Published:Updated:

கொரோனா அச்சம், பயோபபுள் அழுத்தம் என வெளியேறும் கிரிக்கெட் வீரர்கள்... தொடருமா IPL?

IPL
IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இப்போது மொத்தமே 4 வெளிநாட்டு வீரர்கள்தான் இருக்கிறார்கள். RCB அணியிலும் அந்த எண்ணிக்கை ஆறாகிவிட்டது. ஒருவேளை மற்ற நாட்டு வீரர்களும் விலக நேர்ந்தால், தொடரின் கடைசி கட்டம் ‘இந்தியன்’ பிரீமியர் லீகாகவே நடக்கலாம்!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் வீரர்கள் ஒவ்வொருவராக விலகிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய வீரர் அஷ்வின் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியேற, நேற்று மட்டும் 3 ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலை வீரர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இதன் விளைவாக ஐபிஎல் தடைபடுமா, இன்னும் எத்தனை வீரர்கள் இப்படி விலகுவார்கள்… கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதில் நேற்றைய எண்ணிக்கை மட்டும் 3,52,991. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த அறிகுறி தெரிந்துவிட்டதால், ‘Cluster Caravan’ முறையைக் கையில் எடுத்து போட்டிகளை குறைந்த மைதானங்களில் நடத்துவது, எந்த அணிக்கும் ‘ஹோம் கேம்’ இல்லாமல் அட்டவணை வெளியிடுவது என சில மாற்றங்களை செய்தது IPL நிர்வாகம்.

தொடருக்கு முன்பே வெளியேறிய வீரர்கள்

கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே வீரர்கள் பயோ பபுள் சூழலுக்குப் பழகிவிட்டதாலும், உள்ளூர் போட்டிகளுக்கும் அந்த முறை பின்பற்றுக்கொண்டிருந்ததாலும், அதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. இருந்தாலும், 2020 IPL தொடருக்குப் பிறகு சர்வதேச போட்டிகளுக்கும் தொடர்ந்து பபுளிலேயே இருந்துகொண்டிருந்ததால் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே சில வெளிநாட்டு வீரர்கள் IPL தொடரிலிருந்து விலகினார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஷ் ஃபிலிப்பே சொந்த காரணங்களுக்காக விலகுவதாக மார்ச் மாதமே அறிவித்தார். சில தினங்கள் கழித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகினார். போட்டிகள் தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியாவிலேயே இருக்கப்போவதாக அறிவித்தார்.

Josh Hazlewood
Josh Hazlewood

“கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பபுள், குவாரன்டைன் என்றுதான் நாட்கள் கழிந்துகொண்டிருக்கிறது. அதனால், ஓய்வு வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்து நீண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடர், வங்கதேச டி20 தொடர்கள் வருகின்றன. அதன்பிறகு டி-20 உலகக் கோப்பை, ஆஷஸ் என்று மிகப்பெரிய தொடர்கள் இருக்கின்றன. அப்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக இருப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” என்றார் ஜாஷ் ஹேசில்வுட்.

கடந்த IPL தொடருக்கு முன்பே ஆஸ்திரேலிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அதன்பிறகு, ஒரு வருடம் போட்டிகள் நடக்கவில்லை என்பதால், வருமானம் ஈட்ட இடைவெளி இல்லாமல் போட்டிகள் நடத்திக்கொண்டே இருந்தார்கள். அப்படி தொடர்ந்து போட்டிகள் நடத்தியதன் விளைவாக, சோர்ந்துபோன வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

2 நாள்களில் 4 வீரர்கள் அவுட்!

போட்டிகள் தொடங்கிய சில நாள்களிலேயே பபுள்களில் இருந்து சோர்ந்துபோன ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் லயம் லிவிங்ஸ்டன் உடனடியாக இங்கிலாந்து திரும்பினார். இப்படி வெளிநாட்டு வீரர்கள் வெளியேறிக்கொண்டிருக்க, தன் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பதால், அவர்களோடு உடனிருப்பதற்காக தொடரிலிருந்து வெளியேறுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு ட்விட்டரில் பதிவிட்டார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

கடந்த சில நாள்களாக அதிகரித்துக்கொண்டிருக்கும் மரண எண்ணிக்கை வீரர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நேற்று காலை, ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை தான் நாடு திரும்புவதாக அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே RCB அணிக்காக ஆடிவரும் சக ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகியோரும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

“இந்தியர்களின் பார்வையில் யோசித்தால், மக்கள் மருத்துவமமையில் சேர்வதற்கே கஷ்டப்படும்போது, எப்படி இந்த அணிகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் IPL நடத்தமுடிகிறது என்ற கேள்வி எழுகிறது.”
ஆண்ட்ரூ டை

2020 IPL சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் விளையாடத் தொடங்கிவிட்டன. சுமார் ஏழெட்டு மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் நடக்காமல் வருவாய் பாதித்ததால், ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் அதன்பிறகு தொடர்ந்து போட்டிகள் நடத்திக்கொண்டே இருந்தன. இடையே, உள்ளூர் போட்டிகளும் நடந்துகொண்டிருந்தன. அதனால், வீரர்களுக்கு இடைவெளியோ ஓய்வோ இல்லாமலேயே இருந்தது. இப்போது, இந்தியாவில் நிலைமை மோசமாகிக்கொண்டிருப்பதால், உடல் சோர்வோடு சேர்ந்து உளவியல் ரீதியாகவும் அவர்கள் நெருக்கடியை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

IPL நடக்கவேண்டுமா?

ஆண்ட்ரூ டை கேட்டிருக்கும் கேள்வி சரியானதுதான். ஒருபக்கம் வாழ்வாதாரத்துக்கும், வாழ்வுக்கு ஆதாரமான ஆக்ஸிஜனுக்கும் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் அணிகளும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் லட்சங்களில், கோடிகளில் செலவு செய்துகொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாகவும் இங்கு பாதிப்பு இருக்கும்போது இது நிச்சயம் அநாவசியமாகத்தான் தெரியும்.

ஒரு IPL போட்டியில் கொடுக்கப்படும் விருதுகளும், பரிசுத் தொகையும்

Man of the Match - ₹ 1 லட்சம்
Most Valuable Asset of the Match - ₹ 1 லட்சம்
Power Player of the Match - ₹ 1 லட்சம்
let’s crack it Sixes - ₹ 1 லட்சம்
Game changer of the Match - ₹ 1 லட்சம்
Super Striker of the Match - ₹ 1 லட்சம்
Perfect Catch of the Match - ₹ 1 லட்சம்

இப்படி செலவு செய்யும் நிறுவனங்கள் இதுவரை கொரோனாவுக்கு எதுவும் செய்யவில்லை. அதேசமதம், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்ஸிஜன் கொள்முதலுக்காக 50 ஆயிரம் டாலர் (சுமார் 40 லட்ச ரூபாய்) கொடுத்திருக்கிறார். ஒரு தனி நபர் இப்படியொரு பங்களிப்பைக் கொடுத்திருக்கும்போது, மற்ற இந்திய வீரர்களோ, நிறுவனங்களோ, அணி உரிமையாளர்களோ கொடுக்காமல் இருப்பது இன்னும் விவாதங்களை ஏற்படுத்தும். எந்த பங்களிப்பும் செய்யாமல் தொடரைத் தொடர்வது நிச்சயம் கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும்.

அதேசமயம், உளவியல் ரீதியாக யோசித்தால், இதுபோன்ற ஒரு தொடர் நடப்பது நல்லதுதானோ என்றும் யோசிக்கலாம். “மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கும், அவர்களின் மனச்சோர்வைப் போக்குவதற்கும் விளையாட்டு உதவும் என்றால், இந்தத் தொடர் நடப்பது சரிதான்” என்று அதே ஆண்ட்ரூ டை சொல்லியிருக்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்ட்டிங், “பபுளில் இருப்பது ஒருவகையில் பாதுகாப்பானது” என்று சொல்லியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் அதே கருத்தைத்தான் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் நாதன் கூல்டர் நைலும் தெரிவித்திருக்கிறார். வீரர்கள் இப்படி பாதுகாப்பாக உணர்ந்தால், ரசிகர்களுக்கான ஆசுவாசமாக இருக்கும் இந்த IPL தொடர் நடப்பது சரியான விஷயம்தான். ஆனால், அவர்கள் பாதுகாப்பில் இன்னும் அதிகம் IPL அணிகள் மெனக்கெடவேண்டும். பாதுகாப்பைத் தாண்டி, அவர்கள் உளவியல் ரீதியாக சோர்வடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பது அவசியம்.

IPL தொடருமா?

IPL தொடர வேண்டுமா என்ற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும். தொடருமா என்று யோசித்தால், நிச்சயம் தொடர்ந்து நடைபெறும். “போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று BCCI தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். போட்டியை நடத்தவேண்டும் என்ற கிரிக்கெட் சங்கத்தின் தேவையும், அரசின் தேவையும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கிறது. இன்று தங்களைத் தாக்கும் மக்களின் கவனத்தை ஓரளவுக்கேனும் திசைதிருப்ப இதுபோன்ற ஒரு விஷயம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதனால், எக்காரணம் கொண்டும் இதை அவர்கள் நிறுத்தப்போவதில்லை.

இன்னும் வீரர்கள் விலகுவார்களா?

இதுவரை கடந்த 2 மாதங்களில் 8 வீரர்கள் IPL தொடரிலிருந்து விலகியிருக்கிறார்கள். உடல் ரீதியாக சோர்ந்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் மன ரீதியாகவும் சோர்வடையத் தொடங்கிவிட்டார்கள். “நான் எப்படி ஆஸ்திரேலியா திரும்புகிறேன் என்று பலரும் விசாரித்தார்கள்” என்று கூறியிருந்தார் டை. ஒவ்வொரு அணியிலும் ஆஸ்திரேலியர்கள் நிறைந்திருப்பதால், யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வெளியேறலாம்.

சன்ரைசர்ஸ், சென்னை அணிகள் மாற்று வீரர்களை முன்னமே ஒப்பந்தம் செய்துவிட்டன. இதற்கு மேல் புதிதாக வீரர்கள் வருவது சந்தேகம் என்பதால், மற்ற அணியில் இருக்கும் வீரர்களை லோன் மூலம் (இரண்டு போட்டிகளுக்கு மேல் ஆடாத வீரரை தொடரின் பாதியில் லோன் செய்துகொள்ளலாம்) வாங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது ராயல்ஸ். அந்த அணியில் இப்போது மொத்தமே 4 வெளிநாட்டு வீரர்கள்தான் இருக்கிறார்கள். RCB அணியிலும் அந்த எண்ணிக்கை ஆறாகிவிட்டது. ஒருவேளை மற்ற நாட்டு வீரர்களும் விலக நேர்ந்தால், தொடரின் கடைசி கட்டம் ‘இந்தியன்’ பிரீமியர் லீகாகவே நடக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு