Ipl-2021 banner
Published:Updated:

சுரேஷ் ரெய்னா சென்னையில்தான் இருக்கிறார்... ஆனால், ஏன் இன்னும் தோனியுடன் பயிற்சியில் இணையவில்லை?!

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா ( Twitter )

துபாய் ஹோட்டலில் க்வாரன்டீனில் இருந்தபோது தடையைமீறி சுரேஷ் ரெய்னா ரகசிய சந்திப்பை நிகழ்த்தினார் என்பதே அவர் வெளியேறக்காரணம் எனச் சொல்லப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சி முகாம் தோனி தலைமையில் நேற்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. தோனி கடுமையாக பயிற்சி செய்துவருகிறார். தோனி உள்ளிட்ட வீரர்களின் பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

இதற்கிடையே கடந்த ஆண்டு சென்னையில் பயிற்சி முடித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக துபாய் வரை சென்ற சுரேஷ் ரெய்னா திடீரென அணியில் இருந்து வெளியேறினார். துபாய் ஹோட்டலில் க்வாரன்டீனில் இருந்தபோது தடையைமீறி சுரேஷ் ரெய்னா ரகசிய சந்திப்பை நிகழ்த்தினார் என்பதே அவர் வெளியேறக்காரணம் எனச் சொல்லப்பட்டது. கடந்த சீசனில் இப்பிரச்னைக் காரணமாக சுரேஷ் ரெய்னா வெளியேற்றப்பட்டாலும் அவரை அணியில் இருந்து சிஎஸ்கே நிர்வாகம் நீக்கவில்லை. அவரை இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கும் தக்கவைத்துக்கொண்டது.

இப்போது தோனி தலைமையில் சிஎஸ்கே வீரர்கள் சென்னை பயிற்சியைத் தொடங்கிவிட்டார்கள். சூப்பர் கிங்ஸின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னாவும் சென்னையில்தான் இருக்கிறார். ஆனால், அவர் ஏன் இன்னும் பயோபப்புளுக்குள், சிஎஸ்கே கேம்புக்குள் நுழையவில்லை என விசாரித்தோம்.

#Raina #Dhoni
#Raina #Dhoni

"சுரேஷ் ரெய்னா கடந்த வாரமே சென்னை வந்துவிட்டார். சமீபத்தில் ஒரு விருதுவிழாவில் கலந்துகொண்டார். நாளை பேட்மின்டன் தொடர்பான விழாவிலும் சென்னையில் கலந்துகொள்கிறார். நிறைய விளம்பர கமிட்மென்ட்களை அவர் நிறைவேற்றவேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர் இன்னும் சிஎஸ்கே பயோபப்புளுக்குள் நுழையவில்லை. மார்ச் 15-ம் தேதியோடு அவரது விளம்பர படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. அதன்பிறகு கிரவுன் பிளாஸாவில் க்வாரன்டீனில் இருந்துவிட்டு மார்ச் 21-ம் தேதி முதல் பயிற்சியில் இறங்குவார்" என்கிறார்கள் சிஎஸ்கே அணிக்கு நெருக்கமானவர்கள்.

இந்தாண்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சிஎஸ்கே தனது போட்டிகளைத் தொடங்கிவிடவேண்டும் என வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை ரசிகர்கள்!
Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு