Published:Updated:

துபாயில் ஒழுக்க விதிகளை மீறினாரா ரெய்னா... மீண்டும் CSK-வுக்கு திரும்பமுடியுமா? #VikatanExclusive

ஒரு முழு சீசனும் விளையாடமாட்டேன் என சொல்லி அவசர அவசரமாக சுரேஷ் ரெய்னா இந்தியா வந்ததற்கான காரணம் என்ன என தொடர்ந்து சென்னை அணிக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்து வந்தோம்.

சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து திடீரென வெளியேறியதில் உண்டான அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. "பர்சனல் காரணங்களுக்காக இந்தியா சென்றுவிட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் சீசன் முழுக்க விளையாடமாட்டார். சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்துக்கு இந்த நேரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யும்" என ஆகஸ்ட் 29-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அறிவித்ததில் இருந்தே பல விஷயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீனிவாசன், ரெய்னா
ஸ்ரீனிவாசன், ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஶ்ரீனிவாசன், "அந்தக் காலத்து நடிகர்கள் போல 'தான் ஒரு பெரிய நட்சத்திரம்' என அதிக பந்தா காட்டுகின்றனர் சில கிரிக்கெட் வீரர்கள். சில நேரங்களில் சிலருக்கு வெற்றி தலைக்கு ஏறிவிடுகிறது. அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. சுரேஷ் ரெய்னா தான் இழக்கப்போகும் விஷயங்களை விரைவில் உணர்வார்" என பேட்டியளித்திருந்தார்.

``சிலருக்கு வெற்றி தலைக்கேறி விடுகிறது..!'' - ரெய்னா குறித்து ஸ்ரீனிவாசன்

பின்னர் தான் சொல்லவந்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், சென்னை அணிக்கான சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு அளவிடமுடியாதது எனவும் பேட்டியளித்தார். இதற்கிடையே துபாயில் இருந்து மீண்டும் இந்தியா வந்தது குறித்தும், ஶ்ரீனிவாசன் பேட்டி குறித்தும் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேசியிருந்தார் சுரேஷ் ரெய்னா. அதில் பஞ்சாபில் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட தன் உறவினர்கள் இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தன் குடும்பம் தனிமையில் இருப்பது கவலையளித்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

மேலும் ஶ்ரீனிவாசன் தனக்கு தந்தை போன்றவர் என்றும், மகனை கண்டிக்கும் உரிமை தந்தைக்கு உண்டு என்றும் சொன்னார். இதோடு, "நான் எப்போது வேண்டுமானாலும் சென்னை அணிக்குள் திரும்பலாம். இங்கே என்னுடைய கடமைகள் முடிந்ததும் நான் அங்கே போகத் தயார்" எனவும் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு சிக்னல் கொடுத்திருந்தார். அதேநேரம் ரெய்னாவுக்கு மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை யாரையும் எடுக்கவில்லை என்பதால் ரெய்னாவுக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது.

``மகனைத் திட்டும் உரிமை தந்தைக்கு உண்டு!''- ஸ்ரீனிவாசன் கருத்து குறித்து ரெய்னா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ஒரு முழு சீசனும் விளையாடமாட்டேன் என சொல்லி அவசர அவசரமாக சுரேஷ் ரெய்னா இந்தியா வந்ததற்கான காரணம் என்ன என தொடர்ந்து சென்னை அணிக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்து வந்தோம். அவர்கள் சொன்னது இங்கே. "பிசிசிஐ விதிகள்படி இந்தியாவில் இருந்து துபாய் போனதும் ஆறு நாள்களுக்கு ஹோட்டல் அறையிலேயே க்வாரன்டீனில் இருக்கவேண்டும். அதன்படி ஆகஸ்ட் 21-ம் தேதி துபாய் போன சிஎஸ்கே வீரர்கள் ஆறு நாள்கள் க்வாரன்டீனில் இருந்தார்கள். இந்த ஆறு நாள்கள் முடிந்ததும் அணி உத்தரவை மீறி தனக்கு நெருக்கமான ஒருவரை ஹோட்டலுக்கு வரவழைத்திருக்கிறார் ரெய்னா.

Suesh Raina
Suesh Raina

கொரோனா காலத்தில் வெளிநபர்கள் யாரும் அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளுக்குள் நுழையக்கூடாது என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் விதிமுறை மட்டுமல்ல, பிசிசிஐ-ன் விதிமுறையும் கூட. சுரேஷ் ரெய்னாவின் இந்த ரகசிய சந்திப்பு அணி நிர்வாகத்துக்குத் தெரியவர மிகவும் கோபமாகியிருக்கிறது. இந்தத் தகவல் உடனடியாக தோனிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் இந்தத் தகவலை மறுத்த ரெய்னாவிடம் சிசிடிவி காட்சிகள் எல்லாம் காட்டப்பட்டதும் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தபோதே சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வர சுரேஷ் ரெய்னா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என விவாதிக்கப்பட்டிருக்கிறது.

வீடியோ காட்சிகள் மூலம் சில விஷயங்கள் உண்மை என நிரூபணம் ஆனதும் தோனி உள்பட, சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் சுரேஷ் ரெய்னாவை கண்டித்திருக்கிறார்கள். அப்போது நிர்வாகத்திடமும், தோனியிடமும் 'நீங்கள் என்னை மிகவும் தனிமைப்படுத்தினால், காயப்படுத்தினால் அணியில் இருந்து விலகிவிடுவேன்' என எச்சரிக்கை விடுக்கும்தொனியில் சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார். அப்போது தோனிதான் ஒழுக்கவிதிகளை மீறிய ரெய்னா இந்த சீசனில் விளையாடவே வேண்டியதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார். உடனடியாக தோனியின் முடிவு சென்னை அணியின் உரிமையாளர் ஶ்ரீனிவாசனுக்கும் சொல்லப்பட்டு, ரெய்னாவுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பப்பட்டார்'' என்கிறார்கள்.

Suresh Raina
Suresh Raina

இதற்கிடையே சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குள் வரவிரும்பினாலும், இப்போது சிஎஸ்கே நிர்வாகத்தையும் மீறி இந்த விவகாரம் பிசிசிஐ-க்கு சென்றுவிட்டது. ஒழுக்கவிதிகளை கடைபிடிக்காத சுரேஷ் ரெய்னா மீது கொஞ்சமும் இரக்கம் காட்டவேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறது பிசிசிஐ. அதனால் ரெய்னா, மீண்டும் சென்னை அணிக்குள் வருவது சந்தேகம்தான். ஆனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கியப்பிறகு சென்னை அணியின் பயணம் எப்படியிருக்கிறது என்பதைப் பொருத்து காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்கிறார்கள். ரெய்னாவுக்கு பதிலாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலனை எடுக்கலாம் என்கிற யோசனையை சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே போதுமான அளவுக்கு வெளிநாட்டு வீரர்கள் அணிக்குள் இருப்பதால் ரெய்னாவுக்கு பதில் உள்நாட்டு வீரரை எடுப்பதுதான் சரியாக இருக்கும், அதனால் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம் என சிஎஸ்கே நிர்வாகத்துக்குள் பேசப்பட்டிருக்கிறது. இதற்கிடையே சுரேஷ் ரெய்னா விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக, சுரேஷ் ரெய்னா விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு