Published:Updated:

LSG v RCB: ரஜத் பட்டிதரின் அபார சதமும் ராகுலின் தொடர் சொதப்பலும்; எலிமினேட்டரைத் தாண்டிய ஆர்சிபி!

LSG v RCB ( IPL )

மெகா ஏலத்தில் பட்டிதர் Unsold ஆகியிருந்தார். லவ்னித் சிசோடியா எனும் வீரருக்கு பதிலாக ரீப்ளேஸ்மெண்டாகவே எடுக்கப்பட்டார். எதிர்பார்ப்பே இல்லாமல் உள்ளே வந்து மிகமிக முக்கியமான இன்னிங்ஸை ஆடி சதமடித்திருக்கிறார்.

LSG v RCB: ரஜத் பட்டிதரின் அபார சதமும் ராகுலின் தொடர் சொதப்பலும்; எலிமினேட்டரைத் தாண்டிய ஆர்சிபி!

மெகா ஏலத்தில் பட்டிதர் Unsold ஆகியிருந்தார். லவ்னித் சிசோடியா எனும் வீரருக்கு பதிலாக ரீப்ளேஸ்மெண்டாகவே எடுக்கப்பட்டார். எதிர்பார்ப்பே இல்லாமல் உள்ளே வந்து மிகமிக முக்கியமான இன்னிங்ஸை ஆடி சதமடித்திருக்கிறார்.

Published:Updated:
LSG v RCB ( IPL )
பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை எடுத்து முடித்தவுடன் சமூக வலைதளங்களில் ஒரு மீம் அதிகமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. 'பொல்லாதவன்' படத்தின் கருணாஸ் வசனம் பேசும் டெம்ப்ளேட்டை மையமாகக் கொண்ட அந்த மீமில் பெங்களூருவின் பௌலர்கள் `10 ஓவருக்கு இந்த ஸ்கோரு போதும் மிச்சம் 10 ஓவருக்கு என்னா பண்றது' என கேட்பது போல அமைந்திருக்கும். வேடிக்கையாக போடப்பட்டிருந்த மீம் நிஜமாவதை போன்றுதான் பெங்களூருவின் பௌலிங் இருந்தது. ஆனாலும் எப்படியோ சமாளித்து ஒரு வழியாக 14 ரன்கள் வித்தியாசத்தில் எலிமினேட்டரில் லக்னோவை பெங்களூரு வீழ்த்தியிருக்கிறது.
KL Rahul - Faf Du Plessis
KL Rahul - Faf Du Plessis
RCB

"அவசரப்படாமல் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் பவர்ப்ளேயில் நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும். செட்டில் ஆகிவிட்டு பிற்பகுதியில் முடிந்தளவு ரன்கள் அடிக்க வேண்டும்."

டாஸைத் தோற்ற பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளெஸ்ஸி இப்படிப் பேசியிருந்தார். ஆனால், அவரே இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அவுட் ஆகியிருந்தார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மோஷின் கான் ஓவர் தி விக்கெட்டில் குட்லெந்தில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே திரும்புமாறு வீச எதிர்கொண்ட முதல் பந்திலேயே டு ப்ளெஸ்ஸி எட்ஜ் ஆகி வெளியேறியிருந்தார். நின்று ஆட வேண்டும் எனச் சொன்ன கேப்டனே டக் அவுட் ஆகியிருந்தாலும் அவர் கூறியபடிதான் பெங்களூருவின் இன்னிங்ஸ் இதற்கு மேல் முன்னேறியிருந்தது. பவர்ப்ளேயில் மேற்கொண்டு விக்கெட்டுகள் எதையும் இழக்காமல் 52-1 என முடித்திருந்தனர். விராட் கோலியும் ரஜத் பட்டிதரும் நன்றாகவே ஆடியிருந்தனர்.

ரஜத் பட்டிதர் அதிரடியாக வெளுத்து வாங்க, விராட் கோலி ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். ஆவேஷ் கானின் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்த பட்டிதர், க்ரூணால் பாண்டியா வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் இன்னும் அதிகமாகச் சீறினார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 20 ரன்களை இந்த ஓவரில் சேர்த்திருந்தார். பட்டிதரின் ஆட்டமே பவர்ப்ளேயில் பெங்களூருவைக் காப்பாற்றியிருந்தது. நீண்ட நேரமாக ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் பெரிய ஷாட் ஆடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஆவேஷ் கானின் ஷார்ட் பாலை கோலி அட்டாக் செய்ய முயன்றார்.

LSG v RCB
LSG v RCB
IPL

ஆனால், அது அவர் எதிர்பார்த்த மாதிரி சிக்ஸர் ஆகாமல் தேர்டு மேனில் பவுண்டரி லைனுக்கு அருகே கேட்ச் ஆனது. கோலி 24 பந்துகளில் 25 ரன்களை அடித்து அவுட் ஆனார். குஜராத்துக்கு எதிராக ஃபார்முக்கு வந்ததை போல் வெறியாட்டம் ஆடிய கோலி மீண்டும் சொதப்பியதில் ரசிகர்கள் ஏமாற்றமே. கோலி அவுட்டாக அடுத்து மேக்ஸ்வெல் உள்ளே வந்தார். வந்த வேகத்திலேயே மைதானத்தைவிட்டு பந்துகளை வெளியே பறக்கவிட வேண்டும் என்பதே அவரின் எண்ணம். பிஷ்னோயின் ஓவரில் 4 டாட்களை ஆடியிருந்தார். நான்குமே பெரிய ஷாட்களுக்கான முயற்சிகள் மட்டுமே. எப்படியோ ஒரு வழியாக 5 வது பந்தை சிக்ஸராக்கினார். க்ரூணால் பாண்டியா வீசிய அடுத்த ஓவரிலும் இதே மனேநிலையில் ஆடியவர் ஸ்கொயர் லெகில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக வந்த லாம்ரோரும் நீண்ட நேரம் நிற்கவில்லை. ரவி பிஷ்னோயின் ஓவரில் கவர்ஸில் ராகுலிடம் கேட்ச் ஆகியிருந்தார். 14வது ஓவரில் தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். இதன்பிறகுதான் ஆட்டமே ஆரம்பித்தது.

ஏற்கெனவே ரஜத் பட்டிதர் நன்றாக செட்டில் ஆகி அரைசதத்தை கடந்திருந்தார். கூடவே தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து கொள்ள கடைசி சில ஓவர்கள் பட்டாசாக இருந்தன. தினேஷ் கார்த்திக் க்ரீஸூக்குள் வந்தவுடனேயே ஸ்பின்னரை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுதான் கொஞ்சம் திகிலாக இருந்தது. பிஷ்னோயிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் திணறித்தான் போயிருந்தார். ஒரு lbw க்கு அப்பீல் சென்று அம்பயர்ஸ் கால் வந்து தப்பிக்கவெல்லாம் செய்திருந்தார். இந்த ஓவரைக் கடந்த பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷன் ப்ளாக்தான்!

ரவி பிஷ்னோய் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தையே தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்துக் கொடுக்க, ரஜத் பட்டிதர் மீதமிருந்த 5 பந்துகளையும் துவம்சம் செய்தார். மூன்று சிக்சர்கள் + இரண்டு பவுண்டரிகளோடு இந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் வந்திருந்தன.
Rajat Patidar
Rajat Patidar
RCB

இந்த ஒரு ஓவர் மட்டுமில்லை. இந்த இன்னிங்ஸ் முழுவதுமே பட்டிதர் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டிருந்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே அரைசதத்தை அடித்திருந்தார். பிஷ்னோய் மற்றும் க்ரூணாலுக்கு எதிராக 22 பந்துகளில் 58 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 263.

எல்லாரையும் மிரட்டிய மோஷின் கானுக்கு எதிராக ஒரு அசால்ட்டான சிக்ஸரை அடித்து சதத்தையும் நிறைவு செய்திருந்தார். லக்னோவை பொறுத்தவரைக்கும் ரஜத் பட்டிதர் ஒரு அவுட் ஆஃப் சிலபஸ் வீரர்தான். அவர் இந்த அடி அடிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

முக்கியமான வீரர்களான கோலி, டு ப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் மூவரும் இணைந்து எடுத்த ரன்கள் 34 மட்டுமே. இந்த மூவரும் பெரிதாக பங்காற்றாமலேயே பெங்களூரு அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து பார்த்தால்தான் ரஜத் பட்டிதரின் இன்னிங்ஸின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர வேண்டும்.

மெகா ஏலத்தில் பட்டிதரை யாருமே வாங்கவில்லை. Unsold ஆகியிருந்தார். லவ்னித் சிசோடியா எனும் வீரருக்கு பதிலாக ரீப்ளேஸ்மெண்டாகவே பெங்களூரு அணி இவரை எடுத்திருந்தது. எதிர்பார்ப்பே இல்லாமல் உள்ளே வந்து மிகமிக முக்கியமான இன்னிங்ஸை ஆடிவிட்டு சென்றிருக்கிறார். தொடக்கத்திலிருந்தே நேர்த்தியாக எங்குமே தொய்வின்றி ஆடிக்கொண்டிருந்தார். லக்னோ ஃபீல்டர்களின் கேட்ச் ட்ராப்புகளும் அவருக்கு துணையாக இருந்தன. பட்டிதருக்கு ஈடுகொடுத்து கடைசிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் ஆவேஷ் கான், சமீரா போன்றோரின் ஓவர்களில் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். தினேஷ் கார்த்திக்கிற்கும் கேட்ச் ட்ராப்கள் மூலம் தங்களால் இயன்ற உதவியை லக்னோ ஃபீல்டர்கள் செய்திருந்தனர்.

KL Rahul
KL Rahul
IPL
இவர்களின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 84 ரன்கள் வந்திருந்தன. இன்னிங்ஸின் முடிவில் பெங்களூரு அணி 207 ரன்களை எடுத்திருந்தது. ரஜத் பட்டிதர் 112 ரன்களோடும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களோடும் நாட் அவுட்டாக இருந்தனர்.

பிளேஆஃப்ஸ் போட்டிகளில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்டிருக்கும் டார்கெட் 200தான். ஐ.பி.எல் வரலாற்றிலேயே பிளேஆஃப்ஸில் 200+ டார்கெட்டை எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. அந்த அசாத்தியத்தை நிகழ்த்திக்காட்டும் முனைப்போடு லக்னோ களமிறங்கியது. முதல் ஓவரிலேயே சிராஜின் பந்தில் மிட் ஆனில் டீகாக் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனாலும் லக்னோ அணி தடுமாறவில்லை. தொடர்ந்து சிறப்பாகவே ஆடியது. 10க்கு மேல் ரன்ரேட்டை மெயிண்டெயின் செய்து கொண்டே இருந்தது. பவர்ப்ளேயில் மட்டும் 62 ரன்களை எடுத்திருந்தார்கள். நம்பர் 3-ல் வந்த மனன் வோரா ஒன்றிரண்டு சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்தாலும் பவர்ப்ளேயிலேயே ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆகினார். நம்பர் 4-ல் தீபக் ஹூடா இறங்கியிருந்தார். கே.எல்.ராகுல் நின்று நிதானமாகவும் சில இடங்களில் அதிரடியாகவும் ஆடியிருந்தார். சிராஜ் வீசிய 6வது ஓவரில் அடிக்கடி எல்லைக்கோட்டை கடக்க வைத்து 17 ரன்களைக் குவித்திருந்தார். இப்படியாக லக்னோவின் ரன்ரேட் பெரிதாக எங்கேயும் விழாமல் கொண்டு சென்றனர்.

தீபக் ஹூடாவும் ராகுலும் அரைசதத்தைக் கடந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை நோக்கி நகர்ந்தனர். அடித்தேயாக வேண்டிய சூழலில் தீபக் ஹூடா ரிஸ்க் எடுத்து ஹசரங்காவின் பந்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவரின் பந்திலேயே அவுட்டும் ஆனார். ராகுலும் நிலைமையை உணர்ந்து பெரிய ஷாட்களை அடிக்க ஆரம்பித்தார். 14-17 இந்த 4 ஓவர்களில் மட்டும் 58 ரன்கள் வந்திருந்தன. ஹேசல்வுட், ஹசரங்கா ஓவர்களில் எல்லாம் மரண அடி அடிக்கப்பட்டிருந்தது. கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தன. தொடக்கத்தில் ஒரு மீமை குறிப்பிட்டிருந்தேனே அது நிஜமாவதை போன்றே இருந்தது. ஆனால், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் நிலைமை மாறியது. ஆட்டம் பெங்களூருவின் கைக்குள் வந்தது.

Hazelwood | LSG v RCB
Hazelwood | LSG v RCB
IPL
இந்த ஓவரில் ராகுல் 79 ரன்களில் ஒரு ரேம்ப் ஷாட் அடிக்க முயன்று ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆகியிருந்தார். அடுத்த பந்திலேயே க்ரூணால் பாண்டியாவும் ஹேசல்வுட்டிடமே கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது.

கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை. சமீராவும் எவின் லீவிஸூம் க்ரீஸில் இருந்தபோதும் லக்னோவால் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போனது.

பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது லக்னோ ஃபீல்டிங்கில் எக்கச்சக்க தவறுகளைச் செய்திருந்தது. ஏகப்பட்ட மிஸ் ஃபீல்டுகளையும் கேட்ச் ட்ராப்புகளையும் நிகழ்த்தியிருந்தனர். ரஜத் பட்டிதருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்குமே கேட்ச்சுகளை விட்டுருந்தனர். அதையெல்லாம் சரியாகச் செய்திருந்தாலே பெங்களூரு 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்காது. மேலும், பெங்களூரு டார்கெட்டை டிஃபண்ட் செய்த போது அவர்களின் ஃபீல்டிங் அட்டகாசமாக இருந்தது. ஹசரங்கா மட்டுமே குறைந்தபட்சமாக ஒரு 15 ரன்களை சேவ் செய்திருந்தார். இதுமட்டுமல்லாமல் லக்னோவின் பேட்டிங் ஆர்டரும் குழப்பமாக இருந்தது.

ஹோல்டர் நம்பர் 8-ல்தான் வருகிறார். அவரை எங்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் மட்டுமே அவரை பென்ச்சில் வைக்கிறோம்.
கே.எல்.ராகுல்

என ராகுல் டாஸில் பேசியிருந்தார். ஹோல்டரை வீணாக்கக்கூடாது என நினைத்த ராகுல் எவின் லீவிஸை கடுமையாக வீணாக்கியிருக்கிறார். டாப் ஆர்டரில் இறக்கிவிட்டால் மனிதர் சூறாவளியாகச் சுழன்றடிப்பார். பேட்டை வீசினாலே பவுண்டரியும் சிக்ஸரும்தான். ஆனால், அவரை நம்பர் 6-ல் இறக்கிவிட்டு நம்பர் 3-ல் மனன் வோராவை இறக்கியதை எப்படிப் புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. 6 பந்துகளை எதிர்கொண்ட லீவிஸ் 2 ரன்களோடு நாட் அவுட்டாக இருந்தார். ஒரு பிரயோஜனமுமில்லை. லீவிஸையும் ராகுல் முழுமையாக வீணடிக்கவே செய்தார். கடைசிவரை நின்றுவிட்டு மேட்ச்சை முடிக்காமல் டெத் ஓவரில் அவுட்டாகி செட்டிலாக நேரமே இல்லாத சூழலில் மற்றவர்கள் மீது மொத்த பாரத்தையும் இறக்கும் கே.எல்.ராகுலின் தடுமாற்றமும் இப்போதுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தத் தவறுகளெல்லாமே பெங்களூருவிற்குச் சாதகமாகிப்போனது.

RCB
RCB
IPL
விளைவு, கடந்த இரண்டு சீசன்களிலும் எலிமினேட்டரிலேயே வெளியேறிய பெங்களூரு அணி, இந்த முறை எலிமினேட்டரை தாண்டி தகுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. `ஈ சாலா...' கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கான பயணத்தில் பெங்களூரு மேலும் ஒரு படியை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறது. கனவு முழுமையாக நிறைவேறுமா?