Published:Updated:

வர்றாங்க, சிக்ஸ் அடிக்கிறாங்க, சம்பவம் செய்றாங்க... பீஸ்ட் மோடில் ஆடி சென்னையை சாய்த்த ராஜஸ்தான்!

ஃபுல், குட், ஷார்ட் என மூன்றுவிதமான லென்த்தில் போட்ட பந்துகளையும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தனர். பவர் ப்ளேயிலேயே மேட்ச் முடிந்துவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐபிஎல் என்றாலே அதிரடிதான். ஆனால், UAE-ல் நடைபெறும் இந்த இரண்டாம் பாதி சீசனில் பல போட்டிகள் தாலாட்டு பாடும் ரகத்திலேயே அமைந்திருந்தன. இந்நிலையில்தான், நேற்று ஒரு அட்டகாசமான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் மோதிய அந்த போட்டி ரசிகர்கள் எதிர்பார்த்த அத்தனை அதிரடிகளையும் உள்ளடக்கிய கொண்டாட்டமாக அமைந்திருந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருந்தாலும், ஏற்கனவே ப்ளே ஆஃபுக்கு தகுதிப்பெற்றுவிட்டதால் ரசிகர்களுக்கு இதுவொன்றும் பெரிய வலியை கொடுக்கவில்லை.

ப்ளே ஆஃபுக்கு தகுதிப்பெற வேண்டுமெனில் தோல்வியை பற்றி யோசித்துக்கூட பார்க்க முடியாத நிலையிலேயே ராஜஸ்தான் அணி இருந்தது. ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும். அதுவும் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டும் என்ற பெரும் அழுத்தத்துடன் களமிறங்கியிருந்தது.

வென்றே ஆக வேண்டும் என்ற வெறியில் அட்ரினல் ரஷ்ஷில் ஓடிய ராஜஸ்தான் அணியை சென்னை அணியால் வீழ்த்த முடியாததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது ருத்துராஜ் கெய்க்வாட்டின் சென்சுரி மட்டுமே. 60 பந்துகளில் 101 ரன்களை எடுத்திருந்தார். மேட்ச்சில் தோற்றும் 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருதை வென்றிருந்தார். இந்த சதம் மூலம் இந்த சீசனில் மொத்தமாக 508 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றுள்ளார். கடந்த சீசனில் இன்டன்ட் இல்லை...ஸ்பார்க் இல்லை என ஒதுக்கப்பட்டவர். இந்த சீசனில் அவர் இல்லையென்றால் சென்னை அணியே இல்லை என்கிற அளவுக்கு பெர்ஃபார்ம் செய்து வருகிறார். இந்த சீசனில் ருத்துராஜும் டு ப்ளெஸ்ஸியும் இணைந்து மட்டுமே 600+ ரன்களை அடித்திருக்கின்றனர். ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணியின் மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான்.

ருத்துராஜை பொறுத்தவரைக்கு தன்னுடைய நேச்சுரலான கேம் ப்ளானில் எப்போதும் மாற்றங்களை செய்வதே இல்லை. அதாவது, பவர்ப்ளேயில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் நின்று ஆடிவிட்டு மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் உள்ளே வந்தவுடன் அடித்து வெளுப்பதே அவருடைய அணுகுமுறை. இதை எந்த மைதானத்திலும் எப்படியான சூழலிலும் அவர் மாற்றி கொள்வதே இல்லை. 'Partnership is all about complimenting each other' என்று சொல்லப்படும். ருத்துராஜ் பவர்ப்ளேயில் மெதுவாகத்தான் ஆடுவார் என்பதால் முதல் 6 ஓவர்களில் அட்டாக் செய்ய வேண்டிய பொறுப்பை டூ ப்ளெஸ்சிஸ் எடுத்துக் கொள்வார். பெரும்பாலான போட்டிகளில் மிகச்சிறப்பாக அவரது ரோலை ஆடி கொடுத்துவிடுவார். இதனால் ருத்துராஜுக்கு பவர்ப்ளே அடித்து ஆடுவதற்கான தேவையே எழாது. பவர்ப்ளே முடிந்த பிறகு, ஸ்பின்னர்கள் உள்ளே வந்தவுடன் அந்த அட்டாக்கிங் ரோலை ருத்துராஜ் எடுத்துக்கொள்வார். மெதுமெதுவாக அப்படியே ஸ்ட்ரைக் ரேட்டை கூட்டி கொண்டே சென்று டெத் ஓவரில் வெடித்து சிதறுவார். நேற்று ராஜஸ்தானுக்கு எதிராகவும் அப்படித்தான் செய்தார்.

பவர்ப்ளே முடிந்த போது ருத்துராஜின் ஸ்ட்ரைக் ரேட் 100 மட்டுமே. அடுத்து மெதுவாக அட்டாக் செய்யத் தொடங்கியவர் 43 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இதன்பிறகு, சந்தித்த கடைசி 17 பந்துகளில் மட்டும் 51 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 300.
ருத்துராஜ் கெய்க்வாட்
ருத்துராஜ் கெய்க்வாட்
Chennai Super Kings

ஒரு இரயில் போலத்தான். மெதுவாக ஆரம்பித்து இன்ஜின் சூடாக சூடாக யாரும் தடுக்க முடியாத வேகத்தில் சீறிப்பாய்வார். ருத்துராஜ் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் விதத்தை பிரையன் லாரா பெரும் மகிழ்ச்சியோடு பாராட்டிக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான லெக் ஸ்பின் பௌலர்கள் கூக்ளியை மட்டும்தான் வீசுகிறார்கள். அவர்களின் பந்தை பிட்ச்சாக விடாமல் க்ரீஸை விட்டு இறங்கி வந்து பெரிய ஷாட் ஆடுகிறார். கொஞ்சம் ஷார்ட்டாக வீசினால் பேக் ஃபுட்டில் சென்று கட் ஆடுகிறார். இது இரண்டுமே இல்லையென்றால் ஸ்வீப் ஆடுகிறார். மிகச்சிறப்பாக பௌலர்களை திட்டமிட்டு எதிர்கொள்கிறார் என பாராட்டியிருப்பார்.

இப்படி ஃப்ரண்ட் ஃபுட், பேக் ஃபுட், ஸ்வீப் மூன்றிலுமே நிபுணத்துவம் பெற்றிருக்கும் வீரர்களை பார்ப்பது அரிது. இந்த மாதிரியான வீரர்களை திணறடிக்கும் வகையில் பந்து வீசுவதும் கடினம்.
க்ரீம் ஸ்வான்

என கிரீம் ஸ்வானும் கமென்ட்ரியில் பாராட்டியிருப்பார். பௌலர்களின் எல்லா ஆயுதங்களையும் எதிர்கொள்ளும் வித்தை தெரிந்த வீரராக ருத்துராஜ் இருக்கிறார். நேற்று கடைசி பந்தில் சென்சுரிக்கு சிக்சர் அடித்தே ஆக வேண்டிய சூழலில், பதற்றமே இல்லாமல் நம்பிக்கையோடு மிட்விக்கெட்டில் அடித்த அந்த ஷாட் போதும் ருத்துராஜை கொண்டாட!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ருத்துராஜ் சென்சுரியே அடித்திருந்தாலும் அது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக அமையவில்லை. காரணம், ராஜஸ்தான் ராயல்ஸின் அந்த அட்ரினல் ரஷ்...ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி. 190 ரன்கள் டார்கெட்டை 17.3 ஓவர்களிலேயே சேஸ் செய்திருந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஷிவம் துபேவும் அடித்த அந்த முரட்டுத்தனமான அரைசதம் மேட்ச்சை மொத்தமாக சென்னையிடமிருந்து பறித்துவிட்டது.

பெரிய டார்கெட் என்பதால் பவர்ப்ளேயில் எவ்வளவு அதிகமாக ஸ்கோர் செய்ய முடியுமோ செய்துவிட வேண்டும் என்பதில் ஓப்பனர்களான ஜெய்ஸ்வாலும் எவின் லூயிஸும் உறுதியாக இருந்தனர். குறிப்பாக, ஜெய்ஸ்வால் ஈவு இரக்கமின்றி வெளுத்தெடுத்தார். தீபக் சஹார் இல்லாததால் பவர்ப்ளேயில் ஹேசல்வுட்டையே சென்னை அணி பெரிதாக நம்பியிருந்தது. ஆனால், அவரைத்தான் ஜெய்ஸ்வால் டார்கெட் வைத்து அடித்தார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
Rajasthan Royals
அவர் அடித்த 50 ரன்களில் 38 ரன்கள் ஹேசல்வுட் பந்தில் மட்டுமே வந்திருந்தது. 4 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர்கள்.

பெரும்பாலானவை லெக் சைடில் மடக்கி அடிக்கப்பட்ட ஷாட்கள். லூயிஸ் தனது பங்குக்கு ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கரண் ஓவர்களில் பந்தை பறக்கவிட்டார்.

பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் 81-1 என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. பவர்ப்ளேக்கு பிறகு ஒரு பிட்ச் மேப் போடப்பட்டது. 'டே... அவன் எங்க போட்டாலும் அடிக்கிறாண்டா' வசனத்தின் புள்ளியியல் வடிவமாகவே அது இருந்தது. அதில், ஃபுல், குட், ஷார்ட் என மூன்றுவிதமான லென்த்தில் போட்ட பந்துகளையும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தனர். பவர்ப்ளேயிலேயே மேட்ச் முடிந்துவிட்டது. ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆசிஃப்பின் பந்துவீச்சில் ஒரு ஷார்ட் பாலில் எட்ஜ் ஆகி வெளியேறியிருந்தார்.

இனிமேல் கொஞ்சம் சென்னை தனது பிடியை இறுக்கலாம் என்ற நிலையில் ஷிவம் துபே உள்ளே வந்து அடுத்த ரவுண்ட்டை ஆரம்பித்தார். இந்த முறை அவர் கையில் சிக்கியது ஸ்பின்னர்கள். மொயின் அலி மற்றும் ஜடேஜா இருவரையும் க்ரீஸுக்குள் நின்ற இடத்தில் நின்றே சிக்சருக்கு தூக்கினார். இவர்களோடு சாம் கரணும் சேர்ந்து கொள்ள அவரின் பந்துகளையும் பறக்கவிட்டார்.

சாம் கரண் இந்த இரண்டாம் பாதியில் ஆடியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் கடந்திருக்கிறார். அது பேட்டிங்கில் இல்லை... பௌலிங்கில் என்பதுதான் சோகம்.
சிவம் துபே
சிவம் துபே
Rajasthan Royals

ஜெய்ஸ்வால், ஷிவம் துபே இருவரும் ஐபிஎல்-ல் தங்கள் முதல் அரைசதத்தை அடித்திருக்கின்றனர். அதுவும் சென்னைக்கு எதிராக மறக்கவே முடியாத வகையில் தரமான சம்பவமாக அரங்கேற்றி ராஜஸ்தானை வெல்ல வைத்தனர். ராஜஸ்தானின் இந்த வெற்றி மூலம் நான்காவது இடத்துக்கான போட்டியை இன்னும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரைக்கும் தங்களை தாங்களே எடைபோட்டு குறைகளை சரிசெய்து கொள்ள இந்த தோல்வி பயன்படலாம். ஏனெனில், ஓப்பனிங்கில் ருத்துராஜ், டுப்ளெஸ்சி இருவரும் அடிக்கிறார்கள், டெத் ஓவரில் ஜடேஜா அடிக்கிறார். இவர்கள் இல்லையென்றால், இவர்கள் சொதப்பினால், மிடில் ஆர்டர் பேட்டர்கள் என்ன செய்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ராஜஸ்தானுக்கு எதிராக எந்த திட்டமிடலும் இல்லாமல் ஒரு பௌலிங் மெஷின் போன்றே அனைத்து பௌலர்களும் வீசிக்கொண்டிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு யார்க்கரை கூட துல்லியமாக வீசியிருக்கவில்லை. பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லோயர் ஒன்களையே இந்த சீசனில் பெரிய ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கே பிராவோ இல்லையென்றால் ஸ்லோயர் ஒன்களுக்கு மதிப்பே இல்லை.

ராஜஸ்தானுக்கு எதிராக அப்பட்டமாக வெளிப்பட்ட இந்த குறைகளை அடுத்தடுத்த லீக் போட்டிகளில் சென்னை அணியும் களையும்பட்சத்திலேயே ப்ளே ஆஃப்பில் வெல்ல முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு