பிப்ரவரி- 13, 2022.
ஐ.பி.எல் 2022-ன் மெகா ஏலம் பெங்களூரு நகரில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நடப்புத் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. இதன் பொருட்டு, இளம் இந்திய வீரர்களுக்கான வாய்ப்புகள் இந்தாண்டு அதிகரிக்கும் என்பது அனைவரின் கணிப்பாகவும் இருந்தது. அதேபோல, ரஜித் பட்டிதரும், ஏதேனும் ஒரு அணி தன்னை ஏலத்தில் எடுக்கும் என்றே காத்திருந்தார். ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் அந்த முன்னாள் ஆர்.சி.பி வீரரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

ஆனால், வாய்ப்பு தேவதை பட்டிதரை அவ்வளவு எளிதில் கைவிட்டிருக்கவில்லை. பெங்களூரு கேம்பில் லுவ்னித் சிசோதியா என்ற வீரர் காயமடையவே தன் பழைய அணிக்காக மாற்று வீரராக மீண்டும் அழைக்கப்பட்டார் அவர். ஐ.பி.எல்லின் இந்த ஆண்டுக்கான போட்டிகள் தொடங்கின. ரஜத் பட்டிதருக்குப் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படியான ஒரு சந்தர்பபத்தில் நேற்றைய போட்டியில் விளையாடுகிறார் ரஜத் பட்டிதர். ஐ.பி.எல் ஏலத்தில் அன்-சோல்டான ரஜத் பட்டிதர் 101-வது நாளில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் அசத்தல் சதமடித்து ஆர்.சி.பி-யின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரட்சகனாக உருவெடுத்திருக்கிறார்.
இந்த ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகாததையடுத்து பட்டிதருக்கு கடந்த மே 9 அன்று திருமணம் ஏற்பாடு செய்திருந்தது அவரின் குடும்பம். இதுகுறித்து அவரின் தந்தை மனோகர் பட்டிதர் கூறுகையில் “ ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து நான் ரஜத்திடம் பேசினேன். அதுகுறித்து எந்த விதத்திலும் மனம் உடைந்துபோகவில்லை அவர். ஒவ்வொரு அணியும் தங்களுக்கென்று குறிப்பிட்ட திட்டங்களை வைத்துக்கொண்டு அதற்கேற்பதான் வீரர்களை எடுப்பார்கள். ஒருவேளை நான் அவர்களின் திட்டத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று சாதாரணமாக கூறினார். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவருக்கு திருமணம் நிச்சயித்தோம். மிக சிறிய அளவில் குறைவான விருந்தினர்களுடன் திட்டமிடப்பட்ட அந்த நிகழ்வு தற்போது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கோம் ” என்றார்.

மிக சிறந்த வீரர்கள் பலர் எப்போதும் ஆர்.சி.பி அணியில் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஓர் அணியாக ஆர்.சி.பி சிறந்ததா என்று ஒவ்வொரு சீசனிலும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கும். இந்த முறை அத்தொடர் கதையை தலைகீழாய் மாற புதிய நட்சத்திரங்கள் பலர் உருவெடுத்தனர். தனிப்பட்ட வீரர்களின் பங்களிப்பைத் தாண்டி ஓர் அணியாக செயல்பட்டு வெற்றிகள் பலவும் பெற்றது அந்த அணி. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்து மும்பை அணி மனது வைத்தால் தான் பிளே-ஆப்ஸிற்கு செல்ல முடியும் என்றிருந்த நிலையில் அந்நிகழ்வும் நடந்தது.
அடுத்ததாக நடந்த நேற்றைய எலிமினேட்டர் போட்டியிலும் டூப்ளஸி, கோலி, மேக்ஸ்வெல் ஆகிய மூவரின் பங்களிப்பு ஏதும் இல்லாமல் பட்டிதரின் கைகொடுக்க தற்போது குவாலிஃபயர்-2 போட்டிக்காக அஹமதாபாத் விமானம் ஏறியிருந்தது . அதிர்ஷ்டம் ஒரு முறை கைகொடுக்க, அன்-கேப்ட் வீரர் மறுமுறை உயிர்ப்பிக்க ஈ சாலாவை எட்ட இன்னும் இரண்டு படிகளே உள்ளன. அதற்கான முதல் படியை நாளை தாண்டுமா ஃபாப் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்.