Published:Updated:

தோனி ரிட்டன்ஸ்... வீழ்ந்த இடத்திலேயே எழுந்த சிஎஸ்கே... தட்டித் தூக்கிய தலைவன்!

தோனி

வின்னிங் ஷாட்கள் மூலம் தோனி மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறார் அது 'CSK is Back'.

தோனி ரிட்டன்ஸ்... வீழ்ந்த இடத்திலேயே எழுந்த சிஎஸ்கே... தட்டித் தூக்கிய தலைவன்!

வின்னிங் ஷாட்கள் மூலம் தோனி மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறார் அது 'CSK is Back'.

Published:Updated:
தோனி

வீழ்ந்த இடத்திலேயே மீண்டும் வெகுண்டெழுந்து சாதித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த சீசனில் மிக மோசமாக தோல்வியடைந்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியிருந்த சென்னை, இந்த சீசனில் அதே இடத்தில் முதல் அணியாக இறுதிப்போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது. டெல்லிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றிருக்கிறது.

தோனி வின்னிங் ஷாட்டை அடித்து மேட்ச்சை முடித்து வைத்ததால் மகிழ்ச்சியான தருணம் கொஞ்சம் எமோஷனலாகவும் மாறிப்போனது.
தோனி - ரிஷப் பண்ட்
தோனி - ரிஷப் பண்ட்
CSK

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை அணியின் கேப்டனான தோனியே டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். லீக் போட்டியில் சென்னை அணி தோற்றிருந்த கடைசி 3 போட்டிகளிலும் முதலிலேயே பேட்டிங் செய்திருந்தது. அதனால் தோனியின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே இருந்தது. மேலும், துபாய் மைதானத்தில் சேஸ் செய்த அணிகளே அதிகம் வென்றிருப்பதும் சென்னை அணிக்கு சாதகமாக அமைந்திருந்தது.

டெல்லி அணி ஸ்டாய்னிஸை ப்ளேயிங் லெவனில் எடுப்பார்கள் என நினைத்திருக்க, டாம் கரணை எடுத்து வைத்திருந்தார்கள். அதனால் டெல்லி ஒரு பேட்டர் தட்டுப்பாட்டுடனேயே களமிறங்கியிருந்தது.

பிரித்திவி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்களை எடுத்திருந்தாலும் 10.2 ஓவர்களிலேயே டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நின்றது. இடையில் அக்சர் பட்டேலை நம்பர் 4-ல் இறக்கி பேட்டிங்கை நீளப்படுத்த முயற்சி செய்து தோற்றும் போயிருந்தனர். 'நாங்கள் ஒரு பேட்டர் தட்டுப்பாடுடன்தான் ஆடுகிறோம்' என்கிற பலவீனத்தை வெளிக்காட்டியதோடு மட்டுமில்லாமல் அக்சர் பட்டேல் ஆடிய அந்த 4 ஓவர்கள் கொஞ்சம் வேகத்தடையாகவும் அமைந்தது. 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 80. ஸ்கோரில் எந்த பிரச்சனையுமில்லை க்ரீஸில் ரிஷப் பன்ட்டும் ஹெட்மெயரும் இருந்தனர். இருவரும் பரபரப்பாக 2X மோடில் ஆட நினைப்பவர்கள். ஆனால், இங்கே அவர்கள் அவுட் ஆகிவிட்டால் அவ்வளவுதான் மேட்ச் ஒன்சைட் ஆகிவிடும் என்ற சூழலே இருந்தது. இந்நிலையில் பொறுப்பை உணர்ந்து இருவருமே சிறப்பாக ஆடினர். ஹெட்மெயர் பேட்டை வழக்கம்போல வீசினாலும் ரிஷப் பன்ட் கேப்டன் பதவிக்கான பொறுப்போடு நின்று ஆடினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்
IPL

11-15 இந்த 5 ஓவர்களில் ரிஷப் பன்ட் மிகவும் பொறுமையாக ஆடினார். இந்த மிடில் ஓவர்களில் 15 பந்துகளை சந்தித்து 12 ரன்களை மட்டுமே பன்ட் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 80 மட்டுமே. ஒரு பவுண்டரி கூட வரவில்லை. பன்ட் பவுண்டரிக்கு முயற்சிக்கவும் இல்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஹெட்மெயரிடம் கொடுக்க அவர் அவருடைய பாணியில் கொஞ்சம் அதிரடி காட்டி 24 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். 11-15 இந்த ஓவர்களில் நின்று செட் ஆகியிருந்த பன்ட் கடைசி 5 ஓவர்களில் அதிரடி மோடுக்கு சென்றார்.

இறுதிக்கட்டத்தில் 20 பந்துகளை சந்தித்திருந்த பன்ட் 39 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 195. மொத்தமாக 35 பந்துகளில் 51 ரன்கள் மிகச்சிறப்பான திட்டமிடலோடும் ஹெட்மெயரின் உதவியோடும் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட இன்னிங்ஸ்.

சென்னை அணிக்கு டார்கெட் 173. துபாய் மைதானத்தின் ஆவரேஜ் ஸ்கோர் 152 தான். அதைவிட 21 ரன்கள் அதிகமாக எடுத்திருந்ததால் டெல்லி அணி இறுதிப்போட்டியில் ஒரு காலை எடுத்து வைத்துவிட்ட திருப்தியுடனேயே இன்னிங்ஸ் ப்ரேக்குக்கு சென்றது.

நோர்க்கியா, ரபடா, அவேஷ்கான் இந்த வேகக்கூட்டணியை கடந்து சென்னை அணி டார்கெட்டை சேஸ் செய்வது சவால்மிக்க டாஸ்க்காகவே இருந்தது. ஆனாலும், சென்னை அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவுட் ஆஃப் சிலபஸாக வந்து கலக்கிய ராபின் உத்தப்பாவே!

ரெய்னாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் லீக் போட்டியிலேயே அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா ப்ளேயிங் லெவனுக்குள் வந்துவிட்டார். ப்ளே ஆஃப்ஸில் ரெய்னா இல்லாமல் சென்னை இல்லை என ரசிகர்கள் நினைத்திருக்க, ஆம் ரெய்னா இல்லை. அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பாவே தொடர்கிறார் என தோனி டாஸிலேயே ட்விஸ்ட் கொடுத்திருந்தார்.

உத்தப்பா எப்போதுமே ஓப்பனிங் இறங்குவதைத்தான் விரும்புவார். கொல்கத்தா அணி கோப்பையை வென்ற தொடர்களில் ஓப்பனிங்கில் உத்தப்பா பெரிய பங்களிப்புகளை கொடுத்திருப்பார். பேட்டிங் ஆர்டர் இறங்க இறங்க அவரின் பெர்ஃபார்மென்ஸும் இறங்கும். கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு ஆடியிருந்தார். அங்கே யாருக்குமே நிலையான இடம் இருந்ததில்லை. மியுசிக்கல் சேர் போல ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் ஓப்பனிங் இறங்குவார்கள்.

ராபின்உத்தப்பா
ராபின்உத்தப்பா
IPL

கடந்த சீசன் முழுவதும் உத்தப்பா சொதப்பியிருந்தாலும் அவர் முறைக்கு அவர் ஓப்பனிங் இறங்கிய போது சிறப்பாகவே ஆடியிருப்பார். ஆனால், இங்கே சிஎஸ்கேவில் ஏற்கனவே இரண்டு வீரர்கள் ஓப்பனிங்கில் செட்டாகி இருப்பதால் உத்தப்பாவுக்கு வாய்ப்பில்லாமல் போனது. கடைசி இரண்டு போட்டியிலும் நம்பர் 4-ல் பவர்ப்ளே முடிகிற சமயத்திலேயே வந்திருப்பார். அது அவருக்கு ஒவ்வாத இடமாகவே இருந்தது. ஆனால், நேற்று டூ ப்ளெஸ்சி நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே போல்டை பறிகொடுத்து அவுட் ஆக 5 வது பந்திலேயே உத்தப்பா க்ரீஸுக்குள் வந்தார். நம்பர் 3 என்றாலும் கிட்டத்தட்ட ஓப்பனர் ரோல்தான் அவருக்கு. பவர்ப்ளேயில் 5 ஓவர்கள் மீதமிருந்தது. இப்படி சீக்கிரம் க்ரீஸுக்குள் வந்ததே உத்தப்பாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கும் போல,

நோர்க்கியா 148 கி.மீ வீசிய முதல் பந்தையே பிசிறில்லாமல் ட்ரைவ் ஆடி பவுண்டரியாக்கி அசத்தியிருந்தார். பவர்ப்ளே முழுமையாக சிறப்பாக உத்தப்பா பயன்படுத்திக் கொண்டார். அவேஷ்கான் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 20 ரன்களை அடித்திருந்தார்.
உத்தப்பா-ருத்துராஜ் கெய்க்வாட்
உத்தப்பா-ருத்துராஜ் கெய்க்வாட்
IPL

உத்தப்பாவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இன்னொரு எண்ட்டில் ருத்துராஜ் தனது வழக்கமான ஆட்டத்தை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ரபடா வீசிய முதல் பந்தையே இறங்கி வந்து ஸ்பின்னரை அடிப்பதை போல ஸ்ட்ரைட்டாக ருத்துராஜ் அடித்த சிக்சர் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. பவர்ப்ளேயை சிறப்பாக பயன்படுத்தி 59 ரன்களை சேர்த்த இந்த கூட்டணி, இதன்பிறகு கொஞ்சம் பார்த்து ஆடி பெரிய பார்ட்னர்ஷிப்பை போட முயன்றனர். 7-10 இந்த 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. 22 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். உத்தப்பா அரைசதத்தையும் கடந்திருந்தார்.

11-15 இந்த ஓவர்களில் கொஞ்சம் கியரை மாற்ற முயன்றனர். சில பவுண்டரிகளும் வந்தது. ஆனால், அடுத்தடுத்த விக்கெட்டுகளும் விழுந்தது.

63 ரன்களில் டாம் கரண் பந்தில் உத்தப்பா பவுண்டரி லைனில் கேட்ச் ஆகியிருந்தார். திடீர் ட்விஸ்ட்டாக நம்பர் 4-ல் ஷர்துல் தாக்கூர் வந்தார். ரன்ரேட்டை கீழே விழாமல் பார்த்து இரண்டு மூன்று சிக்சர்கள் அல்லது பவுண்டரிகள் அடித்துவிட்டு வருவதே ஷர்துலுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்காக இருந்திருக்கும். ஆனால், ஷர்துலும் டாம் கரனின் அதே ஓவரில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

ஒரே ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகள். கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவை. டெல்லிக்கு திடீர் மொமன்டம் கிடைத்தது. ஆனால், ருத்துராஜ் நின்று சிறப்பாகவே ஆடிக்கொடுத்தார். தொடர்ச்சியாக பவுண்டரிகளை அடித்தார். கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் ருத்துராஜும் அவுட் ஆனார். இப்போதுதான் தோனி இன்னொரு ட்விஸ்ட்டை கொடுத்தார். ஜடேஜாவுக்கு பதில் அவரே களமிறங்கினார். தோனி பழைய தோனி இல்லை... ஃபார்மில் இல்லை என ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் அவர் மீது இருந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் குறைவாகவே இருந்தது. விமர்சனங்களை தாண்டி நிஜமாகவே தோனி மோசமாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார்.

தோனி
தோனி
IPL
ஆனால், நேற்று அவர் சந்தித்த 6 பந்துகள் அப்படியில்லை. 2010-11 இல் இருந்த தோனியை டைம் மெஷினில் கடத்தி கொண்டு வந்ததை போல இருந்தார். ஆவேஷ் கான் 19 வது ஓவரில் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் மிட் விக்கெட்டில் அட்டகாசமாக சிக்சர் அடித்தார்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை. ரபடாவுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. ஆனால், பன்ட் டாம் கரணிடம் பந்தை கொடுத்தார். முதல் பந்திலேயே மொயின் அலி அவுட். இப்போது தோனி ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். தோனி ஆஃப் சைடில் ஒயிடாக வீசினால் திணறுவார் என டாம் கரண் ஒயிடாக ஒரு பந்தை வீசினார். ஆனால், பந்து ஆஃப் சைடில் தெறித்தது. ஸ்லோவாக வீசப்பட்ட அந்த பந்தை தோனி சரியாக பிக் செய்து பவுண்டரியாக்கினார். அடுத்த பந்து இன்சைட் எட்ஜ்ஜாகி ஃபைன் லெக்கில் பவுண்டரி. மூன்று பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலை. ஸ்கொயரில் மீண்டும் ஒரு பவுண்டரி. அது வின்னிங் ஷாட். தோனியின் வின்னிங் ஷாட். சிஎஸ்கே இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஒட்டுமொத்த கூட்டமும் மகிழ்ச்சி ஆராவாரம் என்பதையெல்லாம் தாண்டி பயங்கர எமோஷனலாக இருந்தனர். கடந்த சீசனில் சந்தித்த பேரழிவிற்கு பிறகு அடுத்த சீசனிலேயே அதே இடத்தில் மீண்டும் தங்கள் சாம்ராஜ்யத்தை சிஎஸ்கே கட்டியெழுப்பியிருக்கிறது. அதுவும் தோனியின் வின்னிங் ஷாட்டோடு...ஒரு கிரிக்கெட் ரசிகன் தன்னிலை மறந்து ஆனந்த கண்ணீர் வடிக்க இதை விட உகந்த சூழல் எதுவும் எப்படி அமையும்?

தோனி
தோனி
IPL

லீகில் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை வென்றதன் மூலம் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றிருந்தது. அந்த போட்டியிலும் வலுக்கட்டாயமாக ஜடேஜாவுக்கு முன் தோனியே இறங்கி சிக்சர் அடித்து மேட்ச்சை முடித்திருப்பார். இங்கேயும் அப்படியே செய்திருக்கிறார். வின்னிங் ஷாட்கள் மூலம் தோனி மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறார் அது 'CSK is Back'.

டாம் கரணுக்கு பதில் ரபடா கடைசி ஓவரை வீசியிருந்தால் தோனியை கட்டுப்படுத்தியிருக்கலாம் என ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. ரபடாவின் சமீபத்திய ரெக்கார்டுகளை எடுத்துப்பார்த்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கவே மாட்டார்கள்.

சிஎஸ்கேவின் மிஷன் இன்னும் முடிந்துவிடவில்லை. இறுதிப்போட்டி இருக்கிறது. அங்கே இன்னும் பெரிய மேஜிக்குகளை நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

தோனி அதிசயங்களை நிகழ்த்துவார் என எதிர்பார்ப்போம்!