விஜய் சங்கர் - பெரிய பங்களிப்பின்றி குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஒன்டவுன் பொஷிஷனில் சிறந்த பேட்ஸ்மேன் விளையாட வேண்டும் என்பதே ஒவ்வொரு அணியின் வழக்கமாகவும் இருக்கும். நிச்சயமாக விஜய் சங்கரின் பேட்டிங் அதை பொய்யாக்கி வருகிறது. எல்லா வீரர்களுக்கும் சரிவு காலம் வருவது இயல்புதான். ஆனால் விஜய் சங்கர் சரிவில் இருந்து மீளாமலேயே இருப்பதுதான் பிரச்னை.

கடந்த ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் மட்டும்தான் நன்றாக ஆடியுள்ளார். அதில் 6 போட்டிகளில் 199 ரன்கள் (சராசரி 66.33, SR 130.92) அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் 4 ஆட்டங்களில் களமிறங்கி வெறும் 30 ரன்கள் (சராசரி 7.50, SR 97) மட்டுமே எடுத்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் நான்கு இன்னிங்ஸில் அவர் அடித்த மொத்த ரன்கள் 44 (5, 0,11, 28). 2021 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் வெறும் 58 ரன்கள் (சராசரி 11.60, SR 111.53) அடித்துள்ளார். கடைசியாக அவர் ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடியது 2018-ம் ஆண்டுதான். 13 போட்டிகளில் 212 ரன்கள் (சராசரி 53, SR 143).
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் குஜராத் அணியில் அவருக்குத் தொடக்கம் முதலே விளையாட இடம் கிடைத்தது. அதில் ஒரு போட்டியில் 4 ரன்களும் அடுத்த போட்டியில் 13 ரன்களுமே எடுக்க, சரியாக விளையாடவில்லை என்று இரண்டு ஆட்டங்கள் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் வீரரான சாய் சுதர்சன் அணியில் இடம்பெற்றார். தனது முதல் ஐ.பி.எல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன், அடுத்த ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக பரிதாபமாக டிராப் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக மீண்டும் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் ஒரு போட்டியில் 2 ரன்களும் அடுத்த போட்டியில் டக் அவுட்டும் ஆகி எந்தவித முன்னேற்றமும் காட்டவில்லை அவர். இந்த ரன்களை எடுக்க அவர் எடுத்துக்கொள்ளும் பந்துகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. மொத்தமாக 35 பந்துகளில் 19 ரன்கள்!

கடந்த ஆண்டு ஹைதராபாத் அணியிலேயே அவருக்கு சில போட்டிகளில்தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியில் இவரது பந்துவீச்சில் 1-2 ஓவர்கள் தேவைப்பட்டன. ஆனால் நட்சத்திர பௌலர்கள் நிறைந்த குஜராத் அணியில் அதற்கான தேவையும் இல்லை. பேட்டிங் மட்டுமே செய்கிறார் என்னும்போது, அதிலாவது தன்னை நிரூபிக்க வேண்டாமா? குஜராத் அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்க இவர் மட்டும் தனியாகத் தெரிகிறார். அணியின் பேட்டிங்கும் பேப்பரில் பலமாக இல்லாமல் பாண்டியா, கில் போன்றவர்களை நம்பி இருக்கும் வேளையில் விரைவில் மாற்று வீரர்களை முயல்வது அவர்களுக்கு நல்லது.
ஒரு பக்கம் நீண்ட காலமாய் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் பாபா அபராஜித் வாய்ப்புகள் கிடைக்காமல் தமிழக அணிக்கு மட்டும் ஆடிக் கொண்டிருக்க, விஜய் சங்கர் கிடைக்கும் வாய்ப்புகளை கடந்த சில ஆண்டுகளாகவே பயன்படுத்திக்கொள்ள தவறுகிறார். இவர் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது ஒருபக்கமெனில், இவரால் இளம் வீரர்களும் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, விஜய் சங்கரின் செயல்பாட்டால் அவருக்கு, அணிக்கு, அணியின் இளம் வீரர்களுக்கு... யாருக்கும் நல்லது நடப்பதாகத் தெரியவில்லை.