Ipl-2021 banner
Published:Updated:

ருத்துராஜின் ருத்ரதாண்டவம்... மூணு அடி வாங்கியாச்சு… இனி திருப்பி அடிக்கிறதுதானே ஹீரோக்கள் பாலிசி!

ருத்துராஜ் கெய்க்வாட்
ருத்துராஜ் கெய்க்வாட்

மூன்று அடிகளை வாங்கிவிட்டு கோபத்தில் வெறியில் நரம்புகள் புடைக்க ஹீரோ திருப்பிக்கொடுக்கும் அந்த ஒரு அடி மரண அடியாக இருக்கும். அதன்பிறகு, எதிரிகளால் மீண்டெழவே முடியாது.

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கென்றே எப்போதும் ஒரு தனி நியதி உண்டு. வில்லன் சோலோவாக வந்தாலும் சரி, சுமோவில் 100 அடியாட்களோடு வந்தாலும் சரி, அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து ஒரு மூன்று அடிகளை வாங்கி உதட்டோரத்தில் ஒரு சொட்டு இரத்தம் சிந்திய பிறகுதான் திருப்பி அடிப்பார்கள்.

மூன்று அடிகளை வாங்கிவிட்டு கோபத்தில் வெறியில் நரம்புகள் புடைக்க ஹீரோ திருப்பிக்கொடுக்கும் அந்த ஒரு அடி மரண அடியாக இருக்கும். அதன்பிறகு, எதிரிகளால் மீண்டெழவே முடியாது. கோலிவுட் சிட்டியை சார்ந்த அணிக்கு ஆடுவதாலோ என்னவோ ருத்துராஜ் கெய்க்வாட்டும் ஒரு அக்மார்க் தமிழ்ப்பட மாஸ் ஹீரோவை போலவே உருமாறி நிற்கிறார்.

இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் 5(8), 5(16), 10(13) என்றே ருத்துராஜ் ஸ்கோர் செய்திருந்தார். வில்லன்களிடம் மூன்று அடி வாங்கியாயிற்று. இந்த மூன்று அடிகள் கொடுத்த ரணத்தையும், வலியையும், வெறியையும் இறக்கியாக வேண்டும். இப்போது ஹீரோ திருப்பி அடித்தே தீர வேண்டும். சிக்கியது கொல்கத்தா. ஒரே அடிதான் ஹீரோ ருத்துராஜ் வில்லன்களை சிதறடித்துவிட்டார். ஒட்டுமொத்தமாக மாஸ் ஹீரோவாக உருமாறி நின்ற ருத்ராஜ் 64 ரன்களை அடித்து கொல்கத்தாவை ஓடவிட்டிருக்கிறார்.

ருத்துராஜ் கெய்க்வாட்
ருத்துராஜ் கெய்க்வாட்

இப்படி மூன்று அடிகளை வாங்கிவிட்டு திருப்பி அடிப்பது என்பதி ருத்துராஜுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த சீசனிலேயே இப்படி ஒரு சம்பவத்தை செய்திருந்தார். 2020 ஐபிஎல் சீசனில் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் டக் அவுட் ஆகியிருந்தார். ஒரு போட்டியில் 5 ரன்கள். ஒரு போட்டியில் ஸ்டம்பிங்கும் இன்னொரு போட்டியில் ரன் அவுட்டும் ஆகி விக்கெட்டை அநாமத்தாக விட்டிருப்பார். வாங்கியது மூன்றே அடிதான் என்றாலும் எழுந்தரிப்பதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. ‘’ஸ்பார்க் இல்லை... இன்டன்ட் இல்லை’’ என தோனியால் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். ஆனால், ருத்துராஜுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய பார்வையில் அது திருப்பி அடிப்பதற்காக கிடைக்கப் பெற்ற வாய்ப்பு. ஒட்டுமொத்தமாக தன்னுடைய வலி வேதனை அத்தனையையும் வெறியாக்கி ஹாட்ரிக் அரைசதங்களை அடித்தார். ப்ளே ஆஃபுக்கு தகுதிப்பெற்ற அணிகளைப் பற்றி பேச வேண்டிய நிலையில் அனைவரையும் #CSK பற்றியும் தன்னுடைய இன்னிங்ஸ்கள் பற்றியும் பேச வைத்தார் ருத்துராஜ் கெய்க்வாட்.

சிஎஸ்கேவின் அடுத்த சில சீசன்களுக்கான ஓப்பனர் இவர்தான் என்பதை தோனி அப்போதே முடிவு செய்துவிட்டார்.

கடந்த சீசனில் ருத்துராஜை யார் என்றே ரசிகர்களுக்கு தெரியாது. அவர் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், கடந்த சீசனில் ஹாட்ரிக் அரைசதங்கள் மூலம் அவர் செய்த சம்பவம் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக்கிவிட்டது. அதனால், அவர் மீது இந்த சீசனில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறியிருந்தது. ஆனால், இந்த சீசனிலும் ருத்துராஜ் முதலில் அடிகளை வாங்கினார். ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்புகள் பொய்யாய் போவதை விரும்பவில்லை. ருத்துராஜுக்கு பதிலாக பென்ச்சில் இருக்கும் சீனியர் வீரரான உத்தப்பாவை இறக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், சிஎஸ்கேவின் கேப்டன் தோனியாச்சே!

ஓடவே விருப்பமில்லாத ஒரு குதிரைக்கே கடந்த முறை வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தவர், வாங்கிய அடிக்கெல்லாம் வட்டியும் முதலுமாக திருப்பிக்கொடுக்கும் வல்லவனுக்கு வாய்ப்புக் கொடுக்கமாட்டாரா? கொடுத்தார். சிக்கியது கொல்கத்தா. வாங்கிய மூன்று அடிகளுக்கும் சேர்த்து வைத்து வெளுத்துவிட்டிருக்கிறார் ருத்துராஜ்.

ருத்துராஜின் ருத்ரதாண்டவம்... மூணு அடி வாங்கியாச்சு… இனி திருப்பி அடிக்கிறதுதானே ஹீரோக்கள் பாலிசி!

இந்தப் போட்டியிலும் முதலில் கொஞ்சம் தடுமாறவே செய்தார். ஆனாலும், பேட் கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் ருத்தராஜ் அடித்த ஒரு கவர் டிரைவ் அவர் மீதான நம்பிக்கையை உயர்த்தியது. அந்த ஷாட்டில் அப்படி ஒரு நேர்த்தியான டைமிங் இருந்தது. அதே ஓவரில் கம்மின்ஸ் வீசிய ஷாட் பாலில் ஸ்கொயர் லெக்கில் சிக்சர் அடித்திருப்பார். இந்த ஷாட்தான் ருத்துராஜ் திருப்பி அடிக்கப் போவதற்கான அறிகுறியாக அமைந்தது. ப்ரசத் கிருஷ்ணாவின் ஓவரில் மீண்டும் ஒரு கவர் டிரைவை அடித்து தனது க்ளாஸை மீண்டும் காட்டினார்.

மெதுவாக வைடாக வீசும் ரஸலின் பந்தை பொல்லார்ட் மாதிரியான பிக் ஹிட்டர்கள் அடிப்பதற்கே சிரமப்படும் வேளையில், ருத்துராஜ் ரொம்பவே சுலபமாக தனது ஆர்த்தோடாக்ஸ் ஸ்டைல் மூலம் சரியாக டைம் செய்து மிட் விக்கெட்டில் சிக்சராக்கினார். ‘’ Out of form என்பது வேறு out of runs என்பது வேறு. ருத்தராஜ் கெய்க்வாட் out of runs-ல்தான் திணறினார். அவருடைய ஃபார்ம் அப்படியேதான் இருக்கிறது’’ என கெய்க்வாட் பற்றி பார்த்திவ் பட்டேல் கூறியிருந்தார். நம்ம ஹீரோக்கு பலமில்லாம இல்ல... மூணு அடி வாங்கிட்டு திருப்பி அடிக்கணுங்கிறதுதான் அவரோட பாலிசி!


அரைசதத்தை கடந்து சிக்சர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்த ருத்துராஜ் வருண் சக்கரவர்த்தி வீசிய ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் சிக்சருக்கு முயன்று 64 ரன்களில் கேட்ச் ஆனார். உத்தப்பா குறித்த அழுத்தம், ஃபார்ம் குறித்த கேள்வி, தோனியின் நம்பிக்கை கொடுக்கும் அழுத்தம் எல்லாவற்றையும் தாண்டி ருத்துராஜ் கெய்க்வாட் செம மாஸான ஒரு இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். ருத்துராஜ் கண்களில் தெரியும் நெருப்பு குறையாமல் இன்னும் பல இன்னிங்ஸ்களை இப்படியே ஆட வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பம்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு