Published:Updated:

கம்பேக்னா இப்படி இருக்கணும்... திரும்ப வந்துட்டோம் என சிஎஸ்கே தெறிக்கவிட்ட நாள் இது! #IPL2018

Chennai Super KIngs
Chennai Super KIngs

பிராசஸ் எதுவுமே சரியாக அமையாமல், ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் ஓர் அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து கோப்பையை வெல்ல முடியுமா? முடியும் என சொல்லியடித்து, சூப்பர் கிங்ஸ் மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்ற தினம் மே 27.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் காயம் உட்பட சில காரணங்களால் ஓய்விலிருந்த பல பிளேயர்கள், மீண்டும் மீண்டும் கம்பேக் கொடுத்து பழையபடியே மிரட்டிய சம்பவங்கள் பலவற்றைப் பார்த்திருப்போம். அந்த கம்பேக் சம்பவங்கள் ஒரு தனிப்பட்ட வீரரின் உடல் மற்றும் மன பலம் சார்ந்தவை. ஆனால், ஓர் அணி கம்பேக் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. 2015 உலகக் கோப்பையில், வங்கதேசத்துடன் மோசமாக தோற்று வெளியேறிய இங்கிலாந்து அணி, கம்பேக் கொடுப்பதற்கு ஒட்டுமொத்த அணியும் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. புது வீரர்கள், புது காம்பினேஷன்களைச் சரியாக தேடிப்பிடித்து, அணியில் சேர்ப்பது மிகப்பெரிய பிராசஸ். இந்த பிராசஸ் கச்சிதமாக அமைந்தால் கம்பேக்கும் கச்சிதமாக இருக்கும். இங்கிலாந்துக்கு இந்த பிராசஸ் எல்லாம் சரியாக அமைந்தது. 2019-ல் கோப்பையை வென்றது. ஆனால், இந்த பிராசஸ் எதுவுமே சரியாக அமையாமல், ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் ஒரு அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து கோப்பையை வெல்ல முடியுமா? முடியும் என சொல்லியடித்து, சூப்பர் கிங்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற தினம் மே 27.

Dhoni
Dhoni

சூதாட்ட சர்ச்சையால் இரண்டு வருடத் தடை. ஐபிஎல்-லின் வெற்றிகரமான அணி ஒட்டுமொத்தமாக சிதறிப்போகிறது. ரெய்னாவால் குஜராத் லயன்ஸை சாம்பியனாக்க முடியவில்லை. தோனியால் ரைசிங் புனே-வை சாம்பியனாக்க முடியவில்லை. அதுவரை எல்லா சீசனின் ஃப்ளே ஆஃப்களிலும் விளையாடியிருந்த தோனி, முதல் முறையாக லீக் சுற்றோடு வெளியேறிய சோகங்கள் எல்லாம் அரங்கேறின. இந்த இரண்டு வருடமும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய ஜோஷ் எதுவும் இல்லாமல் சுமாரான சீசனாகவே கடந்து சென்றது.

ஒரு வழியாக இரண்டு ஆண்டுகள் கடந்து தடை நீங்க, ஹைடெசிபலில் காது கிழிய விசில் போட்டு குஷியாகினர் சிஎஸ்கே ரசிகர்கள். இந்த குஷியெல்லாம் ஏலம் வரைக்குதான். ஏலத்தில் வம்படியாக வயதான ப்ளேயர்களை சிஎஸ்கே அள்ளிப்போட்டது. பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத பழைய வீரர்கள், பெளலிங்கில் ஊர் பேர் தெரியாத வீரர்கள் என கோக்கு மாக்காகக் கலந்துகட்டி கலங்கடித்தது சிஎஸ்கே-வின் காம்பினேஷன்ஸ். எப்போதும் சீசன் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் மும்பை - சென்னை, சென்னை - ஆர்சிபி ஃபேன் வார்கள், ட்ரோல்கள் சிஎஸ்கே-வின் 'அங்கிள்'ஸ் ஆர்மியை கன்டென்ட்டாக வைத்து ஏலத்தின்போதே வார் தொடங்கிவிட்டது. சிஎஸ்கே ரசிகர்கள் அணித் தேர்வில் கொஞ்சம் அப்செட்தான். அணி நிர்வாகம் 'வீ ஃபீலிவ் இன் தல தோனி' எனச் சொல்ல, ரசிகர்களும் தோனியை முழுமையாக நம்பினர்.

இரண்டு வருடம் கழித்து கம்பேக்காகும் முதல் ஆட்டமே சிஎஸ்கே வின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, மும்பையின் ட்ரோல் ட்வீட்கள் தடதடக்க, சிஎஸ்கே விசில்கள் பரபரக்க, வான்கடேவில் தொடங்கியது அந்தப் போட்டி. மும்பை முதல் பேட்டிங் பிடித்து 160+ டார்கெட் செட் செய்தது. சேஸிங்கில் வெற்றிகரமாக சீசனை தொடங்க வேண்டிய சென்னையின் டாப் ஆர்டர் முழுக்க சொதப்பியெடுக்க, கூடவே தோனியும் வந்த வேகத்தில் வெளியேற, 'இப்டி ஒரு மொக்க டீமா' என சிஎஸ்கே ரசிகர்களே தலையில் துண்டு போட தயாரான நிலையில், நடந்தது பிராவோவின் மேஜிக். பும்ராவின் பந்துகளைச் சிதறவிட்டு, ஒற்றை ஆளாக சிஎஸ்கே-வை தூக்கி நிறுத்தினார். கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை வைத்துக்கொண்டு நூலிழையில் வெற்றியைப் பெற்றது சென்னை. தரமான கம்பேக். டிரெஸ்ஸிங் ரூமில் டென்ஷனில் குறுக்க மறுக்க நடந்த தோனியும் ஹேப்பி. சிஎஸ்கே ரசிகர்களும் ஹேப்பி.

Chennai Super KIngs
Chennai Super KIngs

மும்பையுடனான முதல் போட்டியில் சிஎஸ்கே அவ்வளவாக செட் ஆகியிருக்கவில்லை. வீரர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரியும் அவ்வளவாக வொர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு வருடம் கழித்து புதிய ப்ளேயர்களோடு களமிறங்கும்போது இப்படியிருப்பது இயல்புதான் என்றாலும், இந்த அணி பழைய முஸ்தபா... முஸ்தபா... பிணைப்பை மீட்டுவிடுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த ஒன்றிரண்டு போட்டிகளிலேயே இதெல்லாம் சரியானதுதான் பெரிய ஆச்சர்யம்.

முதல் ஆட்டத்தில் நடந்த ஒரு மேஜிக், அந்த சீசன் முழுவதுமே சிஎஸ்கே-வுக்கு தொடர்ந்தது. அடுத்தடுத்த போட்டிகளில் அசால்ட்டாக வெற்றிபெற்று கெத்து காட்டியது. சிஎஸ்கே அணியின் பெளலிங் கோச் பாலாஜி, சிஎஸ்கே பற்றி பேசும்போது, 'தோனிக்கு எப்போதும் சிஸ்டத்தின்மீது மிகப்பெரிய நம்பிக்கை உண்டு' எனக் குறிப்பிடுவார். 6 பேட்ஸ்மேன், 5 பௌலர் இதுதான் டி20 சிஸ்டம். இதன்மீது தோனி மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அணிக்கு 6 பேட்ஸ்மேன்தான் தேவை. அவர் நம்பர் 1 பேட்ஸ்மேனாகவோ உலகத்தரம் வாய்ந்த வீரராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. திறனுள்ள 6 பேட்ஸ்மேன்கள் இருந்தால் மட்டும் போதும். இதே டெக்னிக்தான் பெளலிங்கிலும். தோனி சிஸ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, கொடுத்த வாய்ப்பை ஒவ்வொரு வீரரும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். 'எல்லாருமே மேட்ச் வின்னரா இருந்தா என்னப்பா பண்றது...' என்கிற அளவுக்கு ப்ளேயிங் லெவன் முழுவதும் மேட்ச் வின்னர்கள். ஒரு ஆட்டத்தில் பிராவோ வெளுத்து வாங்கினால் அடுத்த ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு, வாட்சன், தோனி, டுப்ளெஸ்சி என ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொரு ப்ளேயர் முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டு துவம்சம் செய்தனர்.

Dhoni, Raina
Dhoni, Raina

விசாகப்பட்டினத்தில் சன்ரைசர்ஸுக்கு எதிராக அம்பத்தி ராயுடு அடித்ததெல்லாம் மரண அடி. அதேபோல பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 190+ டார்கெட்டை அம்பத்தி ராயுடு+தோனி பார்ட்னர்ஷிப் போட்டு சேஸ் செய்த விதம், மாஸ்டர் க்ளாஸ். டி20 சேஸிங்கில் எப்படி இன்னிங்ஸை கட்டமைத்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதற்கு தோனியின் அந்த இன்னிங்ஸை பாடமாக்கலாம். வழக்கமாக ஐபிஎல்-களில் ப்ளே ஆஃப்பை நெருங்க நெருங்கத்தான் தோனி பேட்டிங்கில் வேகமெடுப்பார். ப்ளே ஆஃப் களில் தோனியின் ஆவரேஜ்களைப் பார்த்தால் இது புரியும். ஆனால், இந்த சீசனில் முதலில் இருந்தே பொறுப்பாக பல சிறப்பான தரமான இன்னிங்ஸ்களை ஆடியிருப்பார். மும்பையின் ஸ்டார் ப்ளேயர்களுக்கு மத்தியில் வெளிச்சம் பெறாமல் இருந்த அம்பத்தி ராயுடு சிஎஸ்கே-வுக்கு வந்த பிறகு, இந்த சீசனில் கலக்கியெடுத்தார். பௌலிங்கில் தீபக் சாஹர் இந்திய அணிக்கு தோனி ஆசி வழங்கி அனுப்பிவைத்த அற்புத கண்டுபிடிப்பு. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொரு ப்ளேயர் அசரடிக்க, வழக்கம் போல இந்த சீசனிலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெற்றுவிட்டது.

இறுதிப் போட்டிக்கு முன்பாகவே ப்ளே ஆஃப்போடு சேர்த்து மூன்று முறை சன்ரைஸர்சை காலி செய்திருந்தது சிஎஸ்கே. இருந்தாலும் சன்ரைசர்ஸின் அந்த பௌலிங் ஸ்குவாட் அந்த சீசனில் வெறித்தனமாக ஸ்கோர் செய்துகொண்டிருந்தது. பல ஆட்டங்களில் வெறும் 130-140 ஸ்கோரையெல்லாம் டார்கெட்டாக வைத்து பௌலிங்கில் மாயாஜாலம் காட்டியிருந்தது. முதல் போட்டியில், பேட்டிங் லைன்-அப் மொத்தமாக சொதப்பிய வான்கடே ஸ்டேடியத்தில் மீண்டும் சன்ரைசர்ஸின் வலுவான பௌலிங்கை சிஎஸ்கே எதிர்கொள்ளவேண்டிய நிலை. 'டோன்ட் ஒர்ரி... ஐ வில் டேக் கேர்' என ஒட்டுமொத்தமாக வாட்சன் ஒன்மேன் ஷோ காட்ட, சிஎஸ்கே தனது கம்பேக்கை கோப்பையுடன் கொண்டாடியது. மற்ற அணிகளைவிட பிளேயர்களுக்கு இடையேயான ரிலேஷன்ஷிப்பில் அதிகம் கவனம் செலுத்தும் அணி நிர்வாகமும் கேப்டனும்தான் சிஎஸ்கே -வுக்கான எனர்ஜி. 'ப்ரதர் ஃப்ரம் அனதர் மதர்' என பிராவோ தோனியைக் குறிப்பிடுவார். இந்த சீசன் மட்டுமில்லை எல்லா சீசனிலும் வீரர்களுக்கிடையேயான இந்த 'அண்ணன்... தம்பி' பாசப் பிணைப்புதான் சிஎஸ்கே-வின் வெற்றி ரகசியம்.

CSK TEAM
CSK TEAM
`லஞ்சம் கேட்டார்கள்... என் தந்தை கொடுக்க மறுத்தார்! - கோலி பகிர்ந்த டெல்லி நாள்கள்

ஸ்பெஷல் டிரெயின் பிடித்து, புனே சென்று சியர்ஸ் செய்த யெல்லோ ஆர்மி, பிராவோவின் மேஜிக்கல் இன்னிங்ஸ், தோனியின் பெஸ்ட் சேஸிங், ப்ளே ஆஃபில் செம பிரஷரில் டுப்ளெஸ்சியின் அந்த அரை சதம், இறுதிப் போட்டியில் வாட்சனின் ஒன்மேன் ஷோ எல்லாவற்றுக்கும் மேல் சிஎஸ்கே கோப்பையைக் கையில் ஏந்திய அந்தத் தருணம் என இந்த சீசனில் சிஎஸ்கே ரசிகர்கள் நினைவில் வைக்க ஏகப்பட்ட மொமென்ட்டுகள். விசில் போடுங்க மக்களே!

அடுத்த கட்டுரைக்கு