Ipl-2021 banner
Published:Updated:

ஆஃப் ஸ்பின் + பவர் ஹிட்டிங் = 9.25 கோடி... CSK-வின் கிருஷ்ணப்ப கௌதமிடம் என்ன எதிர்பார்க்கலாம்!

Krishnappa Gowtham
Krishnappa Gowtham

ஒரு ஆஃப் ஸ்பின்னராக மட்டுமே இவரை சென்னை அணி பார்க்கவில்லை. தோனி, பிராவோ போன்றோர் பழைய ஃபார்மில் இல்லாததால், டெத் ஓவர்களில் ஜடேஜாவை மட்டுமே நம்பியிருக்கும் நிலை சிஎஸ்கேவுக்கு உண்டானது. பவர் ஹிட்டிங் திறனுடைய ஒரு வீரர் இந்த இடத்தில் சென்னை அணிக்கு தேவைப்பட்டார்.

2021 ஐபிஎல் ஏலத்தில் கிருஷ்ணப்ப கௌதம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 9.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு அறிமுகமாகாத ஒரு வீரருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான். ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டராக இருக்கும் கிருஷ்ணப்ப கௌதமிடம் சென்னை அணி என்ன எதிர்பார்க்கிறது?

2012-ம் ஆண்டிலிருந்தே உள்ளூர் போட்டிகளில் ஆடிவந்தாலும், 2017-ம் ஆண்டுக்குப் பிறகே கௌதம் கவனம்பெற தொடங்கினார். 2016-17 ரஞ்சி சீசனில் இரண்டு 5 விக்கெட் ஹாலுடன் மூன்றே போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அடுத்து நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஜார்கண்ட் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளையும், ஹைதராபாத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். ஒரு சில அரைசதங்களையும் அடித்திருந்தார். இந்த பர்ஃபார்மென்ஸ்கள் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதன்விளைவாக, 2018-ல் ராஜஸ்தான் அணிக்காக 6.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் கிருஷ்ணப்ப கௌதம். அவருடைய அடிப்படை விலையே 20 லட்சமாகத்தான் இருந்தது!

Gowtham started his IPL career with Rajasthan Royals
Gowtham started his IPL career with Rajasthan Royals

அந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அத்தனை போட்டிகளிலும் ஆடியிருந்தார். பெரிய இன்னிங்ஸ்கள் எதுவும் ஆடாவிட்டாலும் டீசன்ட்டாக பெர்ஃபார்ம் செய்திருந்தார். மும்பைக்கு எதிராக சேஸிங்கில் கடைசி ஓவர்களில் அதிரடியாக 33 ரன்களை எடுத்து மிரட்டியிருப்பார். ஒட்டுமொத்தமாக 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ஆனால், அடுத்த சீசனில் இவர் பெரிதாக சோபிக்கவில்லை. 7 போட்டிகளில் ஆடி 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

பஞ்சாப் அணி அஷ்வினை விடுவித்திருந்ததால், ராஜஸ்தானிடமிருந்து டிரேடிங் முறையில் கௌதமை வாங்கியது. பஞ்சாப் அணிக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை. காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் ஆடவில்லை. ஆடிய இரண்டே போட்டிகளிலும் செமயாக அடி வாங்கியிருந்தார். பஞ்சாப் ஒரே சீசனோடு அவரை விடுவிக்க, இப்போது சென்னை அணி 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு நெட் பௌலராக தேர்வு செய்யப்பட்டதால், இந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே டிராஃபியிலும் ஆடவில்லை. இப்படி, கிருஷ்ணப்ப கௌதமிம் சமீபத்திய ரெக்கார்டுகள் எதுவும் பெரியளவில் நம்பிக்கையளிப்பதாக இல்லை. ஆனாலும் சென்னை அணி அவரை பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறது. காரணம் என்ன?

கடந்த சீசனில் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா என இருவருமே ஆடாததால் ஒரு ஆஃப் ஸ்பின் ஆப்ஷனே இல்லாமல் தோனி தடுமாறிப்போனார். முரளிதரன், அஷ்வின், ஹர்பஜன் சிங் என சென்னை அணி எப்போதுமே தன்னுடைய மெயின் ஸ்பின்னர்களில் தெளிவாக இருக்கும். கடந்த முறை ஹர்பஜன் இல்லாமல் மொத்தமாக எந்த காம்பினேஷனும் செட் ஆகாமல் போனது. பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா போன்றோர் ரன்களை வாரி வழங்க, இம்ரான் தாஹிரை பிளேயிங் லெவனிலேயே எடுக்க முடியாத இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டார் தோனி.

Gowtham was a net bowler during the India vs England series
Gowtham was a net bowler during the India vs England series

ஹர்பஜனை இந்த முறை விடுவித்துவிட்டதால், ஒரு நல்ல ஆஃப் ஸ்பின்னரை எடுத்தே ஆக வேண்டும் என்பதில் சென்னை அணி உறுதியாக இருந்தது. அதனால்தான் ஏலத்தில் மேக்ஸ்வெல்லுக்காக கடைசி வரை போராடினர். மேக்ஸ்வெல் கிடைக்காததால் மொயீன் அலியை எடுத்துப் போட்டது. மொயீன் அலி வெளிநாட்டு வீரர் என்பதால், 4 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டில் குழப்பம் ஏற்படும்பட்சத்தில் அவருக்கு பேக் அப்பாக ஒரு வீரர் தேவைப்பட்டார். அதற்காகவே கிருஷ்ணப்பா கௌதமை டிக் அடித்தது சென்னை அணி.

ஒரு ஆஃப் ஸ்பின்னராக மட்டுமே இவரை சென்னை அணி பார்க்கவில்லை. தோனி, பிராவோ போன்றோர் பழைய ஃபார்மில் இல்லாததால், டெத் ஓவர்களில் ஜடேஜாவை மட்டுமே நம்பியிருக்கும் நிலை சிஎஸ்கே -வுக்கு உண்டானது. பவர் ஹிட்டிங் திறனுடைய ஒரு வீரர் இந்த இடத்தில் சென்னை அணிக்கு தேவைப்பட்டார். அதற்கான தீர்வாகவுமே இவரை சென்னை அணி பார்க்கிறது.

ஆஃப் ஸ்பின் + பவர் ஹிட்டிங் = 9.25 கோடி... CSK-வின் கிருஷ்ணப்ப கௌதமிடம் என்ன எதிர்பார்க்கலாம்!

கௌதமின் சமீபத்திய ஃபார்ம் சரியில்லை என்றாலும், அவருக்கு அந்த பவர் ஹிட்டிங் திறன் இருக்கிறது என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார். இந்தியா-A அணிக்காக நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறாத். கர்நாடாகா பிரீமியர் லீகில் ஒரே போட்டியில் சதமும் அடித்து 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். மற்ற அணிகளைப் போல ஏலத்தொகையை வைத்து சென்னை அணி ஒரு வீரரின் மீது அழுத்தத்தை உண்டாக்காது. 9.25 கோடி கொடுக்கிறோம் என்பதற்காக மட்டுமே அவரை ப்ளேயிங் லெவனில் எடுத்துவிடாது. கேப்டன் தோனியும் ஃப்ளெம்மிங்கும் கௌதமை சரியாக பயன்படுத்தும்பட்சத்தில் சென்னை அணிக்கு நல்ல இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுப்பார்.

ஒரு அதிரடி இன்னிங்ஸ் ஆடிவிட்டு 10 சொதப்பல் இன்னிங்ஸ் ஆடுவதை தவிர்த்து, சீரான பர்ஃபார்மென்ஸ்களை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் கிருஷ்ணப்ப கௌதம் இருக்கிறார். "2016-17 சமயங்களில் இந்திய அணியில் அஷ்வினுக்கு பேக் அப் வீரராக கௌதமை தேர்வு செய்யலாம் என்று கூட யோசித்திருக்கிறோம்'' என முன்னாள் இந்திய தேர்வாளர்கள் கூறியிருக்கின்றனர். 30 வயதை கடந்து இன்னமும் இந்திய அணிக்கு அறிமுகமாகாமல் இருப்பதால் இந்த சீசன் தனிப்பட்ட முறையில் அவருக்குமே ரொம்பவே முக்கியம்.

ஒரு ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்டராக தோனியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிற திறன் கிருஷ்ணப்ப கௌதமுக்கு இருக்கிறது. ஆனால், அதை முறையாக சரியான நேரத்தில் களத்தில் வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு