ஐ.பி.எல்- 2021 என்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் ஒரு மறக்கப்பட வேண்டிய தொடர். பல ஓட்டைகளை உடைய நிலையற்ற அணி இதன் விளைவால் புள்ளி பட்டியலில் கடைசி இடம் என்பதையெல்லாம் தாண்டி களத்திற்கு வெளியிலேயும் அந்த அணியில் பல பிரச்னைகள் நடந்தேறின. அணியின் தொடக்க காலத்தில் இருந்து மிக பெரிய அரணாக விளங்கி வந்த கேப்டன் டேவிட் வார்னர் சொற்ப ஆட்டங்களில் ரன் சேர்க்க தவறியதற்காக அவரை ஹோட்டல் அறையிலேயே தங்க வைத்தது ஒன்றே இந்த அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலை நமக்குச் சொல்லி விடும்.

அடுத்த தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறவுள்ளதால் அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்டன. சன்ரைசர்ஸை பொறுத்தவரையில் அனைவரும் எதிர்பார்த்தது போல வார்னரை கழட்டிவிட்ட அணி நிர்வாகம் ரஷீத் கானையும் தக்கவைக்காதது ஆச்சரியமளித்தது. கடைசியில் கேப்டன் வில்லியம்சன், இந்திய இளம் வீரர்கள் அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோரே தக்கவைக்கப்பட்டனர். இதனால் ஒரு புத்தம் புதிய அணியை முழுமையாகக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் வரவிருக்கும் தொடருக்கான புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது அந்த அணி. இதில் பேட்டிங் பயிற்சியாளராக உலகின் தலைசிறந்த பேட்டர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மேற்கிந்திய தீவுகளின் பிரைன் லாரா அறிவிக்கப்பட்டுள்ளார். அணியின் திட்ட ஆலோசகராகவும் இவர் செயல்படுவார். பெங்களூரு அணியின் பயிற்சியாளராக சென்று தொடரில் பணிபுரிந்து வந்த ஆஸ்திரேலியாவின் சைமன் கைட்ச் தற்போது ஹைதராபாத்தின் துணைப் பயிற்சியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்னும் ஃபீல்டிங் மற்றும் ஸ்கௌடிங் பிரிலில் தமிழத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அணியின் இயக்குனராக பணிபுரிந்து வந்த டாம் மூடி தற்போது தலைமைப் பயிற்சியாளராக அறிவிக்கபட்டுள்ளார். முத்தையா முரளிதரன் வரும் ஆண்டிலும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார்.

வீரர்கள் தக்கவைப்பு, புதிய பயிற்சியாளர்களின் நியமனம் என தொடர்ந்து அதிரடி காட்டிவருகிறது சன்ரைசர்ஸ் நிர்வாகம். ஆனால் இவை அனைத்தும் விட எதிர்வரும் ஏலமே அந்த அணியின் மொத்த தலையெழுத்தையும் முடிவு செய்யும் என்பதே உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.