Published:Updated:

மர்ம ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி... காயம், ஃபிட்னஸ், குல்தீப் என நெருக்கடிகளைச் சமாளிப்பாரா?

பஞ்சாப் அணிக்கு ஆடிய போது, வருண் மீது ஏகப்பட்ட அழுத்தங்கள் இருந்தது. ஆனால், அந்த சீசனில் எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றாததால் கொல்கத்தா அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது அவர் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. இதுவே அவருக்கு மிகப்பெரிய பாசிட்டிவாக அமைந்தது.

வருண் சக்ரவர்த்தி... எதிர்பார்ப்புகளை மீறி கடந்த ஐபிஎல் தொடரில் மிரட்டலாக பந்துவீசியிருந்தார் இந்தத் தமிழகத்தின் ஸ்பின்னர். அதன் விளைவாக இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தொடர்ந்து காயம் மற்றும் உடற்தகுதியின்மை காரணமாக அவரால் இந்திய அணியில் இணையவே முடியவில்லை. கடந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு எந்தப் போட்டியிலும் ஆடாத வருண் சக்ரவர்த்தி இந்த சீசனில்தான் மீண்டும் ஆடப்போகிறார். அணியில் இருக்கும் எக்கச்சக்க ஸ்பின்னர்கள், டி-20 உலகக் கோப்பை செலக்‌ஷன் என தன்முன் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் அவர்.

கட்டடக்கலை வல்லுநரான வருண் சக்ரவர்த்திக்கு டிவிஷன் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம், தமிழ்நாடு பிரீமியர் லீகில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது. 2018-ம் ஆண்டு மதுரை பேந்தர்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எகானமி 4.7 மட்டுமே. மேலும், அவரது பௌலிங் ஸ்டைலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் இரண்டையும் கலந்துக்கட்டி மிஸ்ட்ரி ஸ்பின்னராக மேஜிக் செய்தார். இந்த மர்மம்தான் வருண் சக்ரவர்த்திக்கான அடையாளமாக மாறிப்போனது.

Varun Chakravarthy
Varun Chakravarthy

ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி இவரை 8.4 கோடிக்கு ஏலமெடுத்து ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், 2019 சீசனில் வருண் சக்ரவர்த்தியால் பஞ்சாப் அணிக்காக பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதில் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தாலும் செம அடி வாங்கியிருந்தார். எஞ்சிய போட்டிகளில் காயம் காரணமாக ஆட முடியாமல் போக, அடுத்த சீசனில் அவரை விடுவித்துவிட்டது பஞ்சாப் அணி. 2020 சீசனுக்காக மீண்டும் ஏலத்துக்கு வந்தார் வருண் சக்ரவர்த்தி. இந்த முறை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இவரை 4 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாப் அணிக்கு ஆடிய போது, வருண் மீது ஏகப்பட்ட அழுத்தங்கள் இருந்தது. ஆனால், அந்த சீசனில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் கொல்கத்தா அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது அவர் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. இதுவே அவருக்கு மிகப்பெரிய பாசிட்டிவாக அமைந்தது. அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் வருண் சக்ரவர்த்தியை சிறப்பாக வழிநடத்தினார். ஃபீல்டிங்கின்போது கூட வருணை பவுண்டரி லைனுக்கெல்லாம் அனுப்பாமல் வட்டத்திற்குள்ளேயே நிற்க வைத்து பேசிக்கொண்டே இருப்பார். இதன்விளைவாக, சிறப்பாக பந்துவீசினார் வருண் சக்ரவர்த்தி.

Varun Chakravarthy
Varun Chakravarthy

கடந்த சீசனில், சென்னை அணியின் கேப்டன் தோனியை இரண்டு முறை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார். கொல்கத்தா அணியில் சுனில் நரைனின் சந்தேகத்துக்குரிய பௌலிங் ஆக்ஷன் மீது புகார் செய்யப்பட, குல்தீப் யாதவும் ஃபார்மில் இல்லாமல் போக, வருண் சக்ரவர்த்தி மட்டும் ஒற்றை நம்பிக்கையாக நின்று அணியை காப்பாற்றினார். 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எகானமி 6.84 மட்டுமே. டெல்லி அணிக்கு எதிராக அவர் எடுத்த 5 விக்கெட் ஹால், இந்திய தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியின் பெயரும் இடம்பெற்றது. ஆனால், வருண் திடீரென காயமடைய அந்த தொடரில் ஆட முடியாத நிலை உருவானது. அவருக்குப் பதிலாக நடராஜன் அணியில் இணைந்து சூப்பர் ஸ்டாராகத் திரும்பி வந்தார். இதன்பிறகு பெங்களூருவின் NCA வில் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் வருண் சக்ரவர்த்தி. அந்த சமயத்தில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் வருண் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் இந்த தொடரிலும் ஆட முடியாமல் போனது.

கோலியுடன் கூட்டணி போடுவாரா ஃபின் ஆலன்... யார் இந்த நியூஸிலாந்தின் மிரட்டல் பேட்ஸ்மேன்?!

தேடிவந்த இரண்டு மிகப்பெரிய வாய்ப்புகளை வருண் சக்ரவர்த்தியால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. சஹால் பெரியளவில் ஃபார்மில் இல்லாத நிலையில் குல்தீப் மொத்தமாக சொதப்பிக்கொண்டிருக் வருண் சக்ரவர்த்திக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கும். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்குமே கூட தேர்வு செய்யப்படும் வாய்ப்பிருந்தது. ஆனால், இப்போது மீண்டும் ஒரு முறை வருண் சக்ரவர்த்தி தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கோலியை பொறுத்தவரைக்கும் வீரர்கள் முதலில் 100% உடற்தகுதியோடு இருக்க வேண்டும் என்பதை உறுதியாக எதிர்பார்ப்பார். இந்த விஷயத்திலேயே வருண் சக்ரவர்த்தி சறுக்குவதுதான் பெரும்பிரச்னையாக இருக்கிறது. ஏற்கெனவே 29 வயதாகிவிட்டதால் உடற்பயிற்சிகளில் இன்னும் சிரத்தையெடுத்து, யோ-யோ டெஸ்ட் போன்ற தேர்வுகளில் தேர்வாகும் அளவுக்கு வருண் தயாராக வேண்டும்.

Varun Chakravarthy
Varun Chakravarthy

மேலும் கடந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு சையது முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே என எந்த தொடரிலுமே வருண் சக்ரவர்த்தி ஆடவில்லை. 2020 அக்டோபருக்குப் பிறகு நேரடியாக இப்போதுதான் ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடவிருக்கிறார். கேம் செட் ஆவதற்கு அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகள் கூட ஆகலாம். கடந்த முறை அவர் மீது எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால், இந்த முறை கொல்கத்தா அணி அவரை பெரிதாக நம்பியிருக்கிறது. ரசிகர்கள் பெரிதாக நம்புகிறார்கள். அணிக்குள்ளேயே உலகக்கோப்பை தேர்வுக்கு போட்டியாக குல்தீப் யாதவ் இருக்கிறார். இந்திய அணியின் தேர்வாளர்கள் இருவரையும் உன்னிப்பாக கவனிக்க இருக்கின்றனர். இப்படி ஏகப்பட்ட புற அழுத்தங்கள் அவரை சுற்றி இருக்கிறது.

இந்த அழுத்தங்களையெல்லாம் போட்டு உருட்டிக் கொண்டிருந்தால் அவர் பெரிய அளவில் சோபிக்கமுடியாது. இதையெல்லாம் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு அதேநேரத்தில் கூடுதல் பொறுப்புணர்ச்சியோடு ஆடும்பட்சத்தில் வருண் சக்ரவர்த்தி இந்த முறையும் ஜொலிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பு என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. இந்திய அணியில் இடம்பெறுவற்கு வருண் சக்ரவர்த்திக்கு, இரண்டாவது வாய்ப்பாகவே இந்த ஐபிஎல் சீசன் அமையப்போகிறது. அதை எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு