Published:Updated:

SRH vs GT: வில்லியம்சன் ஸ்கெட்ச்; ஃபார்முக்குத் திரும்பும் சன்ரைசர்ஸ்; குஜராத்தின் முதல் தோல்வி!

Williamson ( IPL )

வில்லியம்சனின் ஸ்ட்ரைக் ரேட் 123தான். கடந்த போட்டியில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 80 ஆகத்தான் இருந்தது. இரண்டு போட்டிகளிலுமே அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ஆனால்...

Published:Updated:

SRH vs GT: வில்லியம்சன் ஸ்கெட்ச்; ஃபார்முக்குத் திரும்பும் சன்ரைசர்ஸ்; குஜராத்தின் முதல் தோல்வி!

வில்லியம்சனின் ஸ்ட்ரைக் ரேட் 123தான். கடந்த போட்டியில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 80 ஆகத்தான் இருந்தது. இரண்டு போட்டிகளிலுமே அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ஆனால்...

Williamson ( IPL )
முரட்டுத்தனமாக ஆடி அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே பெற்று பீஸ்ட் மோடில் சென்று கொண்டிருந்த குஜராத் அணி ஒரு புல் தடுக்கி விழுந்ததை போன்று சன்ரைசர்ஸ் அணியிடம் வீழ்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்கிற வரலாற்றையே மறந்துவிட்டு கோக்குமாக்காக ஆடிக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணி மீண்டும் பழைய ஃபார்மிற்குத் திரும்புவதற்கான அறிகுறியை வெளிக்காட்டியிருக்கிறது.

கடந்த போட்டியில் சென்னையை வீழ்த்திய நிலையில் இந்தப் போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.

வில்லியம்சன்தான் டாஸை வென்றிருந்தார். ஊர் வழக்கத்திற்கு ஒத்துப்போகும் வகையில் இவரும் சேஸிங்கையே தேர்வு செய்திருந்தார். குஜராத்தை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஸ்கோரை சேஸ் செய்தும் வென்றிருக்கிறார்கள், டிஃபண்ட் செய்தும் வென்றிருக்கிறார்கள். குஜராத் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. நல்ல ஃபார்மில் இருக்கும் கில்லும் மேத்யூ வேடும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே குஜராத் அணி 17 ரன்களை எடுத்திருந்தது. எடுத்தது என்பதைவிட புவனேஷ்வர் குமார் தானமாக அள்ளிக்கொடுத்தார் என்பதுதான் மிகச்சரியாக இருக்கும். ஏனெனில், ஒயிடாக வீசித்தள்ளி 12 ரன்களை எக்ஸ்ட்ரா வகையில் மட்டுமே இந்த ஓவரில் கொடுத்திருந்தார்.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே இவ்வளவு மோசமான முதல் ஓவரை சன்ரைசர்ஸ் வீசியதில்லை.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா
IPL

வரலாற்று சிறப்புமிக்க வகையில் மிக மோசமாக முதல் ஓவரை வீசியிருந்தாலும் அடுத்த ஓவரிலேயே முக்கியமான கில்லின் விக்கெட்டை எடுத்துக் கொடுக்கவும் புவனேஷ்வர் குமார் தவறவில்லை. கில் கவர்ஸில் பவுண்டரி ஆக்க முயன்ற அந்தப் பந்தை பாய்ந்து விழுந்து ராகுல் திரிபாதி அட்டகாசமாக கேட்ச் செய்திருந்தார். பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே சன்ரைசர்ஸுக்கு இன்னொரு விக்கெட்டும் கிடைத்திருந்தது. கடந்த போட்டியில் ஸ்பார்க் காட்டியிருந்த தமிழக வீரர் சாய் சுதர்சனை சக தமிழக வீரரான நடராஜனே வீழ்த்தியிருந்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் அந்த முதல் ஓவர் கொடுத்த உந்துதலிலேயே ரன்ரேட் சீராக முன்னேறிக் கொண்டிருந்ததால் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

உம்ரான் மாலிக் தனது முதல் பந்தையே ஏவுகணையாக ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மட்டில் இறக்க, வெறியான பாண்டியா அடுத்த இரண்டு பந்துகளையுமே பவுண்டரி ஆக்கி பதிலடி கொடுத்தார்.
Hardik Pandya
Hardik Pandya
IPL

உம்ரான் மாலிக்கின் அடுத்தடுத்த ஓவர்களிலுமே பவுண்டரிகளை அடித்து வேகவேகமாக பாண்டியா ஸ்கோர் செய்தார். அவர் எவ்வளவுதான் வேகம் கூட்டினாலும் கடைசியில் அதிவேகத்திற்கான அந்த 1 லட்ச ரூபாய் கேஷ் அவார்டை வென்றது என்னவோ உம்ரான் மாலிக்தான் என்பது சோகமே.

உம்ரான் மாலிக்கை மட்டும் வெறிகொண்டு அடித்த ஹர்திக் பாண்டியா, மற்ற பௌலர்களைப் பெரிதாக அட்டாக் செய்யவில்லை. நான்கு போட்டிகளுக்கு முன்பு வரை ஃபினிஷராகத்தான் ஆடிக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்து, முழுமையாக நம்பர் 4 பேட்டராக உருமாறியிருந்த ஹர்திக் பாண்டியா 119 ஸ்ட்ரைக் ரேட்டிலேயே 50 ரன்களைக் கடந்தார். டெத் ஓவர்களிலும் மிரட்டும்படி ஒன்றுமே செய்யவில்லை. புவனேஷ்வர் குமாரும் நடராஜனும் சேர்ந்து யார்க்கர்களாக வீசி அவரை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இடையில் அபினவ் மனோகர் உள்ளே வந்து கொஞ்சம் சுவாரஸ்யமாக ஆடியிருந்தார். நடராஜன், புவி, யான்சன், உம்ரான் மாலிக் என அத்தனை பேரின் பந்துகளிலும் பவுண்டரிகளையும் சிக்சரையும் அடித்து 35 ரன்களைச் சேர்த்திருந்தார்.
Abinav
Abinav
IPL

இவரின் ஆட்டமே குஜராத் அணி 162 என்கிற கௌரவமான ஸ்கோரை எடுக்கக் காரணமாக அமைந்தது. எப்படிப் பார்த்தாலும் இந்த ஸ்கோர் கொஞ்சம் குறைவான ஸ்கோரே. கடைசிக்கட்டத்தில் ஃபினிஷர் பாண்டியா கொஞ்சம் முகம் காட்டியிருந்தால் ஒரு பெரிய ஸ்கோரே வந்திருக்கும்.

சன்ரைசர்ஸ் அணி 163 ரன்களை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது. சென்னைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கான டார்கெட் 155. அந்தப் போட்டியில் என்ன மாதிரியான அணுகுமுறையோடு சேஸ் செய்து வென்றதோ அதையேத்தான் சன்ரைசர்ஸ் இங்கேயும் செய்திருந்தது. சுமாரான டார்கெட்தான். வேகமாக விக்கெட்டுகளை விடாமல் 20 ஓவர்கள் ஆடினாலே வெற்றி என்பதை வில்லியம்சன் உணர்ந்திருக்கிறார். இதனால் விக்கெட் விடாத வகையில் நிதானமான தொடக்கத்தை உறுதி செய்து நன்றாக செட்டில் ஆகிவிட்டு அதன்பிறகு வேகம் கூட்ட வேண்டும் என்பதே திட்டம்.

Williamson - Abishek
Williamson - Abishek
IPL

சன்ரைசர்ஸ் அணி ஆடிய முதல் இரண்டு போட்டிகளில் பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். குறிப்பாக, ஓப்பனர்கள் வில்லியம்சனும் அபிஷேக் சர்மாவும் சீக்கிரமே அவுட் ஆகியிருந்தனர். வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தும் நல்ல தொடக்கம் இல்லாமையால் சன்ரைசர்ஸ் வீழ்ந்து கொண்டிருந்தது. கடந்த இரண்டு போட்டிகளாக வில்லியம்சனும் அபிஷேக் சர்மாவும் இந்தத் தவற்றைத் திருத்தி வருகின்றனர். இந்தப் போட்டியிலுமே ஷமியும் ஹர்திக் பாண்டியாவும் வீசிய முதல் நான்கு ஓவர்களில் வில்லியம்சன், அபிஷேக் சர்மா இருவரும் ரிஸ்க்கே எடுக்கவில்லை.

இந்த 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. 24 பந்துகளில் 14 பந்துகள் டாட். வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இந்த 4 ஓவர்களுக்கு பிறகு கியரை மாற்றத் தொடங்கினர்.

ஷமி வீசிய 5 வது ஓவரில் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் வில்லியம்சன் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். ஃபெர்குசன் வீசிய அடுத்த ஓவரிலேயே 145+ கி.மீ டெலிவரிக்களை அசால்ட்டாக சமாளித்து 4 பவுண்டரிகளை அடித்திருந்தார். இந்த அதிரடிக்கு பிறகு ஒவ்வொரு ஓவரிலுமே சீராக ரன்களை எடுத்து சன்ரைசர்ஸ் அணி ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர தொடங்கியது. அபிஷேக் சர்மா 42 ரன்களில் ரஷீத்கானிடம் அவுட் ஆகி வெளியேறினார். திரிபாதி ஒரு பவுண்டரி சிக்சரோடு தசைப்பிடிப்பால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். நின்று ஆடி வில்லியம்சன் அரைசதத்தைக் கடந்தார். வில்லியம்சனின் ஸ்ட்ரைக் ரேட் 123தான். கடந்த போட்டியில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 80 ஆகத்தான் இருந்தது. இரண்டு போட்டிகளிலுமே அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

Williamson
Williamson
IPL
ஆனால், வில்லியம்சனோ இப்படியான ஸ்ட்ரைக் ரேட்டில் வேண்டுமென்றேதான் ஆடுகிறார். அவரின் கேம்ப்ளானே அதுவாகத்தான் இருக்கிறது.
SRH
SRH
IPL

கடந்த இரண்டு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கும் இதுதான் தேவைப்பட்டது. அதை வில்லியம்சன் சரியாகச் செய்து கொடுத்திருக்கிறார். இந்தப் போட்டியில் கடைசிக்கட்டத்தில் பரபரப்பு கூடுமோ எனத் தோன்றியது. ஆனால், பூரன் நேர்த்தியாக ஆடி ஆட்டத்தைச் சிறப்பாக முடித்து வைத்தார். 19.1 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

கடந்த சீசனை போன்றே சொதப்பலாகத் தொடங்கியிருந்த சன்ரைசர்ஸ், சரியான திட்டமிடல்களுடன் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று மீண்டும் பழைய ஃபார்மிற்குத் திரும்பியிருக்கிறது. அணிகளுக்கிடையேயான போட்டி அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சீசனும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.