சிஎஸ்கேயின் 200-வது போட்டியின் ஆட்டநாயகனாக மட்டுமல்ல. வரிசையான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆபத்பாந்தவனாகவும், மிடில் ஓவர் மீட்பராகவும், ஷிவம் துபேயை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஆறடி உயரம், அகன்ற தோள்கள், வழக்கத்திற்கும் அதிகமாகவே ஸ்விங்காகும் பேட், உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு, சிக்ஸரை வெகு இலகுவாக அடிக்கும் திறன், கண்களில் உள்ள அந்த தீர்க்கம், இடக்கை ஆட்டக்காரர் என பல விஷயங்களில் கவனத்தைக் கவருகிறார், துபே.
ஷிவம் துபே - இப்பெயர் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பரிச்சயமானதுதான். அவரும், லிஸ்ட் ஏ, ஃபர்ஸ்ட் கிளாஸ் என அத்தனை உள்ளூர் போட்டிகளிலும் ஆடியவர்தான். ஐபிஎல் போட்டிகளிலும் ஏற்கனவே ஆடியவரும்கூட. இவ்வளவு ஏன், இந்திய ஜெர்ஸி அணிந்து சில போட்டிகளிலும், களத்தில் கால் பதித்திருக்கிறார். என்றாலும், புத்துயிர் அளிப்பதாக, அவருக்கு மாறியிருப்பது, சிஎஸ்கே நாட்கள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகேலிகளும், திறனைச் சந்தேகிக்கும் கேள்விகளும், ஷிவம் துபேவுக்குப் புதிதல்ல. அதிகமான எடைக்காக, அவரது அண்டர் 14 நாட்களில் பல கிண்டல்களைச் சந்தித்தார். அதற்காகவும், பொருளாதார காரணத்துக்காகவும், அவரது கிரிக்கெட் பயணத்தில், நீண்ட இடைவெளி விழுந்தது. 19 வயதில், திரும்பி வந்தவருக்கு, ஐந்தாண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை தொலைந்து போயிருந்ததால், அதற்கும் சேர்த்து அசுரத்தனமான உழைப்பை அவர் உள்ளீடாகப் போட வேண்டியிருந்தது. உடற்பயிற்சிக் கூடத்தில், மணிக்கணக்காக நேரம் செலவழித்து, 10 கிலோவுக்கு மேல் குறைத்து, தன்னை முழுத் தகுதியுடையவராக மாற்றிக்கொண்டார். சவால்கள் அவரைச் செதுக்கும் உளிகளாகின.
கிரிக்கெட் மணக்கும் மும்பை மண்ணுக்காக அவர் ஆடியதே, அண்டர் 23 அளவில்தான். டி20 அறிமுகம், 22 வயதிலும், லிஸ்ட் ஏ மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் அறிமுகம், முறையே, 23, 24 வயதில்தான் நடந்தேறியது. அதற்கு முன்னதாக, ஜுனியர் அளவிலான கிரிக்கெட்டில், அவர் பங்கேற்றதே இல்லை. கிளப் கிரிக்கெட்தான், அவரை வார்த்தெடுத்தது என்று சொல்ல வேண்டும். அங்கிருந்துதான், மும்பை அணியின் வாயிலுக்கான அழைப்பு மணியை, அவர் அடித்தார். காலம் தாழ்த்திய நுழைவுதான் என்றாலும், அங்கிருந்து அதிர்வலைகளை, தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில், முதல் மூன்று போட்டிகளுக்குள்ளாகவே, இரண்டு சதங்கள், இரண்டு ஐந்து விக்கெட் ஹால்கள் என தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த எல்லா நிலையிலும், மாறாமல் இருந்தது, சிக்ஸர்களை விளாசும் அவரது இயல்புதான். அவரது உயரமும் அதற்கு உதவியாக இருந்தது. 2018-ல் மும்பை டி20 லீக்கில், ப்ரவீண் தம்பேயின் ஓவரில், ஐந்து சிக்ஸர்களை விளாசி, ஸ்பின் ஹிட்டராக அவர் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். அதே ஆண்டின் இறுதியில், ரஞ்சியிலும், அதே 'ஓவருக்கு ஐந்து சிக்ஸர்' பிக் ஷோவை காட்சிப்படுத்தினார்.
ஐபிஎல்லுக்கான நுழைவுச் சீட்டாக அமைந்தது, ஷிவம் துபேயின் இந்த பிக் ஹிட்டிங் திறன்தான். ஐந்து கோடி கொடுத்து, 2019 சீசனுக்காக ஆர்சிபியை, வாங்க வைத்ததும் இதுதான். 2019-ம் ஆண்டில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. 4 போட்டிகளில், 40 ரன்கள் என பசுமையற்றே தொடர்ந்தது, துபேயின் ஆர்சிபி பயணம். இந்தியா ஏ உட்பட்ட உள்ளூர் போட்டிகளில் அபாரமாக ஆடி, தனக்கான வாய்ப்பை இந்திய அணியில் பெற்றுக் கொண்டாலும், அங்கேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. அதுவும், பார்ட் டைம் பௌலராக அவரை முழு மனதோடு இந்திய அணி, ஏற்றுக் கொள்ளும்படியான சூழலும் நிலவவில்லை. சமீபத்தில், "வெங்கடேஷ் ஐயரை, இந்திய அணி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை" என கவாஸ்கர், கருத்துத் தெரிவித்த போதுகூட, "இப்படித்தான் துபேயின் திறனும் வீணடிக்கப்பட்டது", என வருத்தம் தெரிவித்திருந்தார்.
முழுமையாக, தேர்வாளர்களை மட்டுமே குறை சொல்லி, தட்டிக் கழித்துவிட முடியாது. துபேயின் முதல் 13 ஐபிஎல் இன்னிங்ஸ்களில், வெறும் 169 ரன்களை மட்டுமே, 13 ஆவரேஜோடு, அவரது பேட் சேர்த்திருந்தது. போட்டிக்கொரு சிக்ஸர் என்ற கணக்கிலேயே அடித்திருந்தார். பௌலிங்கில்கூட பெரிதாக எடுபடவில்லை. ஆர்சிபிக்காக ஆடியபோது, சோபிக்கத் தவறிய துபேயிடம் கோலி, "ஆல்ரவுண்டராக இருக்கும் யாருக்கும் ஃபினிஷிங் என்பது கைவந்த கலையாக இருக்க வேண்டும், அதுதான், அணியில் உனக்கான இடத்தை உறுதி செய்யும்", என்று கூறியிருந்தார். துபே, தனது பலமான சிக்ஸர்கள் அடிப்பதனை மேலும் மேம்படுத்திக் கொண்டதும் இதற்குப் பிறகுதான். இதன் விளைவாகத்தான், அவரது ஆட்டத்திறம் ஏறுமுகத்தில் உள்ளது. முதல் 13 ஐபிஎல் இன்னிங்ஸ்களில், 13 ஆவரேஜோடு ரன்களைச் சேர்ந்தவர், அதற்கடுத்த 14 இன்னிங்ஸ்களில், 32 ஆவரேஜோடு ரன்களைக் குவித்திருக்கிறார். இப்போட்டிகளில், மொத்தம் 23 சிக்ஸர்கள் அவரால் அடிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸுக்காக கடந்தாண்டு, அரபு மண்ணில் ஆடிய போது, சிஎஸ்கேவிற்கு எதிராக, 42 பந்துகளில், 64 ரன்களை விளாசியிருந்தார், துபே. சிஎஸ்கேயின் பார்வை அவர்மீது படிய, இப்போட்டி கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

இப்படி சின்ன சின்ன வெளிச்சப் பொட்டுக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக தென்பட்டதே ஒழிய, கண்ணைக் கூசச் செய்யும் குவிந்த லேசர் வெளிச்சம் அவரிடமிருந்து வெளிப்பட்டதில்லை. கடந்த ஃபிப்ரவரியில், ஏலத்தில் சிஎஸ்கே அவரை வாங்கிய போதுகூட, அது ஒரு சாதாரண தேர்வாகவே பார்க்கப்பட்டது. ஆனால், துபேவுக்கு, அது இரட்டைச் சந்தோஷத்தைப் பரிசளித்த நாள். அவரது முதல் குழந்தை அன்றுதான் பிறந்தது, கூடவே, சிஎஸ்கேவிற்காக வாங்கப்பட்டதும். ஸ்பின் பந்துகளை நன்றாக எதிர்கொண்டு ரன்களைக் குவிப்பார், மீடியம் பேஸ் பௌலர்களையும் ஓரளவு சமாளிப்பார், இதைத் தவிர்த்து இவரிடம் வேறென்ன எதிர்பார்த்துவிட முடியும்? அதிவேகப் பந்துகள் இவரைத் திணறடிக்கும், ஃபுட் வொர்க் என்பதெல்லாம் பெயரளவுக்குக் கூடக் கிடையாது. இவ்வாறுதான், பல திசைகளில் இருந்தும் இவர்மீது விமர்சனங்கள் தோட்டாக்களாகப் பாய்ந்தன. அவற்றிற்கு, ஒவ்வொரு போட்டியிலும், பதிலடி கொடுத்து வருகிறார் துபே.
சிஎஸ்கேவுக்காக ஆடியுள்ள இந்த ஐந்து போட்டிகளில், மூன்று அரை சதங்களை, துபே அடித்துள்ளார். அதிக ரன்களுக்கான பட்டியலில், பட்லருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில், 207 ரன்களோடு, 51.75 ஆவரேஜோடு, துபேதான் இருக்கிறார். லக்னோவுக்கு எதிரான போட்டியில், 30 பந்துகளில், 49 ரன்களைக் குவித்து, அணியின் ஸ்கோர், 210-ஐ எட்ட வைத்த ஹீரோவாக முதல் பாதியில் பார்க்கப்பட்டார். அதே துபே, இரண்டாவது பாதி ஆட்டத்திலேயே, சிஎஸ்கேயின் வில்லனாக ரசிகர்களால் உருமாற்றம் செய்யப்பட்டார். இரு ஓவர்களில், 34 ரன்கள் தேவை என்ற நிலையில், அனுபவமற்ற துபேயிடம் பந்து தரப்பட்டது, சிலநேரங்களில், களத்தில் நிற்கும் வீரர்கள் எதிர்பாராத, சந்திக்காத வீரர்களை பௌலிங் போட வைக்கும் முடிவு பலனளிக்கும். ஆனால் அன்று சிஎஸ்கேயின் அம்முடிவு பேக் ஃபயராக, லூயிஸும் பதோனியும், துபேயின் பந்துகளை, துவைத்துக் காயப் போட்டனர். 25 ரன்கள் தந்து, அந்த ஓவரிலேயே, போட்டிக்கு எண்ட் கார்டும் போடப்பட்டது.இது கேப்டன் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் எடுத்த முடிவின் விளைவுதான். அந்தப் போட்டியில் ஒரு ஓவர்கூட முன்னதாக வீசாத, களத்தை அறியாத வீரரிடம், 19-வது ஓவரில் பந்தைத் தந்தது, விபரீதமானது. இதற்காக அவரை வசைபாடாத வாயே இல்லை எனுமளவு, டிரோல் மெட்டீரியலாக, துபே பார்க்கப்பட்டார். 'அடுத்த கேதர் ஜாதவ்' என்றெல்லாம் கேலி செய்யப்பட்டார். இந்திய அணியில், அவருக்கு பௌலிங் வாய்ப்புத் தந்திருக்கப்பட வேண்டுமென சொல்லியிருந்த கவாஸ்கரே, நான்கு மாத இடைவெளியில், அக்கருத்தை மாற்றி, "தனது பௌலிங் திறனை அவர் மேம்படுத்தவில்லை", என காரசாரமாக விமர்சித்திருந்தார். உடைந்து போன கண்ணாடியை, துபே சுட்டிக் காட்டுவதைப் போன்ற புகைப்படத்தை, சிஎஸ்கேயின் ட்விட்டர் பக்கம் தொடருக்கு முன்னதாக வெளியிட்டிருந்தது. அதனைப் பகிர்ந்து, "இப்படித்தான் சிஎஸ்கேவை உடைத்தேன்" என அவர் சொல்வது போன்ற மீம்கள் பகிரப்பட்டன.
முதல் பாதியில் ஹீரோ, இரண்டாவது பாதியில் வில்லன் என்பது, ஒருவரை மனதளவில் நடுங்க வைத்து பலவீனமாக்கும். ஆனால், துபே வாழ்வில் சந்தித்துள்ள சவால்கள் அவரைப் பக்குவப்படுத்தி இருக்கு வேண்டும். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், இக்கட்டான நிலையில் இருந்த அணிக்காக ஆடியவர், தோனியுடன் கட்டமைத்த பார்ட்னர்ஷிப்பில், முந்தைய போட்டியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் மொத்தத்தையும் மறக்கடித்தார். 30 பந்துகளில், 57 ரன்களை விளாசினார். ஸ்பின் பந்துகளை மட்டுமே விளாசுவார் என்ற வாக்கியத்தை எதிர்மறையாக்கி, ரபாடாவின் ஓவரில், லாங் ஆனில் ஒன்று லாங் ஆஃபில் ஒன்று என வாண வேடிக்கையால் பிரம்மிப்பூட்டினார். மீதமிருந்த பத்து வீரர்களும் இணைந்து, 65 ரன்களை எடுத்திருக்க, துபே ஒருவரே, 57 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டிதான், வெறுப்பு திரையிட்டிருந்த கண்களைக் கசக்கி, சிஎஸ்கே ரசிகர்களை, மறுபடியும் நேசத்தோடு அவரைப் பார்க்க வைத்தது.
ஆனாலும், அவரை சூப்பர் ஹீரோவாக, சிஎஸ்கே ரசிகர்களைக் கொண்டாட வைத்து விட்டது, ஆர்சிபிக்கு எதிரான போட்டி. 6.4 ஓவர்களில், அணி, 36/2 என அணி அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. களமிறங்கிய துபேவுக்கு, முழு ஆதரவும், மறுபுறம் இருந்த உத்தப்பாவிடமிருந்து கிடைத்துக் கொண்டேயிருக்க, ஹசரங்கா, மேக்ஸ்வெல் என கண்ணில்படும் பௌலர்களை எல்லாம் விளாசினார். சுழலைத்தானே சுருட்டுவார் என பார்த்தால், சிராஜ், ஹாசில்வுட், ஆகாஷ் என அனைவருக்கும் அதே வைத்தியம்தான். எட்டு மெகா சிக்ஸர்கள் அவரை எட்டாத உயரத்திற்கு எடுத்துப் போய்விட்டன. 206.5 என்னும் ஸ்ட்ரைக்ரேட், அடிபட்ட பந்தின் கதையை, பலநாள் பேசும். அவரது பீஸ்ட் மோடால்தான், 216 ரன்கள் வரை அணியின் ஸ்கோர் எகிறியது. ஐந்தே ரன்களில் சதத்தைத் தவறவிட்டாரெனினும், பலநேரங்களில், அடிக்கப்பட்ட 100-களை விட, அதைத் தவறவிட்ட 90-களுக்கு மதிப்பு அதிகம். அத்தகைய இன்னிங்க்ஸ்தான் இது.
மிடில் ஓவர்கள் வரை இவரை பாதுகாத்துக் கொண்டாலே, அதன்பின் இவரது ஆட்டம் அதிபயங்கரமானதாக இருக்கும் என போட்டி தொடங்கும் முன்பே கணிக்கப்பட்டது. அதனை உண்மை என நிருபித்துள்ளார் துபே. போட்டியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதிக ரன்களைக் குவித்த வீரராக, மிடில் ஓவர்களில், 151 ரன்களோடு, துபே, இத்தொடரில், முதல் இடத்தில் இருக்கிறார். 'மருந்தால் ஆறாத காயம்கூட மறந்தால் ஆறிவிடும் என்போம். லக்னோவுக்கு எதிரான போட்டியில் நடந்த விஷயத்தை மறந்தே விட்டனர், சிஎஸ்கே ரசிகர்கள். துபே மறக்கடித்து விட்டார்.
டெத் ஓவர்களில், பவர் பிளேக்களில் காட்டப்படும் அதிரடியைவிட, மிடில் ஓவர்களில் காட்டப்படும் தீரமும் ஜாலமும்தான், ஓரிடத்தில்கூட சலிப்புத் தட்டாமல், போட்டியின் விறுவிறுப்பை பலமடங்காக்கும். அதனை துபே தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.