Published:Updated:

DC vs PBKS: அடித்து பழகிய டெல்லி; எல்லாமே இருந்தும் சொதப்புவது எப்படி? டெமோ காட்டும் பஞ்சாப்!

Delhi Capitals ( IPL )

தவான், மயங்க் அகர்வால், பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் என ஒரு சரவெடியான பேட்டிங் லைன் அப்பை வைத்துக் கொண்டு பஞ்சாப் தொடர்ந்து Under Perform செய்து வருவது விநோதமாக இருக்கிறது.

DC vs PBKS: அடித்து பழகிய டெல்லி; எல்லாமே இருந்தும் சொதப்புவது எப்படி? டெமோ காட்டும் பஞ்சாப்!

தவான், மயங்க் அகர்வால், பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் என ஒரு சரவெடியான பேட்டிங் லைன் அப்பை வைத்துக் கொண்டு பஞ்சாப் தொடர்ந்து Under Perform செய்து வருவது விநோதமாக இருக்கிறது.

Published:Updated:
Delhi Capitals ( IPL )
ஆரம்பிப்பதற்குள்ளேயே முடிந்தது போல இருக்கிறது டெல்லி vs பஞ்சாப் போட்டி. கொரோனா பரவல் ரணகளங்களுக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் பஞ்சாபை ஊதித் தள்ளியிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ். 116 ரன்கள் டார்கெட்டை 10.3 ஓவர்களிலேயே டெல்லி சேஸ் செய்து முடித்திருக்கிறது. மாஸ் ஹீரோக்கள் நடிக்க, பெரிய பட்ஜெட்டில் மாபெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸாகி ஊத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறது பஞ்சாப்.

எல்லாமே இருந்தும் ஒரு போட்டியில் சொதப்புவது எப்படி என்பதை ஒவ்வொரு போட்டியிலும் டெமோவாக செய்துகாட்டிக் கொண்டே இருக்கிறது பஞ்சாப்.

டெல்லி அணியே டாஸை வென்றிருந்தது. இந்த ஐ.பி.எல் தொடரில் டாஸை வென்ற எந்த கேப்டனும் இதுவரை பேட்டிங்கைத் தேர்வு செய்ததே இல்லை. ரிஷப் பண்ட்டும் இதற்கு விதிவிலக்கில்லை. பஞ்சாபே முதலில் பேட்டிங் செய்தது.

எவ்வளவு சொதப்பலாக பேட்டிங் ஆட முடியுமோ அவ்வளவு சொதப்பலாக பஞ்சாப் பேட்டிங் ஆடியது.

தவான்
தவான்
IPL
115 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்த சீசனில் ஒரு அணி எடுத்திருக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

பஞ்சாபிற்குத் தொடக்கமே... மன்னிக்கவும் தொடக்கம் மட்டுமில்லை. எதுவுமே சரியாக அமைந்திருக்கவில்லை. பவர்ப்ளேக்குள்ளேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இடது கை பேட்ஸ்மேனாக தவான் ஆடிக்கொண்டிருந்ததால் பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னரான லலித் யாதவ் கைக்கு சீக்கிரமே பந்து சென்றது. தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது பவர்ப்ளேக்குள்ளேயே 6வது பௌலருக்கு செல்வது நல்ல முடிவுதானா என ஹர்ஷா போக்ளே கமென்ட்ரி பாக்ஸில் சந்தேகத்தைக் கிளப்பியிருந்தார். ஆனால், கேப்டன் ரிஷப் பண்ட்டின் அந்த முடிவு ஏதுவான ரிசல்ட்டையே கொடுத்தது. தவானை தனது முதல் ஓவரிலேயே லலில் யாதவ் வீழ்த்தினார். லெக் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை மடக்கி அடிக்க முயன்று எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆகியிருந்தார். அடுத்த ஓவரிலேயே மயங்க், முஷ்டபிசுர் ரஹ்மானின் பந்தில் அரைகுறையாகத் தொட்டு விட்டு ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். இதற்கடுத்த பவர்ப்ளேயின் கடைசி ஓவரிலேயே அதிரடி வீரர் லிவிங்ஸ்டனும் அக்சர் படேல் பந்தில் இறங்கி வந்து ஸ்டம்பிங் ஆனார். பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே கலீல் அஹமதுவின் பந்தில் பேர்ஸ்ட்டோவும் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகியிருந்தார்.

தொடர்ச்சியாக நான்கு ஓவர்களில் நான்கு முக்கிய விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்திருந்தது. இந்த வீழ்ச்சியிலிருந்து அவர்களால் கடைசி வரை மீளவே முடியவில்லை.
Axar Patel
Axar Patel
IPL

இடையில் ஷாரூக்கானும் ஜித்தேஷ் சர்மாவும் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியிருந்தனர். ஆனால், அதுவும் மேட்ச்சை புரட்டி போடும் பெரிய பார்ட்னர்ஷிப்பாக மாறவில்லை. குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர் முடிகிற சமயத்தில் கடைசி பந்தில் பஞ்சாப் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

டெல்லிக்கு 116 ரன்கள் டார்கெட். வார்னரும் பிரித்திவி ஷாவும் ஓப்பனர்களாக இறங்கினர். அவர்கள் இந்த டார்கெட்டை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அரைமணி நேரம் நெட்ஸில் பவர் ஹிட்டிங் பயிற்சியில் ஈடுபட வந்ததை போல வெளுத்தெடுத்தனர்.

வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே பிரித்திவி ஷா மூன்று பவுண்டரிகளோடு ஆராவாரமாகத் தொடங்கினார். வார்னர் தன் பங்குக்கு ரபாடாவின் ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.

இந்தக் கூட்டணி புயல் வேகத்தில் ஆடியது. வாய்ப்பிருந்தால் பவர்ப்ளேக்குள்ளாகவே ஆட்டத்தை முடித்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனாலும் பவர்ப்ளேயில் 81 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. இந்த சீசனில் பவர்ப்ளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 20 பந்துகளில் 41 ரன்களை அடித்திருந்த பிரித்திவி ஷா ராகுல் சஹாரின் பந்தில் அவுட் ஆக, டேவிட் வார்னர் அரைசதத்தைக் கடந்தும் நின்று 10.3 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தார். டெல்லியின் ரன்ரேட் பயங்கரமாக எகிறியிருக்கும்.

Warner - Prithivi Shaw
Warner - Prithivi Shaw
IPL

பஞ்சாப் அணிக்கு இந்தப் போட்டியும் ஏமாற்றம் மிக்கதாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக, அவர்களின் பேட்டிங் அதுதான் மிகப்பெரிய பிரச்னை. நல்ல தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் பல அணிகளும் திணறிக்கொண்டிருக்கையில், தவான், மயங்க் அகர்வால், பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் என ஒரு சரவெடியான பேட்டிங் லைன் அப்பை வைத்துக் கொண்டு பஞ்சாப் தொடர்ந்து Under Perform செய்து வருவது விநோதமாக இருக்கிறது. இதற்கு அந்த அணியின் 'அடிச்சா சிக்ஸு இல்லைன்னா அவுட்டு' என்கிற அணுகுமுறையும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

அணிக்கு என்ன தேவை, இந்தச் சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பதையெல்லாம் துளி கூட யோசிக்காமல், வெறுமென அதிரடியாக எல்லைக்கோட்டை கடப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் மனநிலைதான் அந்த அணிக்கு பிரச்னை.

சூழலை உணர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைப்பதை பற்றியெல்லாம் எந்த வீரரும் யோசிப்பதே இல்லை. டெல்லிக்கு எதிராக தொடர்ச்சியாக நான்கு ஓவர்களில் நான்கு முக்கியமான பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகியிருக்கின்றனர். இந்தப் போட்டி என்றில்லை. அந்த அணி ஆடும் பெரும்பாலான போட்டிகளில் இதுதான் நிலைமை. விக்கெட் விழுந்த அடுத்த பந்திலேயே தேவையேயின்றி அடுத்த பேட்ஸ்மேனும் அட்டாக்கிங்காக ஆடுகிறேன் என விக்கெட்டை தாரை வார்த்துச் செல்வார். பாசிட்டிவ்வான அணுகுமுறையெல்லாம் ஓகேதான். ஆனால், அது சூழலை உணர்ந்து ஆடுவதாக இருக்க வேண்டும். இப்படி அதிரடியாக ஆடுகிறேன் என அவசரகதியில் விக்கெட்டுகளை இழப்பதால் வீரர்கள் ஆட வேண்டிய ரோலும் மாற்றமடைகிறது.

Livingstone
Livingstone
IPL

ஃபினிஷராக வர வேண்டிய ஷாரூக்கான் 7 வது ஓவரிலேயே க்ரீஸுக்குள் வர வேண்டி இருக்கிறது. எல்லா முக்கியமான பேட்ஸ்மேன்களும் 15 ஓவர்களுக்குள்ளேயே அவுட் ஆகிவிடுவதால், கடைசி 5 ஓவர்களை பெரும்பாலும் டெய்ல் எண்டர்கள்தான் ஆடுகிறார்கள். அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் டாப்பில் பஞ்சாப் இருக்கும். ஆனால், அந்த அதிரடிக்கு ஏற்ற வகையில் பஞ்சாப் போட்டிகளை வெல்லவே இல்லை.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அந்த அணியிலேயே தவான், மயங்க் அகர்வால் என இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற வீரர்களை போல கண்ணை மூடிக்கொண்டு அதிரடியாக ஆடும் அணுகுமுறையை இவர்கள் விரும்புவதில்லை. இவர்கள் இருவரில் ஒருவர் நின்று ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். குறைந்தபட்சம் 20 ஓவருக்கும் முழுமையாகச் சவாலளிக்கும் வகையில் பஞ்சாப் அணி பேட்டிங்காவது ஆடும்.

இதுவரையிலான போட்டிகளில் பஞ்சாப் அணி சார்பில் 6 அரைசத பார்ட்னர்ஷிப்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆறில் நான்கில் தவானோ அல்லது மயங்க் அகர்வாலோ பங்களிப்பு ஆற்றியிருக்கிறார்கள்.

இந்த இருவரில் ஒருவர் நின்று நல்ல பார்ட்னர்ஷிப்களைக் கட்டமைத்தால் மட்டுமே பஞ்சாப் அணி தங்கள் தகுதிக்கேற்ற பெர்ஃபார்மென்ஸை இனியாவது கொடுக்கும்.

மயங்க் அகர்வால் |
மயங்க் அகர்வால் |
இது ஒரு கடினமான நாள். இந்த நாளை மறந்துவிட்டு, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.
மயங்க் அகர்வால்

என பஞ்சாப் கிங்ஸின் மயங்க் அகர்வால் பேசியிருக்கிறார். தயவுசெய்து இந்த நாளை அப்படிப் போகிற போக்கில் மறந்துவிடாதீர்கள் மயங்க். ஏனெனில், ஒவ்வொரு போட்டியிலுமே பஞ்சாப் அணி, செய்த தவற்றையேத்தான் மீண்டும் மீண்டும் செய்திருக்கிறது. போட்டி முடிந்தவுடனேயே அதை மறந்துவிடுவதால் அடுத்த போட்டியிலும் அதே தவற்றைச் செய்து ஏமாற்றம் அளிக்கிறீர்கள் போல!

இந்த நாளையும் இந்த நாளின் தவறுகளையும் நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். இனியாவது நல்லது நடக்கட்டும்!