Published:Updated:

IPL 2021 : தோனி சந்தித்த அந்த 17 பந்துகளும், #CSK-வின் விடை தெரியாத பேட்டிங் ஆர்டரும்! #Dhoni

தோனி
தோனி

சமீபமாக தோனி லெக் ஸ்பின்னுக்கு அதிகம் திணறுகிறார் என்பதால் ராகுல் திவேதியாவை தொடர்ந்து வீச வைத்தார் சாம்சன். எதிர்முனையில் இடக்கை பேட்ஸ்மேனாக ஜடேஜா நிற்கிறார். அவரிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருந்தால் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியாவது வந்திருக்கும். ஆனால், தோனி அப்படி செய்யவில்லை!

ராஜஸ்தான் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது #CSK. ஆனால், இந்த வெற்றியை முழுமையாக கொண்டாடும் மனநிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் இல்லை. காரணம், தோனியின் மோசமான ஃபார்ம். தோனி இந்த சீசனோடு முழுமையாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்று அனுமானிக்கப்படும் நிலையில், இறுதியாக அவரிடமிருந்து அதிரடியான இன்னிங்ஸ்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய போட்டியில் 17 பந்துகளை சந்தித்த தோனி 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்த மந்தமான பர்ஃபாமென்ஸ் தோனியின் ஃபார்ம்...பேட்டிங் ஆர்டர் குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் ரன்மழை பொழியும் வகையில் அமைந்திருப்பதை கடந்த போட்டிகளில் பார்த்திருந்தோம். ராஜஸ்தான் அணி பஞ்சாபுக்கு எதிராக 224 ரன்களையே ஏறக்குறைய எட்டிப்பிடித்துவிடும் அளவுக்கு சென்றிருந்தது. இப்படியான பிட்ச்சில் சென்னை அணி செட் செய்த 188 ரன்கள் டார்கெட் என்பது சராசரியானதே. இன்னுமே கூட 20-30 ரன்களை சென்னை அணியால் அதிகமாக அடித்திருக்க முடியும். அப்படி அடிக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் கேப்டன் தோனி. போட்டிக்கு பிறகான பரிசளிப்பு விழாவில் தோனியே அவரின் மோசமான பேட்டிங் குறித்து ஒப்புக்கொண்டார்.

13.5 ஓவர்களில் 125-5 என்ற நிலையில் இருக்கும்போது நம்பர் 7 பேட்ஸ்மேனாக தோனி உள்ளே வந்தார். சக்காரியா வீசிய முதல் பந்தையே டாட் ஆக தொடங்கினார். அடுத்து, ராகுல் திவேதியாவை அழைத்து வந்தார் சாம்சன். இந்த ஓவரின் முதல் பந்தை சிங்கிள் தட்டி தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார் ஜடேஜா. இரண்டாவது பந்தில் டைவ் அடித்து ரன் அவுட்டில் இருந்து தப்பித்த தோனி, அடுத்த மூன்று பந்துகளையும் டாட் ஆக்கி கடைசி பந்தில் மட்டும் சிங்கிள் தட்டியிருப்பார். 5 டாட்களை ஆடி ஆறாவது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார் தோனி.

Mahendra Singh Dhoni
Mahendra Singh Dhoni

சமீபமாக தோனி லெக் ஸ்பின்னுக்கு அதிகம் திணறுகிறார் என்பதால் தோனி வந்தவுடனேயே ராகுல் திவேதியாவை தொடர்ந்து வீச வைத்தார் சஞ்சு சாம்சன். எதிர்முனையில் லெக் ஸ்பின்னரை எதிர்கொள்வதற்கென்றே இடக்கை பேட்ஸ்மேனாக ஜடேஜா நிற்கிறார். அவரிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருந்தால் உறுதியாக அந்த ஓவரில் ஒரு பவுண்டரியாவது வந்திருக்கும். ஆனால், தோனி அப்படி செய்யவில்லை.

தோனியும் ஜடேஜாவும் கூட்டணியாக 21 பந்துகளை எதிர்கொண்டிருந்தனர். இதில், ஜடேஜா நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்திருந்தார். நான்கு பந்துகளிலுமே சிங்கிள் ஓடிவிட்டார். ஆனால், தோனியால் இப்படி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை. தோனி சந்தித்த 17 பந்துகளில் 7 பந்துகள் டாட்.

தோனி க்ரீஸுக்குள் வருவதற்கு முன்பு, அம்பத்தி ராயுடுவும் ரெய்னாவும் ஆடிக்கொண்டிருக்கும்போது ‘’சென்னை அணி 220+ ஸ்கோரை எட்டுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது’’ என பிரையன் லாரா கணித்திருந்தார். ஆனால், தோனி க்ரீஸுக்குள் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்.

தோனி க்ரிஸுக்குள் வருவதற்கு முன்பான 3 ஓவர்களில் சென்னை அணி 38 ரன்களை சேர்த்திருந்தது. தோனி அவுட் ஆனவுடன் வீசப்பட்ட 2.4 ஓவர்களில் 41 ரன்கள் சேர்க்கப்பட்டது. தோனி ஆடிய போது சென்னை அணி எதிர்கொண்ட 3.3 ஓவர்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. லெக் ஸ்பின்னரான ராகுல் திவேதியாவின் ஓவரில் ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்கலாம். ராஜஸ்தான் அணியில் மூன்று இடக்கை பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இடக்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சாம் கரணன் ஸ்ட்ரைக் ரேட் 200+ -ல் இருக்கிறது. அதனால் அவரை தனக்கு முன்பாக தோனி இறக்கியிருக்கலாம். இது இரண்டையுமே செய்யாமல்விட்டதுதான் அந்த 20-30 ரன்கள் குறைவுக்கு காரணம்.

தோனி
தோனி

அம்பத்தி ராயுடு க்ரீஸுக்குள் வந்தவுடனேயே பேட்டை வீசுகிறார். சாம் கரண் க்ரிஸுக்குள் வந்ததுமே சிக்சர்களை பறக்கவிடுகிறார். ஆனால், தோனியால் அப்படி செய்ய முடியவில்லை. தோனி செட்டில் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்தான் அணியின் ரன்ரேட்டை அடிவாங்க வைக்கிறது. தோனி பழைய தோனியாக இல்லை என்பது தோனி உட்பட அனைவருக்கும் தெரியும். அவரால் க்ரீஸுக்குள் வந்தவுடனேயோ அல்லது ஒன்றிரண்டு பந்துகள் ஆடிய உடனேவோ கியரை மாற்ற முடியாது. குறைந்தபட்சம் 20 பந்துகளையாவது அவர் விருப்பத்திற்கு தட்டிவிட்டு ஆடி செட்டில் ஆனப்பிறகுதான் அவரால் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியும்.

தோனி அப்படி நிதானமாக நின்று பின் வேகமெடுக்க வேண்டுமெனில், அதற்கு ஏதுவான ஆர்டரில் இறங்க வேண்டும். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நம்பர் 7-ல் இறங்கி செட்டில் ஆக டைம் எடுத்து ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரன்ரேட்டை ஆமை வேகத்துக்கு மாற்றிவிட்டார். ‘’ Horses for courses என்பதன் அடிப்படையில் சாம் கரணை தோனி இறக்கியிருக்க வேண்டும். தோனி ஃபார்முக்கு வர வேண்டும்தான். அதற்காக சிஎஸ்கேவின் ஸ்கோரிங் வாய்ப்புகளும் பாதிக்கப்படக கூடாது. தோனி நம்பர் 3-4 இல் இறங்கினால் குறைந்தபட்சம் அவருக்கு 10-12 ஓவர்களாவது ஆடுவதற்கு கிடைக்கும்’’ என பிரையன் லாரா கூறியிருந்தார்.

இதுதான் தோனிக்கான சரியான தீர்வாக இருக்கும். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கிரிக்கெட் ஆடாமல் கடந்த சீசனில் பேட்டை பிடித்தார் தோனி. ஐபிஎல் வரலாற்றில் தோனியின் மிக மோசமான சீசன் அதுதான். மொத்தமே 200 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பல போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் ஆர்டரை கீழே இறக்கிக் கொண்டே சென்றார். தோனி சுத்தமாக ஃபார்மில் இல்லை. தன்னுடைய ட்ரேட் மார்க் ஷாட்களை கூட சரியாக டைமிங் செய்யமுடியாமல் தடுமாறினார். இந்த சீசனிலும் தோனி அதையே தொடர்வதுதான் வேதனை. டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலும் கடைசிக்கட்டத்தில் நம்பர் 7-ல் வந்தவுடனேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று போல்டானார். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் நம்பர் 7-ல் இறங்கி அணிக்காகவும் ஆட முடியாமல் தனக்காகவும் ஆட முடியாமல் சொதப்பினார். கடந்த 3 சீசன்கள் மொத்தமே மூன்று முறைதான் தோனி நம்பர் 7-ல் களமிறங்கியிருக்கிறார். ஆனால், இந்த சீசனில் இறங்கிய இரண்டு போட்டிகளிலுமே நம்பர் 7-ல்தான் இறங்கியிருக்கிறார்.

நேரடியாக டெத் ஓவர்களில் இறங்குவது தோனிக்கு இனிமேலும் செட் ஆகாது. சமீபத்திய புள்ளிவிவரங்களும் அதையேத்தான் சொல்கின்றன.

கடந்த 3 சீசன்களில், 14 ஓவர்களுக்கு முன்பாகபே க்ரீஸுக்குள் வந்து செட்டில் ஆகி 17-20 டெத் ஓவர்களை தோனி எதிர்கொள்ளும் போது அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 206 ஆக இருக்கிறது. ஆவரேஜ் 60 க்கும் மேல். அதேநேரத்தில் நேரடியாக 14 ஓவர்களுக்கு பிறகு டெத்தில் களமிறங்கும் போது அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147. ஆவரேஜ் 21.5 மட்டுமே.

அதேமாதிரி முதல் 15 பந்துகளில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 111 ஆக இருக்கிறது. 15-30 பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் 152 ஆக இருக்கிறது. 30+ பந்துகளை எதிர்கொள்ளும் போது ஸ்ட்ரைக் ரேட் 253 ஆக இருக்கிறது.

தோனி - சுரேஷ் ரெய்னா
தோனி - சுரேஷ் ரெய்னா

தோனி 30+ பந்துகளை எதிர்கொள்ளும்போதுதான் அவரின் பெஸ்ட் வெளிவருகிறது. யாராலுமே கட்டுப்படுத்த முடியாத வீரராக இருக்கிறார். ஆக, 30+ பந்துகளை எதிர்கொள்வதற்கு எந்த ஆர்டரில் இறங்கினால் சரியாக இருக்குமோ அங்கேதான் தோனி இறங்கியாக வேண்டும். பவர்ப்ளேக்கு பிறகு 6-10 ஓவர்களில் எப்போது விக்கெட் விழுந்தாலும் தோனி இறங்கியாக வேண்டும். அது நம்பர் 3 அல்லது நம்பர் 4 ஆக கூட இருக்கலாம்.

சில சீசன்களுக்கு முன்பு வரை ஃபினிஷிங் ரோலுக்கு சென்னை அணி தோனியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது ஜடேஜா, சாம் கரண், பிராவோ என மூன்று ஃபினிஷர்கள் இருக்கிறார்கள். அதனால், தோனி ஃபினிஷர் ரோலில் ஆடாமல் இருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஆனால், டாப் ஆர்டரில் தோனி இறங்குவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. தோனி தன்னுடைய ஆர்டரை மாற்றினால் இரண்டு மூன்று வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். மொயின் அலி நம்பர் 3-ல் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே நம்பர் 4 க்கு தள்ளப்பட்டுவிட்ட ரெய்னாவை இன்னமும் கீழே இறக்க முடியாது. அம்பத்தி ராயுடுவுக்கும் அதே நிலைதான். ஆனால், சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். டுப்ளெஸ்சியை பென்ச்சில் வைத்துவிட்டு மொயின் அலியை ஓப்பனராக்கி ரெய்னாவை பழையபடி நம்பர் 3 ஆக மாற்றிவிட்டால் தோனி நம்பர் 4-ல் ஆடுவதில் பிரச்சனை இருக்காது. வெற்றி பெறும் ப்ளேயிங் லெவனையும் ஆர்டரையும் தோனி எப்போதும் மாற்றமாட்டார். இப்போது அவர் ஃபார்முக்கு திரும்பிவதற்காக தன்னுடைய கொள்கையிலிருந்து பின்வாங்குவாரா?!

கேப்டன் தோனி எடுக்கப்போகும் முடிவு பெரிய சர்ப்ரைஸாகக் கூட இருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு