2020 ஐ.பி.எல் தொடரில் ஹர்ஷல் படேல் விளையாடியிருந்தது வெறும் ஐந்தே போட்டிகள்தான். டெல்லி அணியில் இருந்த அவருக்கு, ரபாடா, நார்கியா, இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. போதாதற்கு அவேஷ் கான் என்ற இளம் வீரர் வேறு வந்துகொண்டிருக்கிறார். இப்படியிருக்கையில் ஹர்ஷல் படேலின் எதிர்காலம் எப்படி இருந்திருக்கும். ஆனால், இன்று அவர் இந்திய அணி வீரர். தன் அறிமுக சர்வதேச போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வாங்கியிருக்கிறார். என்ன மாற்றம் நடந்தது? அதுதான் இந்த வீடியோவில்.
ஒரு RCB வீரர்தான் IPL தொடரில் டாப் விக்கெட் டேக்கர் என்பதை நம்மால் நம்ப முடியுமா? அதுவும் 32 விக்கெட்டுகள் எடுத்து ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பிராவோவின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார் ஹர்ஷல் படேல். யாருமே எதிர்பாராத வகையில் ஒரு uncapped இந்திய வீரர் இவ்வளவு சிறப்பாகப் பந்துவீசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால், ஹர்ஷல் RCB அணிக்கு வந்ததே ஒரு வகையில் ஆச்சர்யமான விஷயம்தான்.
2020 சீசனில் ஹர்ஷல் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தார். 2018-ம் ஆண்டு வாங்கப்பட்ட அவர் 3 சீசன்களிலும் சேர்த்தே 12 போட்டிகளில்தான் விளையாடியிருந்தார். இந்நிலையில் திடீரென 2021 ஏலத்திக்கு முன்பு டிரான்ஸ்ஃபர் மூலம் அவரை வாங்கியது RCB. இத்தனைக்கும் அப்போது நடந்துகொண்டிருந்த சையது முஷ்தாக் அலி தொடரிலும் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. அப்படி இருந்தும் அவரை பெங்களூரு அணி ஏன் வாங்கியது என்பது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
இப்போது அதற்கான பதிலைக் கூறியிருக்கிறார் RCB அணியின் Head of Scouting மலோலன் ரங்கராஜன். முன்னாள் தமிழக கிரிக்கெட்டரான இவர்தான் கடந்த 2 ஆண்டுகளாக, வீரர்கள் தேர்வில் பெங்களூரு அணியின் முக்கிய அங்கமாக விளங்கிவருகிறார். இவர் வருகைக்குப் பிறகுதான் நிறைய uncapped வீரர்கள் பெங்களூரு அணியில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அவர் கொடுத்த பிரத்யேகமான பேட்டியில் ஹர்ஷல் படேல் வாங்கப்பட்டதன் காரணத்தை விளக்கியிருக்கிறார் அவர்! அதை மேலே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.