Published:Updated:

IPL 2022: அந்த ஒரு போட்டி எப்போதுதான் வரும்? தொடர்ந்து சொதப்பும் ரோஹித், கோலி; என்னதான் பிரச்னை?

ரோஹித் & கோலி ( RCB )

ரோஹித்தாகட்டும் விராட் கோலியாகட்டும் இருவருமே ஒரு தலைமுறைக்கான வீரர்கள். அவர்களுடைய கரியரில் ஏற்ற இறக்கங்கள் சகஜம்தானே? நியாயமான கேள்விதான். ஆனால், ரோஹித் கோலி இருவருமே இந்த சீசனில் மட்டும் சுமாராக ஆடவில்லையே!

IPL 2022: அந்த ஒரு போட்டி எப்போதுதான் வரும்? தொடர்ந்து சொதப்பும் ரோஹித், கோலி; என்னதான் பிரச்னை?

ரோஹித்தாகட்டும் விராட் கோலியாகட்டும் இருவருமே ஒரு தலைமுறைக்கான வீரர்கள். அவர்களுடைய கரியரில் ஏற்ற இறக்கங்கள் சகஜம்தானே? நியாயமான கேள்விதான். ஆனால், ரோஹித் கோலி இருவருமே இந்த சீசனில் மட்டும் சுமாராக ஆடவில்லையே!

Published:Updated:
ரோஹித் & கோலி ( RCB )

ஆடியிருக்கும் 7 போட்டிகளில் ஐந்தில் வென்று, சௌகரியமாக ப்ளே ஆஃப்ஸுக்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில் இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆடியிருக்கும் 7 போட்டிகளில் அத்தனையிலும் தோற்று 99.9% ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்து நிற்கிறது மும்பை இந்தியன்ஸ். நியாயப்படி பார்த்தால் பெங்களூரு ரசிகர்கள் இப்போது துள்ளிக்குதித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களிடம் அந்தக் கொண்டாட்ட மனநிலையே இல்லை. 7 போட்டிகளில் ஆடி 7 லிலுமே தோல்வி என்பது இதுவரை ஐ.பி.எல்-இல் எந்த அணியுமே செய்யாத சாதனை. புதிது புதிதாக ரெக்கார்ட் வைப்பதற்கே பிறவியெடுத்து வந்த அணி என மும்பை ரசிகர்களும் இச்சமயத்தில் ப்ளாக் காமெடி செய்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இரண்டு பெரிய அணிகளின் ரசிகர்களை முழுமையாகக் கொண்டாடவும் விடாமல் வருந்தவும் விடாமல் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் அந்த துக்கம்தான் என்ன?

Virat Kohli
Virat Kohli
இரண்டு அணிகளின் முகங்களாக இருக்கும் `ஹிட்மேன்' ரோஹித் சர்மா மற்றும் `கிங்' கோலி இருவரின் சொதப்பலான ஆட்டம்தான் ரசிகர்களின் இந்த திரிசங்கு நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Rohit Sharma
Rohit Sharma
IPL
மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இந்த சீசனில் இதுவரை ஆடியிருக்கும் 7 போட்டிகளில் 114 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 126 மட்டும்தான்.

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 32 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். இந்த சீசனில் ரோஹித் சர்மா ஆடிய கொஞ்சம் டீசன்ட்டான இன்னிங்ஸ் இது மட்டும்தான். மற்ற எல்லா ஆட்டங்களிலுமே சொதப்பல்தான். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆடிய நேற்றைய போட்டியில் முகேஷ் சௌத்ரியின் முதல் ஓவரில் இரண்டே பந்துகளில் டக் அவுட் ஆகியிருந்தார். ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற ரசிக்கமுடியாத ரெக்கார்டும் இந்தப் போட்டியில் ரோஹித்தின் பின்னால் ஒட்டிக்கொண்டது. மும்பை ஆடியிருக்கும் இந்த 7 போட்டிகளிலுமே அந்த அணியின் முதல் விக்கெட்டாக வீழ்ந்து வீழ்ச்சியைத் தொடங்கி வைத்திருப்பது ரோஹித் சர்மாதான். இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும்தான் பவர்ப்ளேயைத் தாண்டியும் க்ரீஸில் நின்றிருக்கிறார். மற்ற 5 போட்டிகளிலுமே பவர்ப்ளேக்குள்ளாகவே ரோஹித் அவுட் ஆகியிருக்கிறார். மும்பை அணியின் தொடர் தோல்விக்கான காரணங்களில் ரோஹித் சர்மாவின் இந்தச் சொதப்பலான ஆட்டமும் ஒரு முக்கிய காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விராட் கோலி
விராட் கோலி
இன்னொரு பக்கம் விராட் கோலி, அவரும் இந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடி 119 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 123.95 மட்டும்தான்.

ஏறக்குறைய ரோஹித்துக்கு இணையான பெர்ஃபார்மன்ஸ்தான். ரோஹித்தைப் போலவே கோலியும் கடைசியாக ஆடிய போட்டியில் லக்னோவிற்கு எதிராக டக் அவுட்டே ஆகியிருந்தார். அதுவும் முதல் பந்திலேயே. பஞ்சாபுக்கு எதிரான முதல் போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்து கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். மும்பைக்கு எதிரான போட்டி ஒன்றில் 36 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்தார். மற்றபடி எல்லா போட்டிகளிலும் சொதப்பல்தான். 1(3), 12(14), 0(1) கடைசி 3 போட்டிகளில் கோலியின் பெர்ஃபார்மென்ஸ் இதுதான். இந்த 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் ரன் அவுட் ஆகியிருக்கிறார். ஒரு போட்டியில் பேபி ஏபியிடம் விக்கெட்டை விட்டிருக்கிறார்.

மும்பை அணியின் பேட்டிங் என்பது ரோஹித்தை சுற்றியதாக இருக்க வேண்டும். அவர் மையமாகக் களத்தில் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும்.
ஹர்பஜன் சிங்

என ஹர்பஜன் சிங் ஒரு போட்டிக்கு முன்பாக பேசியிருப்பார். ஹர்பஜன் சொன்னதை போல ரோஹித்தை மையமாக வைத்து எந்தப் போட்டியிலும் மும்பை இயங்கவில்லை. எல்லா போட்டிகளிலுமே அவர்தான் முதல் விக்கெட்டாக வீழ்ந்திருக்கிறார். மேலும், அவரை சுற்றியிருப்பவர்களும் அவருக்கு இணையாக படுமோசமாகவே ஆடுகின்றனர். இதனாலயே ரோஹித்தின் சொதப்பல்கள் ரொம்பவே கண்கூடாக வெளியே தெரிகிறது. விராட் கோலி விஷயத்தில் இது அப்படியே தலைகீழ். அவர் அடிக்காவிட்டாலும் அவரை சுற்றியிருப்பவர்கள் சிறப்பாக ஆடி அவர் மீதான விமர்சன அழுத்தத்தை கொஞ்சம் குறைத்துவிடுகின்றனர்.

ரோஹித்தை பொறுத்தவரைக்கும் அவருக்கு சில போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தது. பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 27 ரன்களையும் பஞ்சாபுக்கு எதிராக 17 பந்துகளில் 28 ரன்களையும் அடித்திருப்பார். நன்றாக பவுண்டரி சிக்ஸர்களை அடித்து சிறப்பாகவே தொடங்கியிருப்பார். ஆனால், அந்தத் தொடக்கங்களைப் பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்ற முடியவில்லை.

IPL 2022 | ரோஹித்
IPL 2022 | ரோஹித்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்ல தொடக்கம் கிடைக்கிறது. ஆனால், அணி என்னிடம் எதிர்பார்ப்பதை என்னால் கொடுக்க இயலவில்லை. அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
ரோஹித் சர்மா

என ரோஹித்தே பேசியிருக்கிறார்.

விராட் கோலியை பொறுத்தவரைக்கும் அவரது அணுகுமுறையிலேயே நிறைய மாற்றங்கள் இருப்பதாக தெரிகின்றன. ஆங்கர் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதை முழுமையாக அவர் எதிர்பார்க்கும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அவரால் செய்ய முடியவில்லை. இதுவரை அவர் ஆடியிருக்கும் போட்டிகளை வைத்தே இதை கூறிவிட முடியும்.

ரோஹித்தாகட்டும் விராட் கோலியாகட்டும் இருவருமே ஒரு தலைமுறைக்கான வீரர்கள். அவர்களுடைய கரியரில் ஏற்ற இறக்கங்கள் சகஜம்தானே? ஒரு பாதி சீசனில் பெர்ஃபார்ம் செய்யாவிட்டால் அடுத்த பாதியில் பெர்ஃபார்ம் செய்யப்போகிறார்கள். பிறகெதற்கு விமர்சிக்க வேண்டும் என கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். ஆனால்,

ரோஹித், கோலி இருவருமே இந்த சீசனில் மட்டும் சுமாராக ஆடவில்லை. கடந்த சில சீசன்களாகவே இருவரின் ஐ.பி.எல் க்ராஃபும் கடுமையாகச் சரிந்திருக்கிறது.

நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் திணறும் ரோஹித்திற்கும் முறையாக ஆங்கர் இன்னிங்ஸ் ஆட முடியாமல் தடுமாறும் கோலியும் இதே பிரச்னையை கடந்த சில சீசன்களாகவே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐ.பி.எல் இல் கடந்த 32 போட்டிகளில் வெறும் நான்கே போட்டிகளில் மட்டும்தான் ரோஹித் சர்மா அரைசதம் அடித்திருக்கிறார்.
ரோஹித் ஷர்மா | PBKS vs MI
ரோஹித் ஷர்மா | PBKS vs MI

2020 சீசனில் மூன்று அரைசதங்களை அடித்தவர், 2021 சீசனில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். இந்த சீசன் பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை. ஆக, பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் தடுமாறும் பிரச்னை ரோஹித்திற்கு இந்த சீசனில் மட்டுமில்லை. கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 2017 க்கு பிறகு ரோஹித்தின் பெர்ஃபார்மென்ஸ் சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆவரேஜ் 30க்கு கீழ் சரிந்துபோய் கிடக்கிறது.

கோலி கடந்த இரண்டு சீசன்களிலுமே 400 ரன்களைக் கடந்திருக்கிறார். ஆனாலுமே, கோலியின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழவே செய்தது. காரணம், அவரின் மந்தமான ஆட்டம்!

கோலி | PBKS vs RCB
கோலி | PBKS vs RCB
2020 சீசனில் 15 போட்டிகளில் 466 ரன்களை அடித்திருந்த கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 121.35 மட்டும்தான். 2021 சீசனில் 15 போட்டிகளில் 405 ரன்களை எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 119.46 மட்டும்தான். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் 119 ரன்களை 123.95 ஸ்ட்ரைக் ரேட்டிலேயே எடுத்திருக்கிறார்.

ஐ.பி.எல் தொடர்களில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அடி வாங்கியதே இல்லையா என்றால், வாங்கியிருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்களுக்கு அது தொடர்ந்ததில்லை. 2017 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 122 தான். ஆனால், அடுத்த சீசனிலேயே அதை மீட்டெடுத்தார். 2018 இல் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 139. 2020 லிருந்து தொடர்ச்சியாக சரிவை சந்திப்பதற்கு முன் 2019 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 141.46 ஆக இருந்தது. மெதுவாக தொடங்கி கடைசியில் அடித்து வெளுத்து ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்திக் கொள்ள நினைக்கிறார். ஆனால், அதை அவரால் செய்ய முடியவில்லை. 2020 சீசனிலெல்லாம் பவுண்டரி அடிக்கவே படாதபாடு பட்டிருந்தார். ஷார்ஜாவில் நடந்த ஒரு போட்டியிலெல்லாம் 25 பந்துகளாக பவுண்டரி அடிக்காமல் இருந்துவிட்டு 26 வது பந்தில் பவுண்டரி அடித்திருப்பார். அதுவரை சதங்கள் அடித்து காற்றில் குத்துவிட்டு கொண்டாடிய கோலி, அந்தப் போட்டியில் ஒரு பவுண்டரி அடித்ததற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார். அங்கிருந்தே கோலியின் சரிவு தொடங்கியது. கூடுதல் தகவலாக ஒரு விஷயம்,

கடைசியாக லக்னோவிற்கு எதிரான போட்டியில் கோலி டக் அவுட் ஆனாரே, கோலி கடைசியாக சதமடித்ததிலிருந்து சரியாக 100 ஆவது போட்டி அது. (அத்தனை விதமான போட்டிகளையும் சேர்த்து). கோலி ரசிகர்களின் ஏக்கமே மிகப்பெரிய மைல்கல்லை எட்டிவிட்டது.

கேப்டன்சி சுமையாக இருக்கிறதென கூறி கோலி தாமாக பதவியிலிருந்து விலகி, விலக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் அரங்கேறிய பிறகும், ஒரு சாதாரண வீரராக ஆடும் சமயத்திலும் கோலி திணறிக்கொண்டிருக்கிறார்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி
கோலிக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இன்னும் 6-7 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அவருக்குள் எஞ்சியிருக்கிறது. ஓய்வெடுக்காமல் ஆடி அதை கெடுத்துவிடக்கூடாது.
ரவி சாஸ்திரி

என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். முடிவே இல்லாமல் தொடரும் கோலியின் சொதப்பல்களும் இதையே உணர்த்துவதாக இருக்கிறது.

கோலி இப்போது இந்திய அணியின் கேப்டன் இல்லை. ஆனால், ரோஹித் இந்திய அணியின் புதிய கேப்டனாகியிருக்கிறார். அவருக்கு கேப்டன் பதவி கிடைத்ததற்கான மிக முக்கிய காரணமாக அமைந்தது அவரின் ஐ.பி.எல் சாதனைகளே. ஆனால், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மும்பை அணி இந்த சீசனில் சொதப்பிக்கொண்டிருக்கிறது. ரோஹித் தனது ஐ.பி.எல் கரியரிலேயே மோசமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் இந்திய அணியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது, வரவிருக்கும் உலகக்கோப்பையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறதென்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

`They are one game away from returning to form' என கவாஸ்கர் ரோஹித் குறித்தும் கோலி குறித்தும் பேசியிருக்கிறார். அந்த ஒரு போட்டி விரைவில் வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism