் அதிவிரைவு அலசல்..
தமிழ் தலைவாஸ்:

பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழ் தலைவாஸ் அணி பவன் குமார் தலைமையில் இந்த சீசனில் விளையாடுகிறது. அணியின் பெரும் பலமாக பவன் குமார் மட்டுமே உள்ளார். இவரை 2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. பவன் குமாரை மட்டும் சார்ந்திருக்காமல் பிற வீரர்களும் வெற்றிக்காக உழைத்திட வேண்டும். ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்படுவது தமிழ் தலைவாஸூக்கான சவாலாக இருக்கும். கடந்த சீசன்களின் மோசமான பெர்ஃபார்மென்ஸை மறந்து இந்த சீசனிலிருந்து புதிய பயணத்தைத் தமிழ் தலைவாஸ் தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
தபாங் டெல்லி:

கடந்த 8-வது சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. 'நவீன் எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும் நவீன் குமார் டெல்லி அணியை வழிநடத்த உள்ளார். நவீன் குமார் திறன்மிக்க வேகமான ரைடராகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். ஆனால் நவீன் குமாரை மட்டுமே டெல்லி அணி அதிகமாகச் சார்ந்திருக்கிறது. கடந்த சீசனில் நவீன் காயமடைந்த போது விஜய் மாலிக் முன்னேறினாலும் நவீன் ஓரங்கட்டப்பட்ட போது தபாங் டெல்லி மந்தமாக விளையாடியது. நடப்பு சாம்பியனான டெல்லி அணி இந்த முறையும் அதே ஆதிக்கத்தைத் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
பாட்னா பைரேட்ஸ்:

மூன்று முறை புரோ கபடி சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. சிறந்தத் தடுப்பாட்ட வீரர் முகமது ரேசா சியானே அணியின் பெரும் பலமாக உள்ளார். கடந்த சீசனில் 89 தடுப்பாட்ட புள்ளி பெற்று சிறந்த டிஃபெண்டராகவும் விளங்கினார். அணியின் முக்கிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருப்பது பாட்னாவிற்குச் சாதகமாக உள்ளது. சியானே களத்தில் இல்லாத சமயங்களில் பாட்னா எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பது கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.
பெங்கால் வாரியர்ஸ்:

புரோ கபடி சீசன் 7-ல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஒரு வலிமைமிக்க கேப்டனாக மந்திர் சிங் தலைமையில் பெங்கால் வாரியர்ஸ் களமிறங்கவுள்ளது. மந்திர் சிங் ஒரு ரைடராக மிகச்சிறப்பாகச் செயல்படுவார். ஆனால் தீபக் நிவாஸ் ஹோடா மற்றும் மந்திர் சிங் இருவரும் மூத்த வீரர்கள் என்பதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிக்கலை உண்டாக்கலாம். இதையும் பெங்கால் அணி சமாளித்தாக வேண்டும்.
பெங்களூரு புல்ஸ்:

கடந்த மூன்று சீசன்களிலும் டாப் 10 ரைடர்களின் பட்டியலில் இடம்பிடித்த விகாவு கண்டோலா அணியில் இருப்பது பெரும்பலம். அணியின் தடுப்பாட்ட வீரர்களும் வெற்றிக்கு முக்கிய பங்களிக்கக்கூடியவர்களே. இந்த முறை பவன் அணியில் இல்லை. பவனின் வெற்றிடத்தை விகாஷால் நிரப்புவது கடினமாக இருக்கும் என அனுமானிக்கப்படுகிறது.
குஜராத் ஜெயண்ட்ஸ்:

புரோ கபடியின் 5-வது சீசனில் இரண்டாவது இடம் பிடித்த அணி. மூன்று முறை சாம்பியனாகியிருக்கும் பாட்னா பைரேட்ஸ் வென்றதற்கு காரணமாக இருந்த பயிற்சியாளர் ராம் மெஹர் சிங் தற்போது குஜராத் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளராக உள்ளார். இது ஒரு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. தடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரர்கள் நிரம்பிய அணி. அதேநேரத்தில், திறன்மிக்க ரைடர்கள் அணியில் இல்லாததும் பாதகமான விஷயமே.
ஹரியானா ஸ்டீலர்ஸ்:

ஜெய்தீப் குல்தீப் அணியின் முக்கியமான வீரர். தடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு புள்ளிகளை குவிப்பார். கடந்த சீசனில் 66 தடுப்பாட்டப் புள்ளிகள் பெற்றுள்ளார். சிறந்த ரைடர்களும் டிபண்டர்களும் சரிசமமாக உள்ள அணியாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி களமிறங்குகிறது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்:

அர்ஜுண்டேஸ்வால், அஜித்குமார் ராகுல் சவுத்ரி என பலமான ரைடர்கள் அணியில் உள்ளனர். ஆனால் கடந்த சீசனில் நிலையான வெற்றியை பெற்றுத் தர முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை. அதை இந்த சீசனில் மாற்றிக் காட்டும் முனைப்போடும் புதிய நம்பிக்கையோடும் களமிறங்குகிறது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்.
புனேரி பல்தான்:

சிறந்த வெளிநாட்டு வீரர்களில் ஒருவரான ஃபாசல் அட்ராச்சாலி அணியை வழிநடத்த உள்ளார். திறமையான ரைடர்கள் மட்டும் டிபன்ட்டர்கள் அணியில் உள்ளனர். கடந்த சீசன்களை விடச் சிறப்பாகச் செயல்படும் முனைப்புடன் புனேரி பல்தான்ஸ் களமிறங்குகிறது.
தெலுங்கு டைட்டன்ஸ்:

காயம் காரணமாக சித்தார்த் தேசாய் கடந்த சீசனில் விளையாடவில்லை. மீண்டு வந்திருக்கும் அவர் இந்த சீசனில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான ரைடர்கள் மற்றும் தற்காப்பு வீரர்களை சரிவிகித கலவையாக கொண்ட அணியாக விளங்குகிறது தெலுங்கு டைட்டன்ஸ்.
யு மும்பா:

சிறந்த தடுப்பாட்ட வீரராக ரிங்கோ அணியில் உள்ளார். இளம் வீரர்களை அதிகம் கொண்ட அணியாக யு மும்பா களமிறங்கப்போகிறது. துடிப்பான இளம் வீரர்களைக் கொண்டிருப்பது பலம்தான் என்றாலும் அனுபவமிக்க மூத்த வீரர்கள் இல்லாதது அழுத்தமிக்க இக்கட்டான தருணங்களில் அணிக்குப் பின்னடைவாக இருக்கலாம்.
யூபி யோத்தாஸ்:

தலைசிறந்த ரைடர் பிரதீப் நர்வால் தலைமையில் யுபி யோத்தா களம் காண உள்ளது. நிதீஷ் குமார் மற்றும் சுமித் வலிமையான டிஃபென்டர்களாக அணியைக் காக்கின்றனர். வலிமை மிக்க ரைடர்கள் மற்றும் டிஃபென்டர்கள் கொண்ட வலுவான அணியாக யுபி யோத்தா களமிறங்க உள்ளது.
பெருத்த எதிர்பார்ப்புகளுடன் திருவிழா கொண்டாட்டமாக புரோ கபடி லீக் 9வது சீசன் களைகட்ட போகிறது. இனி அடுத்த சில மாதங்களுக்கு `கபடி... கபடி...' என்கிற சத்தம் அதிரப்போகிறது. புரோ கபடி லீகின் 9வது சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார்?