Published:Updated:

IPL 2021 : ப்ரித்வி ஷா... ''சாப்பாட்டு ராமன்'' என மீம்களால் அவமானப்பட்டவன் மீண்டு எழுந்தது எப்படி?!

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

தனது பதினான்காம் வயதில், ஹாரிஸ் ஷீல்ட் அணிக்காக ஆடிய போது 546 ரன்களைக் குவித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ப்ரித்வி. அறிமுக ரஞ்சிப் போட்டியில் சதம், அறிமுக துலீப் டிராபியில் சதம், பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கேப்டனாக வெற்றி என அத்தனையும் சாதனை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தோற்பவனுக்கு தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைக்காது. தோல்வி தந்த ரணம், வலி தரும் வடுக்கள், கவிழ வைக்கிற கேலிகள், விடாது துரத்தும் கேள்விகள், தன்னுடைய திறமையைத் தன்னையே சந்தேகிக்க வைக்கிற பலவீனம் இத்தனையும்தான். இவற்றை எல்லாம் தூக்கிப் பந்தாடித் திரும்பவும் எழுந்து நிற்க, ஒரு அசாத்திய மனபலமும், பக்குவமும் வேண்டும்! இத்தனையும், வெறும் 21 வயதே ஆன ஒரு இளைஞனிடம் காணப்படுவதுதான் ஆச்சர்யம்!

ப்ரித்வி ஷா.... இவரைத்தான் அடுத்த சச்சின் என்று புகழப்பட்டவர் கடந்தாண்டு தூக்கி மிதிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து, இந்திய ஆஸ்திரேலியத் தொடர்வரை மிக மோசமாக ஆட ஹீரோ, ஸீரோவாகித் தூக்கி எறியப்பட்டார்.

''ப்ரித்வி ஷாவின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும்.. ஒரு மேட்சில் அதிக ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருந்தால், அடுத்தப்போட்டிகளுக்காக தீவிரமாக பேட்டிங் பயிற்சிகளில் ஈடுபடுவார். ஒரு சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிவிட்டால் நெட் பிராக்டீஸ்கூட செய்யாமல் உட்கார்ந்த்துவிடுவார்'' என ப்ரித்வி ஷா பற்றி சொல்லியிருந்தார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்ட்டிங். ஆனால், ரிக்கி பான்ட்டிங் சொன்ன அந்த ப்ரித்வி ஷா இப்போது இல்லை. இது வேறுமாதிரியான ப்ரித்வி என்பதை விஜய் ஹசாரே தொடங்கி நேற்றைய சிஎஸ்கேவுக்கு எதிரானப் போட்டி வரை நிரூபித்துவிட்டார் இந்த இளம் பேட்ஸ்மேன். 38 பந்துகளில், 72 ரன்களை விளாசி விஸ்வரூபம் காட்டியுள்ளார்!

தனது பதினான்காம் வயதில், ஹாரிஸ் ஷீல்ட் அணிக்காக ஆடிய போது 546 ரன்களைக் குவித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ப்ரித்வி. அறிமுக ரஞ்சிப் போட்டியில் சதம், அறிமுக துலீப் டிராபியில் சதம், பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெறும் 18 வயதில், கேப்டனாக விளையாடத் தொடங்கிய எட்டு மாதங்களுக்குள்ளாகவே அணிக்கு வாங்கித் தந்தது எனப் பொடியனாக இருந்தபோதே பல சாதனைகள் செய்தவர் ப்ரித்வி. இப்போதும் அவருக்கு வயது 21 தான்.

Prithvi
Prithvi

ப்ரித்வியை Highly Talented என்று சொல்வார்கள். அதனால்தான் டெல்லி அணி அவருக்கு கடந்த ஆண்டு தொடந்து சொதப்பினாலும் பல வாய்ப்புகள் வழங்கியது. ஆனால், வீணடித்தார் ப்ரித்வி. "உள்ளூர் போட்டிகளிலும், சர்வதேசப் போட்டிகளிலும், இந்த வீரர்தான் பந்து வீச வருகிறார், அவர் இந்த லைன் அண்ட் லென்த்தில்தான் பந்து வீசுவார் என்பதை எல்லாம் கணிக்க முடிகிறது. ஆனால், ஐபிஎல் தொடரில் ப்ளேயிங் லெவன் மாறிக் கொண்டே இருப்பதால், இங்கு விளையாடுவது சவாலானதாக இருக்கிறது" என சமாளிப்பு வார்த்தைகளால் தன்னுடைய பிரச்னையை மறைக்கப்பார்த்தார் ப்ரித்வி.

மீம்களும் ட்வீட்களும் அம்புகளாய்த் தாக்கி, அவரது தன்னம்பிக்கையையே ஆட்டம் காண வைத்தன. சாப்பாட்டு ராமன் என்பது போன்ற தரக்குறைவான விமர்சனங்களும் இதில் அடக்கம். கடந்த டிசம்பரில், இந்தியா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அடிலெய்டில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஓப்பனரான ப்ரித்வி அடித்தது முறையே 0, 4. இந்த இன்னிங்ஸோடு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் ப்ரித்வி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்பிக்கை இழந்திருந்த ப்ரித்விக்கு கைகொடுக்க பல முன்னாள் வீரர்களும் முன்வந்தனர். அதில் முக்கியமானவர் சச்சின். "முடிந்த அளவுக்கு பேட்டை, உடலுக்கு நெருக்கமாக வைத்து ஆடு. பேடுக்கும், பேட்டும் இடையில் அதிக இடைவெளி இருப்பதுதான் உன்னுடைய வீக் ஸ்பாட்!" என சச்சின் சொன்னதில் தொடங்கிப் பலரும் பல தவறுகளைச் சுட்டிக்காட்ட தன் ஃபுட்வொர்க்கில் மாற்றங்கள் கொண்டுவந்தார் ப்ரித்வி.

பல கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்கும் பேட்டிங் கோச் பிரவின் ஆம்ரே, ப்ரித்வியின் மீட்புக்கும் வந்தார். வீடியோ அனலிஸ்டுகள் மூலமாக, ப்ரித்வி பேட்டிங் செய்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் மூலமாக, கால்களை மெதுவாக நகர்த்துகிறார், பந்தைக் கணித்து உடனடியாக கால்களை நகர்த்தாமல், தாமதமாக ரியாக்ட் செய்கிறார் என்பது புரிய வந்தது.

ப்ரித்வியின் பலமே புல் ஷாட்கள்தான். முன்பு அவர் அடித்த ரன்களில், அதிக அளவிலான ரன்கள் அதன் மூலமாக வந்ததுதான். ஆனால், ஷார்ட் பால்களை ஆட அவர் திணறியதால், அவரால், தன்னம்பிக்கையோடு புல் ஷாட் ஆட முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள், இந்தத் தவறுகளை எப்படிக் களைவது என்பது குறித்து ப்ரித்விக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் டெக்னிக்கை மாற்றினார்.

IPL 2021 : ப்ரித்வி ஷா... ''சாப்பாட்டு ராமன்'' என மீம்களால் அவமானப்பட்டவன் மீண்டு எழுந்தது எப்படி?!

இதன் பலன் விஜய் ஹசாரேவில் தெரிந்தது. டெல்லிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், 105 ரன்களைக் குவித்த ப்ரித்வி, அதனைத் தொடர்ந்து வந்த போட்டிகளில் 34, 227, 36 என வரிசையாக எல்லாப் போட்டிகளிலும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிக் கொண்டே இருந்தார். புதுச்சேரியுடனான போட்டியில் இரட்டைச் சதமடித்த போதுதான் ப்ரித்வி ஷா மீது உண்மையில் அனைவர் கவனமும் திரும்பத் தொடங்கியது.

அதன் பின் நாக்அவுட் போட்டிகள்தான், ப்ரித்வியின் இன்னொரு வெர்ஷனை வெளியே கொண்டு வந்தது. காலிறுதிப் போட்டியில் 185 ரன்களைக் குவித்தவர், அரை இறுதிப் போட்டியிலோ 165 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் அடித்த ரன்கள் மூலமாக, ஒரே சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரராக, முன்னதாக மயாங்க் அகர்வால் படைத்திருந்த சாதனையை, ப்ரித்வி முறியடித்தார்.

இந்த சீசனில், வரிசையாக சதங்களை விளாசி ரன் வேட்டையாடிக் கொண்டிருந்த தேவ்தத் படிக்கலுக்கும் ஒரு படி மேலே போனார். உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில், 73 ரன்களைச் சேர்த்ததன் மூலமாக 800 ரன்களைக் கடந்து, 827 ரன்களுடன் அந்த சீசனை முடித்திருந்தார் ப்ரித்வி. விஜய் ஹசாரே தொடர் வரலாற்றிலேயே, ஒரே சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான்.

இருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் காட்டிய அதிரடியை ஐபிஎல் தொடரில், சர்வதேசத் தரமுள்ள பௌலர்களை எதிர்கொள்ளும்போது நிகழ்த்திக் காட்ட முடியுமா என்பது குறித்து நிறையவே கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கான பதிலை நேற்று தனது 72 ரன்கள் மூலமாக தந்திருக்கிறார் ப்ரித்வி.

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தவானுடன் களமிறங்கிய அவர், சாம் கரண், சஹார், தாக்கூர், மொயின் அலி என எதிர்கொண்ட எல்லோருடைய பந்தையும் அடித்து நொறுக்கிவிட்டார். சந்தித்த இரண்டாவது பந்தையே பவுண்டரிக்கு அனுப்பிய ப்ரித்வியின் ஆட்டத்தில் சந்தேகத்தின் சுவடேயின்றி, நம்பிக்கையே நிரம்பி வழந்தது. 27 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். கடந்த சீசனில் நிறைய அவமானத்தோடு முடிந்துபோன ஐபிஎல் பயணத்தை, இம்முறை வெற்றியோடு தொடங்கியிருக்கிறார் ப்ரித்வி.

ப்ரித்வியிடம் இருந்து இன்னும் பல அதிரடி சரவெடி இன்னிங்ஸ்களை எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு