Published:Updated:

கங்குலி கனவு, பிரண்டன் மெக்கல்லம் வளர்ப்பு... யார் இந்த வெங்கடேஷ் ஐயர்?

26 வயதான வெங்கடேஷ் மத்தியபிரதேசத்தில் பிறந்து வளர்ந்த தமிழர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் 146 பந்துகளில் 198 ரன்கள் குவித்ததோடு, 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இரட்டை சதத்தை தவறவிட்ட வெங்கடேஷை ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா தவறவிடத் தயாராகயில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐ.பி.எல்-ன் ஒவ்வொரு சீசனுமே எதோ ஒரு புதிய இளம் வீரருக்கு அடையாளத்தை கொடுத்து நட்சத்திரமாக ஜொலிக்க வைத்து கொண்டிருக்கிறது. நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா வரிசையில் இந்த சீசனின் நட்சத்திரமாக உயர்ந்து கொண்டிருக்கிறார் வெங்கடேஷ் ஐயர்.

வெங்கடேஷ் கில்கிறிஸ்டை போன்றதொரு புத்திக்கூர்மைமிக்க வீரராக இருக்கிறார்.
பிரண்டன் மெக்கல்லம்

கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் வெங்கடேஷ் ஐயர் பற்றி இப்படி சொல்லியிருக்கிறார். மெக்கல்லம் மட்டுமில்லை விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை தாங்கள் இதுவரை பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு வீரரின் பிம்பத்தோடு வெங்கடேஷ் ஐயரையும் இணைத்து வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 'கங்குலி மாதிரி, யுவராஜ் மாதிரி, கிறிஸ் கெயில் மாதிரி' என வெங்கடேஷ் பற்றி இணையதளங்களில் கொட்டி கிடக்கும் கமென்ட்டுகளே இதற்கு உதாரணம். இரண்டே போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். அப்படி என்ன மாயவித்தையை நிகழ்த்தி காட்டிவிட்டார்.

பெங்களூருக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் 41 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தவர், நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 53 ரன்களை அடித்திருக்கிறார். வெறுமென எண்களை மட்டும் பார்த்தால் இது டி20-யில் வழக்கமாக ஆடப்படும் இன்னிங்ஸ்தானே இவற்றில் என்ன ஸ்பெஷல் இருக்கிறதென்றே தோன்றும். ஆனால், எண்களைத் தாண்டி வெங்கடேஷின் அணுகுமுறையை பற்றி பேசியாக வேண்டும்.

மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் ஓவரை ட்ரென்ட் போல்ட் வீசுகிறார். ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேயில் மிகச்சிறப்பாக வீசும் பௌலர் என அறியப்பட்டவர். மும்பை அணிக்காக இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என பெயரெடுத்தவர். தனது வாழ்நாளிலேயே இப்படிப்பட்ட ஒரு பௌலரை வெங்கடேஷ் முதல் முறையாக நேற்றைக்குதான் சந்திக்கிறார். இந்த சந்திப்பை தகராறாக்கி கொள்ளாமல் சுமூகமாக ஒரு மென் சிரிப்போடு கைகுலுக்கிவிட்டு செல்வதை போல ரிஸ்க் எடுக்காமல் டிஃபன்ஸிவ்வாக ஒரு ஷாட்டை ஆடியிருக்கலாம். ஆனால், வெங்கடேஷ் அப்படி செய்யவில்லை.

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்
KKR
ட்ரென்ட் போல்ட்டுக்கு எதிராக அவர் சந்தித்த முதல் பந்தே ஸ்கொயரில் காற்றை கிழித்துக் கொண்டு சிக்சராகப் பறந்தது.

முதல் சந்திப்பிலேயே இப்படி ஒரு அதிரடியான வரவேற்பை வெங்கடேஷ் கொடுப்பார் என ட்ரென்ட் போல்ட்டே எதிர்பார்த்திருக்கவில்லை. இனி எத்தனை ஜாம்பவான் வீரர்களுக்கு ட்ரென்ட் போல்ட் பந்துவீசினாலும், வெங்கடேஷ் கொடுத்த இந்த அறிமுகத்தை போல்ட்டால் மறக்கவே முடியாது.

ஆடம் மில்னே, சமீபத்தில் நடந்து முடிந்த The Hundred தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அவருக்கு எதிராகவும் முதல் பந்தில் அதாவது தன்னுடைய முதல் சந்திப்பில் சிக்சருடனேயே அறிமுகமாகியிருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேல் பும்ரா... இன்றைய தேதிக்கு உலகின் சூப்பர் ஸ்டார் பௌலர். பும்ராவின் பந்தை தொடுவதற்கே பல பேட்ஸ்மேன்களும் பதறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவருக்கு எதிராகவும் பவுண்டரியுடனேயே அறிமுகமாகி உரையாடலை தொடங்கினார் வெங்கடேஷ்.

வேகப்பந்து வீச்சில் மிரட்டிக் கொண்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த மூன்று பௌலர்களுக்கு எதிராகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட விதம்தான் வெங்கடேஷ் ஐயரை கில்கிறிஸ்ட்டுடனும் கங்குலியுடனும் கெய்லுடனும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள ரசிகர்களை தூண்டுகிறது.
வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்

டி20 போட்டிகளில் ஆடுவதற்கு பேட்ஸ்மேனுக்கு தேவையான அடிப்படையான விஷயம் துணிச்சல். ரிஸ்க் எடுப்பதற்கு யோசிக்கவே கூடாது. இறங்கி அடிப்பதென்று முடிவெடுத்துவிட்டால் தயக்கமே இருக்கக்கூடாது. இறங்கிவிட வேண்டும். டிவில்லியர்ஸ் டி20யில் ஒரு வெறித்தனமான வீரராக இருப்பதற்கு அவரின் பயமின்மையும் முக்கிய காரணம். மற்ற அணியிலிருந்தெல்லாம் உதாரணம் எதற்கு? கொல்கத்தா அணியிலேயே தலைமை பயிற்சியாளராக அமர்ந்திருக்கும் பிரண்டன் மெக்கல்லமே அஞ்சாமையின் மறு உருவம்தான். இவர்களுக்கு எந்த பௌலர் எந்த அணி என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது. தான் க்ரீஸுக்குள் செய்ய வந்த வேலையை செவ்வனே செய்து கொடுத்துவிட்டு செல்வார்கள். இந்த குணாதிசயத்தின் நீட்சியை வெங்கடேஷிடமும் பார்க்க முடிகிறது. வெங்கடேஷிடம் ''இதைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்'' என உருவாக்கிவிட்டிருக்கிறார் பிரண்டன் மெக்கல்லம்.

மும்பைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, உலகத்தரம் வாய்ந்த பௌலர்களை எப்படி முதல் பந்திலேயே அட்டாக் செய்தீர்கள் என ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்
IPL
நான் பௌலர்களை பார்க்கவில்லை. பந்தைத்தான் பார்க்கிறேன். பந்தைத்தான் அடிக்கிறேன்
வெங்கடேஷ் ஐயர்

என நறுக்கென்று வெங்கடேஷ் பதில் சொல்லியிருக்கிறார். டிவில்லியர்ஸ், பிரண்டன் மெக்கல்லம் போன்ற வீரர்களின் சக்சஸ் ஃபார்முலாவுமே இதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

26 வயதான வெங்கடேஷ் ஐயர் மத்தியபிரதேசத்தில் பிறந்து வளர்ந்த தமிழர். மத்திய பிரதேச அணிக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் ஆடிவந்த இவர் கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பை மூலம்தான் பிரபலமானார். பஞ்சாப் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் 146 பந்துகளில் 198 ரன்கள் குவித்ததோடு, 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இரண்டே ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட வெங்கடேஷை ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா தவறவிடத் தயாராகயில்லை. 20 லட்சம் ஆரம்ப விலை என அறிவித்ததுமே வெங்கடேஷ் ஐயரைத் தன் அணிக்குள் கொண்டுவந்துவிட்டது கொல்கத்தா. கேகேஆர் கேம்ப்புக்குள் போனதும் மெக்கல்த்தால் பட்டைத் தீட்டப்பட்டார் வெங்கடேஷ்.

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்

பேட்ஸ்மேன்கள் பந்தைத்தானே அடிக்கப் போகிறார்கள், பந்துவீசுபவரையா அடிக்க போகிறார்கள்? பந்து வீசுபவர் நம்பர் 1 பௌலராக இருந்தாலென்ன, அனுபவமே இல்லாத அறிமுக வீரராக இருந்தாலென்ன? ஒரு நல்ல பந்து யார் வீசினாலுமே எப்போதும் பேட்ஸ்மேனை தடுமாறவே வைக்கும். இந்த புரிதலே டி20-க்கு தேவையான கட்டுகள் அவிழ்க்கப்பட்ட கைகளையயும் விளாசி தள்ள ஏதுவான சுதந்திர வெளியையும் வெங்கடேஷுக்கு உறுதி செய்து கொடுக்கிறது.

இந்த போட்டி மட்டுமில்லை, பெங்களூருக்கு எதிரான கடந்த போட்டியிலுமே அத்தனை பௌலர்களையும் அவர்களை சந்தித்த மூன்றாவது பந்துக்குள்ளேயே வெங்கடேஷ் பவுண்டரியாக்கியிருந்தார். பௌலரை சௌகரியமே அடையவிடாமல் அட்டாக் செய்யும் இந்த அணுகுமுறை குறித்த கேள்விக்கு ''நான் டிக்டேட் செய்ய விரும்புகிறேன்'' என வெங்கடேஷ் பதில் சொல்லியிருந்தார். அதாவது க்ரீஸுக்குள் ஒரு சர்வாதிகாரியாக ஆள வேண்டும் என நினைக்கிறார். எதிர்த்து ஓங்கும் கரங்களுக்கு இடம்கொடுக்காமல் ஆரம்பத்திலேயே அவற்றை வெட்டி வீழ்த்துவது சர்வாதிகாரத்தின் முக்கிய குணங்களுள் ஒன்று. அதே பாணிதான் வெங்கடேஷ் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. பௌலர்கள் செட்டில் ஆவதற்குள்ளேயே அவர்களை நாலாபுறமும் சிதறவிட்டு அட்டாக் செய்ய வேண்டும். அட்டாக்கிங் மனநிலையோடு உத்வேகத்தோடு விக்கெட் எடுக்க வரும் பௌலரை ஆரம்பத்திலேயே கவுன்ட்டர் அட்டாக் செய்து தற்காப்பு மனநிலைக்கு தள்ளிவிட வேண்டும். இது ஒரு உளவியல் தாக்குதல். இதை கடந்த இரண்டு போட்டிகளிலுமே திட்டமிட்டு தன்னுடைய கேம் பிளானாக அமைத்துக் கொண்டார்.

கொல்கத்தா அணியின் ஓப்பனிங் ஸ்பாட் எப்போதுமே ஒரு உயர்தரமான அழுத்தமான வீரர்களை கொண்டதாகவே இருந்தது. முதலில் தாதா கங்குலி கொல்கத்தா அணிக்காக ஓப்பனிங் இறங்கியிருந்தார். அதன்பிறகு, கவுதம் கம்பீர் இறங்கியிருக்கிறார். ஒருவர் அந்த அணிக்கான அறிமுக அடையாளத்தையும் ரசிகர் கூட்டத்தையும் பெற்று கொடுத்தவர். இன்னொருவர் இரண்டு முறை ஐ.பி.எல் கோப்பையை வென்று அந்த அணிக்கான கௌரவத்தை பெற்று கொடுத்தவர். அப்படியான வீரர்கள் இறங்கிய ஓப்பனிங் ஸ்பாட்டில் பின்னாட்களில் பேட்டை ஹைஸ்பீடில் சுத்துகிறார்கள் என்பதற்காகவே போகிற போக்கில் பல வீரர்களையும் ஓப்பனராக்கியிருந்தார்கள். வெங்கடேஷ் வடிவில் இப்போது ஒரு சரியான வீரர்... சரியான ஓப்பனர் மீண்டும் அந்த அணிக்கு கிடைத்துள்ளார்.

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்
KKR

முதல் இரண்டு போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் மீது எந்த அழுத்தமும் கிடையாது. ரசிகர்கள் அவருக்காக காத்திருந்து போட்டியை கண்டிருக்கவில்லை. எதிரணியின் வீடியோ அனலிஸ்ட்கள் வெங்கடேஷை கணக்கிலேயே கொண்டிருக்கவில்லை. ஆனால், இனி அதெல்லாம் நடக்கும். ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். வெங்கடேஷுக்கென்று தனி திட்டத்தோடு எதிரணி கேப்டன்கள் வருவார்கள். மிகப்பெரிய சவாலே இனிதான் அவருக்கு காத்திருக்கிறது.

இவ்வளவு நாள் வெங்கடேஷ் ஐயர் மாதிரியான வீரர்களை எங்கே வைத்திருந்தீர்கள்? அடுத்த முறை 2 புதிய அணிகள் வரப்போவதாக சொல்கிறார்கள். வெங்கடேஷ் மாதிரி பென்ச்சில் எத்தனை இளம் வீரர்கள் இருக்கிறார்களோ! அவர்களுக்கு இரண்டு புதிய அணிகள் போதுமா? குறைந்தது 6 அணிகளையாவது கொண்டு வாருங்கள்
ஸ்காட் ஸ்டைரிஸ்

என உற்சாக மிகுதியில் கமென்ட்ரியில் ஸ்காட் ஸ்டைரிஸ் பேசியிருந்தார்.

ஆம், வாய்ப்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் இளம் வீரர்களுக்கு அத்தனை அணியுமே ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும். அவர்கள் வெங்கடேஷை போல ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

பார்த்த பேட்ஸ்மேன்களையே எத்தனை நாளய்ய்ய்யா பார்ப்பது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு